தூங்கிக்கொள்ளல் [சிறுகதை]
படுக்கையில் இருந்து எழுந்த சின்னவருக்கு முதலில் முழிப்பு தட்டவில்லை தன்னுணர்வையே அடைந்தார். மெல்லிய பதட்டம் உடலெங்குமேறக் கண்களைத் திறந்து பார்த்தார் அறை முழுவதும் கம்மியவெளிச்சம் ஊடுருவி இருந்தது. பால்க்காரனும் போய் விடியவும் துவங்கிவிட்டிருக்கிறது. நழுவிக் கிடந்த வேட்டியை சரி செய்துகொண்டு கொடுவாயில் வழிந்திருந்த நீரை புறங்கையால் துடைத்துக்கொண்டார். கண்ணில் ஒதுங்கியிருந்த பூளையை நடுவிரலால் துண்ணூரை எடுப்பதுபோல் ஒத்தியெடுத்து இடதுபக்க அறைச்சுவற்றில் தடவிவைத்தார். தான் இப்படி தூங்கிவிட்டது ஆச்சரியத்தை தராமல் நிம்மதி உணர்வைத் தரவே இதைதான் தான் விரும்பினேனா இப்படிதான் இது முடியுமென இரவே தனக்கு உள்ளூர தெரியுமா என்ற எண்ணங்கள் எழுந்தன.
இனி என்ன செய்வது நாளை கிளம்பலாம் என இன்று முழுவதும் திட்டத்தை மனதில் ஓட்டியபடி கழிக்கமுடியாது.பேசாமல் தூங்கிவிட்டால் என்ன என்ற எண்ணம் அமைதியையும் அமைதியின்மையையும் ஒரே சமயம் தூண்டிவிட்டது. தான் நடத்த போகும் செயலின் தூரமும் விளைவும் உள்நுழையமுடியா இருள் என முன்னே நின்று அச்சுறுத்தின. பேசாமல் கிளம்பியே விடலாம் என்ற எண்ணத்துடன் இரண்டு மரப்பெஞ்சுகளை சேரத்துப்போட்டு அமைக்கப்பட்டிருந்த தன் படுக்கையிலிருந்து கைகளை ஊன்றிபடி தலையையும் முதுகையும் தூக்கி எழுந்தார். கைகளால் ஒவ்வொரு காலாக எடுத்து பெஞ்சில் தொங்கப்போட்டபடி அமர்ந்து போர்வையை உடலில் சுற்றிக்கொண்டு காதைக் கூர்ந்து வீட்டின் நடமாட்டத்தை கவனித்தார்.
சின்னவரின் அறை வீட்டின் முன்கூடத்தை ஒட்டி வலதுபுறம் சிறியதாக இருந்தது. முன்கூடம் மட்டும் நாட்டுஓடு வேயப்பட்டு அடுத்து நடுவீடும் சமையல்கூடமும் தொரட்டோடு வேயப்பட்டிருந்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு நுழைய அடுத்தடுத்த நிலைக்கதவுகள். வீட்டில் இருந்து பின்னால் துண்டாக மாட்டுகொட்டாயும் வைக்கபோரும் குப்பையும், அடுத்து மரமட்டைகள் நிறைந்த கொல்லை நீண்டு கிடந்தது. வாசலில் இருந்தபடி வீட்டின் இயக்கத்தைக் கவனிக்கலாம் என்றாலும் சின்னவரின் அறைக்கதவு வழியாக முன்கூடத்தின் பாதியை மட்டுமே பார்க்கமுடியும். அறையில் இருந்த ஒரே சன்னலும் கிழண்டவீட்டை நோக்கியதாகவும் படுக்கையில் இருப்பவரின் முகத்தில் வெளிச்சம் விழுவதாகவும் அமைந்திருந்தபடியால் எப்பொழுதும் மூடியபடியே இருக்கும்.
பெரிதாக வீட்டினுளிருந்து எந்த சத்தமுமில்லை. பேரப்பிள்ளைகள் பள்ளி கிளம்ப துவங்கியிருக்கவில்லை இன்னும் தூக்கத்தில்தான் இருக்கின்றன. மாடுகள் எழுப்பும் ஒலியைவைத்து அவைகள் தண்ணிகாட்டி மாற்றிக்கட்டப்படுவதை உணர்ந்துகொண்டார். தொடர்ந்து அடுக்களையிலும் மெல்லிய பாத்திர ஒலிகள் கேட்டன. போர்செட்டில் இருந்து சின்னவன் சேகரும் வந்திருக்கவில்லை. அப்பொழுது பெரிதாக நாழி ஒன்றுமாகிவிடவில்லை என்று மனதை கிளம்ப ஆயத்தப்படுத்திக் கொண்டார்.
சின்னவன் சேகர் இப்பொழுதெல்லாம் போர்செட்டிலேயே ராத்தங்கிவிடுகிறான். குடிக்க அதுதான் இன்னும் வசதியாக இருக்கும். அதைப்பற்றி யோசித்தாலே போர்செட்டில் பிராந்தி பாட்டில்கள் குவிந்து கிடப்பது போன்ற சித்திரம்தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் சின்னவன் இல்லையென்றால் தன் பொழப்பு நாறப்பொழப்புத்தான் என சின்னவர் நினைத்துக்கொண்டதுண்டு. சின்னவன் சேகர் தான் போதைவாடையுடன் அறைக்குள் நுழைந்து மலவாளியை எடுத்துக்கொண்டுபோய் கொல்லையில் கொட்டிவிட்டு கழுவி எடுத்துவந்து மறுபடி பிளாஸ்டிக்நாற்காலியின் துளையில் பொருத்தி வைத்துவிட்டு போவான். அந்த ஒருநாள்தான் ஆசுவாசமாக இருக்கும். மீண்டும் மலம் சேர்ந்தபின் பெஞ்சில் முன்கூடத்துக்கு முகம்காட்டி அமர்ந்து கூடத்தை கடந்துசெல்பவனுக்கு நினைவூட்டவும் செய்வார், இல்லையென்றால் பொறுத்திருந்து பார்த்துவிட்டு வசவுச் சொற்களை பின்கட்டுவரை கேட்க உதிர்க்கவும் செய்திருக்கிறார். எப்படியும் நாலைந்து நாளைய மலம் வாளியினுள் நொதித்து கொண்டியிருக்கும். சின்னவரும் இது குறித்து அதிகம் யோசனை செய்திருக்கிறார். தனக்குமட்டும்தான் இது இவ்வளவு பிரச்சனையாக இருக்கிறது என்பது போல் தோன்றும். அப்பா அம்மா அம்மாச்சீ பெரியவர் என எத்தனையோ பேர் படுக்கையில் இருந்திருக்கிறார்கள் அவர்களுக்குத் தன்னளவுக்கு இது பிரச்சனையாக இருந்ததாகத் தோன்றவில்லை. இத்தனைக்கும் தன்னிடம் இந்த நாற்காலி இருக்கிறது. ஊரில் இதே சமயம் படுக்கையில் இருப்பவர்களிடம்கூட இந்த சாதனம் இருக்க வாய்ப்பில்லை. லெட்டின் இருப்பதும் சில வீடுகளில் மட்டுமாகயிருக்கும்.
மூன்று வருடங்களுக்கு முன் மகள் செண்பகத்திடம் “வெளியதெருவ போவ ரொம்ப செரமமா இருக்கு ஆயி..முட்டிய மடக்கவும்முடியல உக்காந்தா மயக்கம் கொண்டுபோயி அடிக்குது, இனிமே கம்ப ஊனிக்கிட்டு கொல்லவரைக்கும் போவமுடியுமா சொல்லு..எதோ ஒரு நாற்காலி இருக்கும்போலர்க்கு இங்குன இருந்தபடியே போறாப்பல..மேல தெரு ராசுமவன் சொன்னான் வாத்தியாரா இருக்கான்ல நம்ப பெரியவனோட படிச்சான..தஞ்சாவூர்ல இருக்கும்மாமா நீ மாப்ளையிட்ட சொல்லி ஒன்னு வாங்கியாயன் ” என்று சொல்லி அடுத்த ஆறு மாதகாலம் அவள் வரும்பொழுதெல்லாம் நினைவூட்டியபடியும் இருந்தார். அதன்பின் மாலை ஒன்றில் உட்காரும் இடத்தில் வட்டதுளையிடப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலியும், அதில் பொருத்திவைக்கும் காம்பில்லாத ஊதா வாளியும் மோட்டார்சைக்கிளில் வந்திறங்கியது. இரவு எல்லாரும் தூங்கியபின் அன்று அதில் அமர்ந்துபார்த்துக்கொண்ட சின்னவர் இனி பிரச்சனையில்லை என்றுதானிருந்தார். ஆனால் இரண்டு மாதங்கள் மட்டுமே அவரால் கொல்லைவரை கொண்டுபோய் மலத்தை கொட்டிவரமுடிந்தது பின் சின்னவனை எதிர்பார்க்கும்படி ஆகிவிட்டது. சின்னவர் திரும்பி அறைமூலையில் நாற்காலிக்குள்ளிருக்கும் மலவாளியைப் பார்த்தார். பார்த்ததும் அதிலிருந்து நாலு நாளைய மலத்தின் வாடை கிளம்பிவந்தது.
சின்னவரின் முகத்தைப் பாராது அவர் முன்னால் இருந்த மரஸ்டூலில் டீ டம்ளரை வைத்துவிட்டு இரவு சின்னவர் சாப்பிட்டாமல் வைத்துவிட்டிருந்த சாப்பாடு இருந்த பேசனை எடுத்துக்கொண்டு வீட்டினுள் போனாள் சின்னவன் சேகரின் மனைவி திலகம். அந்நிச்சையாக டீயை நோக்கி சென்ற தன் கையை தன்னிடமே இழுத்துக் கொண்டார். கருத்து எண்ணெய்ப்பிசுக்கு ஏறிக்கிடந்த தலையணையோரம் சுருட்டியிருந்த சட்டையையெடுத்து அணிந்துகொண்டு நடக்கும்பொழுது இடராமல் இருக்க வேட்டியை தூக்கி வயிற்றின் மேல் கட்டி வாரை அணிந்துகொண்டவர் கிளம்ப வேண்டாம் என்பதுபோல் தலையை சிலுப்பி மீண்டும் பெஞ்சில் சற்றுநேரம் அமர்ந்துவிட்டு பின் முடிவைமாற்றி வீட்டினுள்ளோ திண்ணையிலோ எந்த நடமாட்டமும் இல்லை என்பதை உறுதிபடுத்தி பெஞ்சின் அடியில் கிடந்த தடிக்கம்பை எடுத்துக்கொண்டு பெருமூச்சுவிட்டு அய்யனாரப்பா என்று வாய்விட்டு சொல்லி சத்தமில்லாமல் கம்பை ஊன்றி அறையை விட்டு வெளியேறினார்.
பண்பட்ட வம்பட்டியின் நிறத்தில் மினுப்போடு இருந்த தன் தடிக்கம்பை பத்துவருடங்களுக்கு முன்பு சின்னவர் கண்டுபிடித்திருந்தார். அப்பொழுது கூன் விழுந்திருக்கவில்லை ஆனால் முன்உடம்பின் எடையை இடுப்பு தாங்க மறுத்தது. நடக்கும் பொழுது, வெளிச்சதிலிருந்து இருளுக்குள்ளும் இருளிலிருந்து வெளிச்சத்துக்கும் நுழையும்பொழுது, சம்மணங்காலிட்டு சாப்பிட்டுவிட்டு கையூன்றி எழும்பொழுது என எதிர்பாராத ஆனால் பொருளுணர்த்தும் தருணங்களில் கிறுகிறுக்கும் மயக்கம் ஒன்று கண்களை இருளில் ஆழ்த்தி ஏதோ ஒரு திசையைநோக்கி ஆளைக் கொண்டுபோய் தள்ளத் துவங்கியிருந்தது. அதேபோல் சின்னவரின் வயதையொத்த எதிர்பாராத மரணச் செய்திகளும் வரத் துவங்கியிருந்தன. சின்னவர் மெல்ல வயல் வேலைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அப்பொழுது தான் பார்க்கும் ஒவ்வொரு மரத்திலும் இந்த தடிக்கம்பையே தேடினார் . பூவரசு மூங்கி வேம்பு என எந்த மரத்தின் கம்பு என அறுதியாக முடிவெடுக்கமுடியவில்லை என்றாலும் கண்ணால் பார்த்தால் இதுதான் எனக் கண்டுகொள்ளமுடியும் என்று செல்லும் இடமெங்கும் கொல்லையிலும் தெருவிலும் ஆற்றங்கரையிலும் கடைதெருச் சாலைகளிலும் தலையை தூக்கி மரக்கிளைகளையே பார்த்துகொண்டிருந்தார்.
போர்செட்டுக்கு போகும் வழியில் ஆற்றை ஒட்டிய ஆரஸ்பதிக் கொல்லையில் வெளிக்கு இருக்கபோனபோது இந்த கம்பைக் கண்டார் சின்னவர். ஒட்டுமொத்த ஆரஸ்பதி கொல்லைக்கும் நாளை தனித்த அடையாளமாக போவதுபோல் நின்றதது. வெட்டப்பட்ட பெருஆரஸ்பதியின் வேரிலிருந்து கிளம்பாமல் தனித்து மண்ணிலிருந்து கிளம்பி கிளைவிட்டுப் பிரியாமல் நின்ற அந்த குச்சியை அங்கேயே விட்டுவிட்டு போர்செட்டுக்குப் போய் அருவா எடுத்துவரக்கூட மனம் பொறுக்காமல் சருவூகள் நொருங்கி சரசரக்க அடியும் ஓட்டமுமாக போர்செட்டை நோக்கி விரைந்தார். யாரிடமும் அனுமதி கேட்காமல் ஆரஸ்பதி குச்சியின் அடியில் இருந்து அரையடி இடைவெளிவிட்டு இருபுருமும் தலா ஒருவெட்டென எந்த பிசிருமின்றி வெட்டி எடுத்து போர்செட்டுக்குக் கொண்டுசென்றார். பச்சை இலைதளிர்களைக் காம்போடு சீவி கம்பை தரையில் ஊன்றி கம்கட்டி வரை வரும்படி அளவு குறித்து வெட்டி எடுத்துக் கொண்டார். பொறுமையாக தரையில் அமர்ந்து அருவாளால் ஆரஸ்பதியின் தோலை சீவி உரித்தார், மீனின் உட்தசை வெண்மைபோலிருந்த அதனின் நிறம் தனித்துத் துளங்கித் தெரிந்தது. பச்சை மாறும்முன் கம்பில் உள்ள சின்னக் குமிழ்கனுவுகளை பிளேடால் கம்போடு மட்டமாக அறுத்து எடுத்தார். வண்டிசோடுகளில் ரோதைகள் உருவாக்கும் செம்புழுதி மண்ணை எடுத்துவந்து பூசி அதன் நிறத்தை மாற்றி வெயிலில் காயவைத்தார். பார்ப்பவர்களுக்குப் புதியது என்ற உணர்வு வரக்கூடாது என்ற சின்னவரின் எண்ணத்தால் எந்த அவசரமுமின்றி கம்பு ஆரஸ்பதி வாசத்தையும் பச்சையையும் உள்ளிழுத்துக்கொண்டு போர்செட்டில் இருந்தபடியே தயாரானது. தரையில் ஊன்றும் கம்பின் குவிந்த பகுதியில் தேயாமல் இருக்க சைக்கிள் டீயூபை வட்டமாக வெட்டி கட்டுக்கம்பியால் கட்டி போத்தலின் மூடியைப்போல் அமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். முதலில் கம்பை ஊன்றி தெருவில் நடக்கும்போது ‘என்னா சின்னவரெ..’ என்றவர்களிடம் ஆமாம் என்பதுபோல் புன்னைகைத்துவிட்டுச் சென்றார். அடுத்த சில வருடங்கள் இந்த தடிக்கம்பின் துணைக்கொண்டுதான் கடைத்தெருக்கு மகளின் வீட்டுக்கு டீ கடைக்கு என்று சென்று வந்தார். கம்பை ஊன்றி துக்க வீ்டுகளுக்குச் சென்று நாற்காலியில் அமருந்தோறும் உடல்முழுவதும் நிறைவுணர்வு ஊறி நிறைந்தது. இப்பொழுது இந்த தடிக்கம்பின் பயன்பாடு படுக்கையிலிருந்து மலவாளிவரை என்றாகி விட்டது, இதைக் கொண்டுதான் இன்று இவ்வளவு தூரத்தையும் கடந்தாக வேண்டும்.
சின்னவர் இந்தப் படுக்கைக்கு வந்தபின் வயதை எண்ணிப்பார்த்துக் கொள்வதைப்போல் தன் வாழ்நாளில் எப்போதும் செய்ததில்லை, எந்த பேச்சிலும் ‘ எம்ளத்தஞ்சு நடக்குது..வர ஆடி வந்தா எம்ளத்தியாரு ‘ என்று குறிப்பிடாமல் இருப்பதில்லை. இருபதிலிருந்து நுப்பதுவரை வயதைபற்றிய பிரக்ஞையே இருந்ததில்லை கல்யாணமான வயதும் வருடமும்கூட நினைவில்லை. ஏழுவருடங்களுக்கு மேலாக இந்த அறையில் படுக்கையில் இருக்கும் சின்னவருக்கு இரண்டுவருடங்களுக்கு முந்தைய தீவாவளியை ஒட்டி ஒரு மாதம் மட்டுமே படுக்கையிலிருந்து இறந்த தன் மனைவியின் மரணம் ‘என் சாவுல அடிச்சுகிட்டு அழுது நாடகபுண்டைய போட்டறாத ‘ என்று சொல்லிக்கொண்டு தான்தான் முதலில் இறப்போம் என தீர்மானமான கற்பனையில் இருந்தவருக்கு வியப்பாக இருந்தது. அவள் இறந்துதான் தன்னை இந்த நிலைக்கு விருப்புவெறுப்புகளுக்கு இடமற்றவனாகத் தள்ளிவிட்டாள் என்று தோன்றும்.
இந்த இரண்டு வருடங்களில் ‘குறைகளை யாரிடமும் முறையிடாமல் இருந்துவிடுவது, எப்பொழுதாவது பார்க்கவரும் மகள் மாப்பிள்ளையென யாரிடமும் பேசாமல் மரணம்வரை மெளனமாகவே இருந்து இறப்பது, டீ குடிக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டு சாவதுவரை டீ குடிக்காமலிருப்பது’ என்று எத்தனையோ சபதங்களை போட்டுக்கொண்டு நிறைவேற்ற முடியாதவராய் மனம் வெதும்பி தன்னுள்ளேயே ஒடுங்கிக்கொண்டார். பேரப்பிள்ளைகளின் செய்கைகளேக் கூட வெறுப்பையே உண்டாக்குகின்றன. ஏதாவதொரு வலுவான முடிவை எடுக்க தக்க சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பது போலத்தான் இருந்தார். வேலைகள் செய்வதாக மருமகள் திலகம் சத்தமாக அலுத்துக்கொள்வதில் தனக்காக செய்யும் வேலைகளையும் சேர்த்துகொள்வது பெரிய முடிவுகளை எடுக்கும் அளவிற்கு வாய்ப்புகள் அளிப்பதில்லை. இதுதான் சாக்கென்று தான் இந்த முடிவை எடுத்துவிட்டதாக யாரும் சொல்லிவிடக்கூடாது. எவ்வளவு சொன்னாலும் பெரும்பான்மை நாட்கள் காலையில் சாப்பிட பழையதே வருகிறது, வெறும் குழம்பை ஊற்றி ஒரு முனுக்கு கறித்துண்டு போடுகிறார்கள் என்று யாரிடம் சொல்லமுடியும்.
தாளடிக்கான களபறி துவங்க மூன்று நாட்களிருக்கும் முன்பு வாசலில் சின்னவனின் மோட்டர்சைக்கிள் சத்தம் கேட்டதும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்துகொண்டு கூடத்தைக் கடந்து செல்பவனைத் தொண்டையால் கனைத்து நெறுத்தி தன்கால்களை பார்த்தபடி சின்னவர் “களபறியன்னு பேசிகிட்டது காதுல விழுந்துச்சு..அப்ப நீ இதவொன்னும் பாத்துக்குட்டு இருக்கவாய்க்காது..அதான் அஞ்சு நாளா அப்டியே இருக்கு இத கொண்டுபோய் கொட்டியரனும்..அப்பறம் தக்குனி சுடுதண்ணி போட்டுத்தர சொல்லு குளிச்சு மாசகணக்காவுது” என்றதற்கு தலையை ஆட்டியபடி கூடத்தை கடந்து வீட்டினுள் நுழைந்தான் சின்னவன் சேகர்.
வயலில் களபறி துவங்கியும், மலமும் கொண்டுபோய் கொட்டப்படாமல் வெந்நீரும் வராமலிருந்தது சின்னவருக்கு ஆற்றாமையாக இருந்தது. இரண்டொருவருட காலமாக எந்த முடிவுமின்றி நீளும் இந்த மலவாளிப் பிரச்சனை இனிவரும் நாட்களில் இன்னும் அதிகமாகத்தான் போகிறது. வீம்பினால் முன்பு தாமே கொட்டிவிட முயற்சி செய்ததைப் போல் இப்பொழுது செய்யமுடிவதில்லை. சிரமமாக இருந்தாலும்கூட மூடியில் சணல்கட்டப்பட்ட மூத்திரப்போத்தலை ஹரிக்கேனைபோல் தூக்கிக்கொண்டு அவரே கம்பை ஊன்றிச்சென்று ரோட்டோர வேலிப்புதர்களில் ஊற்றிவிட முடியும். ஆனால் மலவாளி அப்படியில்லை . கணிசமாக மலம் சேர்ந்தபின்னால் தடிக்கம்பையும் வாளியையும் கைகளுக்குள் மாற்றியபடி வீட்டை சுற்றி மாட்டுகொட்டாயையும் கடந்து பின்பக்கம் கொல்லைக்கு எடுத்துப்போய் இதற்கென்றே கொல்லையில் இருக்கும் வம்பட்டியால் குழிபறித்துக் கொட்டி மீண்டும் குழியை மூடி வாளியைக் கழுவியெடுத்துவரும் காரியத்திற்கு அன்றாடம் சின்னவனையே எதிர்பாத்திருக்க வேண்டியிருக்கிறது.
களபறி ஆகிக்கொண்டிருக்க நடுத்தெருவில் துக்கம் ஒன்றுக்காக ஊரிலிருந்து வந்த மகள் செண்பகம் அறை முன் அமர்ந்து அப்பா என்றழைத்த பொழுது எதுவும் பேசாமல் படுக்கையில் படுத்திருந்தபடியே அசைந்துகொடுத்தார். பின் எழுந்து சற்றுநேரம் அமைதியாக அமர்ந்தபடி இருந்துவிட்டு “நல்லா இருக்கியா ஆயி..துக்கத்துக்கு வந்தியோ” என்று கேட்டு இயல்பாக இருப்பதுபோல் காட்டி மெல்ல எழுந்து படுக்கையோரம் இருக்கும் பாக்குநிற மரப்பெட்டியை திறந்து சுருக்குக் கயிறையெடுத்து அவள்முன் விட்டெறிந்தார். சின்னவனிடம் சொன்னதிலிருந்து இதுநாள்வரை காத்திருந்தவர் பேசாம சுருக்க வச்சுக்கலாம் என்ற எண்ணத்துடன் அறையினுள் கொடிகவுராகயிருந்த நைலான் கயிறை சுருக்கு முடிச்சிட்டு சுற்றி பெட்டியில் வைத்திருந்தார். வண்டி சத்தத்திற்காக காத்திருந்து முன்கூடத்தை கடந்துசெல்லும் சின்னவன் முன் சுருக்குக் கயிறை விட்டெறிந்து ‘என்ன என்னதான்டாப்பா பண்ணசொல்றியோ’ என்பதை கற்பனையால் ஓட்டிப்பார்க்கும் பொழுதே உடைந்து அழுதுவிடுவோமோ என்று பயமாக இருந்தது. இந்த இரண்டையும் செய்யாமல் தன்னுள்ளேயே அடக்கி வைத்திருந்துவிட்டு இப்படி அம்பலப்படுத்திக்கொண்டது பாரம் இறக்கிவைக்கப்பட்டது போலவும் அதேசமயம் இனி தனக்கு எந்தவாய்ப்பும் ஆயுதமும் இல்லாமல் ஆக்கிக்கொண்டு விட்டதுபோலவும் பட்டது.
“என்னாப்பா இது” என்ற செண்பகத்திடம் உடனே பதிலளிக்காமல் பெஞ்சிலமர்ந்து உடலை தளர்த்திக்கொண்டு “என்ன என்னாதான் ஆயி பண்ண சொல்ற” என்றவருக்கு சுருக்குக்கயிறைக் கண்டு எந்த அதிர்ச்சியும் அடையாத தன் மகளின் முகம்கண்டு துணுக்குற்றது. தொண்டையைச் செருமி சளியை அறைச்சுவறில் காறி துப்பிவிட்டு சின்னவர் “புண்டைல கூட புரோசமில்ல ஆயி வாழ்றது..உள்ளார வந்து பாரு அரவாளி பீ இருக்கு… அன்னைக்கே அந்த நாறமொவன்ட சொன்னன்.. இத கொண்டுபோய் கொட்டியராப்பா உன் சுன்னிக்கி புண்ணியமா போவுமுன்ன..பொழுதனைக்கும் சாரு குடியல்லதான் இருக்காரு என்னான்னு கேக்க யாருமில்ல..நான் எதாவது ஓத்திரியம் குடுக்குறனா ஆஸ்பத்திரிக்கு கீஸ்பத்திரிக்கு அலைச்சுட்டுபோங்கறனா..கண்ணுல பூள பூத்துவடியுது கண்ணுமருந்து வாங்கியார சொல்லறதக்கூட நிப்பாட்டிக்கிட்டன்.. பெரியவன் எட்லதப்ல என்ன வந்து பாக்றானா இந்தா எதாவதுன்னா வாங்கிகன்னு எதாவது குடுக்குறானா ஒண்ணுமில்ல…அதுகூட ஒண்ணும் அவசியமில்ல. இவன நான் என்னா கேக்கறேன். நாள ஆப்பாட்டாம இத கொண்டுட்டுபோய் கொட்டியராங்குறேன் தக்குனி சுடுதண்ணி கேட்டேன்..நானும் அஞ்சு நாளா இந்தாவரும் அந்தாவரும்னு பாத்துட்டு இருந்துதான் மிச்சம்..நான் என்ன வேணும்னா ஆயி சொல்றேன் இந்த கோழிசெல்லுலையும் நாத்தத்துலையும் படுத்துருக்கவனுக்குதான தெரியும்” என பெருமூச்சுகளுக்கு மத்தியில் தன்னிரக்கமும் அகங்காரமும் குரலிலும் முகத்திலும் மாறிமாறி வெளிப்பட பேசிமுடித்துவிட்டு வசைச்சொல்லோடு அறை செவற்றில் காறி துப்பிவிட்டு படுத்துக்கொண்டார். வெள்ளைச் சுண்ணாம்புசெவற்றில் மஞ்சள் காரை சளி பதிந்து வழிந்துகொண்டிருந்தது. செண்பகம் “பேசாம அங்குன எங்க வீட்டுல வந்து இருந்தா என்னப்பா” என்றதும் “ஆவுற கதைய பத்தி பேசு ஆயி” என்று பேச்சை முடித்துகொண்டார். செண்பகம் சின்னவரின் போர்வையை அலசிப்போட்டு மலவாளியை கொட்டி சுத்தம் செய்துவைத்துவிட்டு சுடுதண்ணி போட்டுத்தர சொல்லியிருப்பதாக சொல்லிவிட்டு இரவே ஊருக்கு கிளம்பிப் போனாள்.
மகள் கிளம்பிப்போன பின் சின்னவர் எதும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு அறையிலேயே நாட்களைக் எண்ணிக்கொண்டு இருந்தார். அடுத்த நான்கு நாட்களும் சுடுதண்ணியும் வராமல் அடுத்த நாலுநாளைய மலமும் வாளிக்குள் சேர்ந்திருந்தது. மாலையே இரவு சாப்பிடபோவதில்லை என்ற முடிவக்குவந்திருந்தாலும் இரவு சாப்பாடு வந்த வட்டபேசனில் இருப்பது அதே ரசம்தான் தொட்டுக்களும் இல்லை என்பதைப் பார்த்துவிட்டு சாப்பிடாமல் படுத்தார். படுக்கையில் இனி என்ன செய்வது என்ற மனத்துயரில் உடல் புரண்டு படுக்கமுடியாமல் நெடுநேரம் கிடந்தார். கிடைத்த ஏமாற்றத்தில் சுடுகாட்டுக்குச் சென்று சாவதுவரை அமர்ந்துவிடலாம் என்று முதலில் எழுந்த எண்ணம்தான் நிம்மதியை தந்து உடனே இப்பொழுதே கிளம்பிவிடலாம் என்பதுபோலிருந்தது. ஆனால் இந்த நடுசாமத்தில் கிளம்புவுது அவ்வளவு தோதாக இருக்காது உடலும் சோர்வாக இருந்தது. விடியக்காலை நாலுமணி பால்க்காரன் ஊதும் சத்தம் கேட்டதும் வெளிச்சத்தை போடாமல் கிளம்பி தயாராக இருக்கவேண்டியது. மருமகள் திலகம் கறந்துவைத்திருந்த பாலை ஊற்றிவிட்டு மீண்டும் உறங்குவாள். பால்க்காரன் அடுத்து பாலப்பாதையில் ஒருமுறை நின்று பாலை வாங்கிகொண்டு சென்றதும் தெரு இரண்டாவது துயிலாழும் சமயம் தான் சுடுகாட்டுக்கு செல்ல ஏதுவாகயிருக்கும் என்று சின்னவர் நினைத்தார். தெருவில் ஆள்நடமாட்டம் துளியும் இருக்காது. பாலப்பாதையில் எடக்கின் டீ கடையிலும் யாருமிருக்க வாய்ப்பில்லை, எடக்கும் பாலைவாங்கிக் கொண்டு வெளிச்சத்தை போட்டு கடையை திறக்க ஆரம்பித்திருப்பான். அவன் கவனித்துவிட்டால் கட்டாயம் “என்னா சின்னவர” என்று ஆச்சரியப்படுவான் அதற்கு “ஒங்கடையில காப்பி ஒன்னு குடிக்கலாம்தான்டா வந்தேன். காப்பி போடுவியோ சரி போட்டு வையி இந்தா வரேன்” என்று சொல்லிக் கடந்து போய்விடலாம். பின் அந்த நேரத்தில் வேறு யாரும் இடைமறித்து விசாரிக்க வாய்ப்பில்லை அப்படியே கேட்டாலும் “இன்னும் ரெண்டு மாசம்தான் செல்லும் அதான் ஊர ஒரு கெடுத்தம் சுத்திப் பாத்தறலாம்னு” என்று சொல்லி மொகம் கொடுக்காமல் கடந்துவிடலாம். பாலத்தை தாண்டி ஆற்றங்கரையில் ஏறிவிட்டால் எந்தப் இடருமில்லை. பூச்சிபட்டுதானிருக்கும் பேட்டரி லைட்டு ஒன்று இருந்திருக்கலாம் பரவாயில்லை கம்பை அதிர ஊன்றி நடந்தால் எதுவும் நெருங்காது. சுடுகாட்டை ஒட்டிய ஆலமரத்தடியில் சருகுகளை ஒதுக்கி அமர்ந்துகொண்டால் சாவதுவரை அங்கேயே அமர்ந்துவிடலாமென்று தூக்கம் பிடிக்காமல் அந்த சிந்தனையிலேயே உழன்றுகொண்டிருந்தார்.
இந்த யோசனை வந்ததும் படுக்கையில் சின்னவருக்கு இருப்புகொள்ளவில்லை. இரவு நடுசாமத்தை நெருங்கிவிட்டிருந்தபடியால் வீடு தூக்கத்தில் இருந்தது. படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து தரையில் திராவி தடிக்கம்பையெடுத்து கூச்சத்துக்காக கண்களைமூடியபடி உத்தேசமாக குண்டுபல்பின் பொத்தானை அழுத்தினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு மூன்று நாட்கள் இருளில் இருந்தபடி நினைவூட்டி மாற்றப்பட்ட இந்த பல்ப் பொன்னாக எரிவது இல்லை டீப்லைட்டைபோல் வெண்மையாக எரிவது. குண்டுபல்பின் வெளிச்சத்துக்கு பழக்கப்பட்ட அழுக்கு வேட்டியும் பூஞ்சியும் மலவாளியும் அறைசெவற்றில் ஒழுகி உறைந்திருக்கும் சளிதிட்டுகளும் வெள்ளை வெளிச்சத்தில் தனித்தனியாகத் தெரிந்தது, திண்ணையில் அமர்ந்து யாரிடமாவது காசு கொடுத்துவிட்டு மஞ்சளாக எரியும் குண்டுபல்பு வாங்கிவந்து பொருத்தியும் கொடுத்துவிட்டுபோகச் சொல்லவேண்டும் என்று நினைத்திருந்ததை மறந்திருந்தார் இனி அதற்கு அவசியமில்லை. பெட்டியிலிருந்து அரைக்கை சட்டை எடுத்து விரித்துப்பார்த்தார். சுருக்கத்துடன் கரைகளும் கரும்புள்ளி தெறிப்புகளும் இருந்தது இரவில் அவ்வளவாக தெரியவில்லை என்றாலும் நாளை பகலில் துளங்கித் தெரியும். சட்டையையும் பெட்டியில் இருந்து வேட்டியையும் எடுத்து சுருட்டி தலைமாட்டில் வைத்துக்கொண்டார். துண்டு ஒன்று இருந்து தோலில் கிடந்திருந்தால் தேவலாமாக இருந்திருக்கும். பெட்டியிலிருந்து பச்சைவாரை எடுத்து ஜிப்பை திறந்துப்பார்த்தார். ஐம்பதுரூபாய் தாளொன்றும் மூன்று பொடிமட்டைகளும் இருந்தது. அதையும் தலைமாட்டருகில் வைத்துவிட்டு விளக்கை அணைத்துப் படுத்தார் தூக்கம்பிடிக்க மறுத்தது.
சுடுகாட்டில் போய் நன்றாக விடிந்து வெளிச்சமேறி வருவதுவரை அமர்ந்திருந்தால் அக்கரைக்கு வயலுக்கு செல்பவர்கள் வேலையாட்கள் என நடமாட்டம் துவங்கிவிடும். என்னா ஏது என்று கேட்காமல் இருக்கமாட்டார்கள் ஆளுக்கு தகுந்தாப்ல ஒரு பதிலை சொல்லிவைக்கலாம் அல்லது மௌனமாகவே இருந்துவிடலாம். வீட்டில் சின்னவர் இல்லை என்று மருமகள் திலகம் உறுதிப்படவும் அவர் சுடுகாட்டுக்கு வந்துவிட்ட செய்தி வீட்டை எட்டவும் சரியாக இருக்கும். சின்னவன் சேகர் செய்தியறிந்து மோட்டர்சைக்கிள் சத்தத்துடன் சுடுகாட்டுக்கு வந்து அவர் அமர்ந்திருக்கும் தீர்மானத்தைக் கண்டு திரும்பி போவான் அல்லது மோட்டர்சைக்கிளை தன்னருகே பூட்டி வைத்துகொண்டு இரஞ்சும் குரலிலோ அதட்டலாகவோ “ஏறு” என்பான் இல்லையென்றால் தன்னை அடித்து அழைத்துச் செல்லவும் முயற்சிக்கக்கூடும். ஊர் கூடிவிடும் , வைத்தியை அழைத்து வந்து பேசவைப்பார்கள் அவன் “என்ன சின்னவர இது” என்பான், அதற்கு “என் புள்ளையோளுக்கு எல்லாம் லெவ்வா இருக்கட்டுன்னு தான்யா ” என்று சொல்லலாம் ஆனால் அந்த பேச்செல்லாம் எடுபடாது என்று சின்னவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. பெரியவன் பாஸ்கரன் பேசுவதாகச்சொல்லி போனைக் கொடுத்து பேசச்சொல்லி வற்புறுத்துவார்கள். மகள் செண்பகம் மோட்டர்சைக்கிளிலிருந்து இறங்கி கண்ணைத் துடைத்தபடி “வீட்டுக்கு வாப்பா மொதல்ல”என தான் ஏதோ அவமானப்படுத்திவிட்டது போல பேசக்கூடும். எல்லாரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். தனக்கென்ன வேண்டுமென்று கேட்டு காலையில் பழையதல்லாமல் சுடுகஞ்சி, மலவாளி சரியாக கொட்டப்படுதல், வெந்நீர் ஆகியவை சரியாக நடக்கும் என வாக்குறுதி அளித்து தன்னை வீட்டுக்கு அழைக்கக்கூடும். இதையெல்லாம் மீறி வைராக்கியமாக அமர்ந்துவிடமுடியுமா என்று சின்னவருக்குள் பயமேறத் துவங்கியது. தான் எதற்காகவெல்லாம் இதை யோசித்தேனோ அது தனக்கு எதிராகவே முடியும் என்பதுபோல்பட்டது. யாரேனும் இங்கிருந்து சாப்பாட்டுக்கு என்ன செய்வோம் என்று கேட்டால் என்ன சொல்வது, சின்னவனைத் தான் வாளியில் சுடுகாட்டுக்கே கொண்டுவந்து கொடுக்க சொல்லமுடியும். மீன் ஒளப்பிய அடிநீர்போல் தெளிந்தடங்கிய சின்னவர் இது ஆவாத காரியம் என்ற முடிவுக்கு வந்தார். கட்டவிழ்த்த மாடு நீர்க்கு பாயும்வேகத்திலிருந்த மனம் சுணங்கத் துவங்கியது. எல்லாருக்கும் முன்பெழுந்து நடுவீட்டில் பேண்டு வைத்துவிடலாமா என்ற எண்ணம் விகாரமாக வந்தது. அதற்குப்பின் பேசாமல் அதேபோல் எழுந்து சுடுகாட்டைக்கடந்து வயல்களைபிரித்துச் செல்லும் வண்டிபாதையில் நடந்து மகளின் வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்ற முடிவுடன் படுத்தவர்தான் பால்க்காரன் வந்துசென்றதும் வெளிச்சம் ஊறிப்பரவியதும் தெரியாமல் தூங்கிவிட்டிருந்தார்.
கம்பை ஊன்றியபடி வாசலை அடைந்து வேலிப்படலை திறக்கும்பொழுது தன்னை வீட்டினுள் யாரும் கவனிக்கிறார்களா என்று திரும்பி பார்த்தார் அப்படி எந்த அசைவுமில்லை. திரும்பி அறைக்கே போய்விடலாமா என்ற எண்ணத்தை வளர்க்காமல் படலை திறந்துகொண்டு தார்ரோட்டிலேறி நடக்கத்துவங்கினார். பொழுது சாம்பல் கருக்கலாகத்தான் இருந்தது ,கிளம்ப எந்தத் தடையுமில்லை என்பதுபோல் தன்னைக் காட்டிக்கொண்டது. பனி ரோட்டை ஒட்டிய மூங்கிப்படல் வேலிகளை ஒருபுறம்நனைத்து மறுபுறம்விட்டு சரியாகக் குழையப்படாத சீயக்காயின் இருவேறு நிறங்களைத் தந்து மரங்களின் இடைவெளியூடே புகுந்து ரோட்டையும் நனைத்திருந்தது. பனியில் நனைந்தடர்ந்த இலைகள் நுனிகளால் சொட்டுவிட்டு கொண்டிருந்தன. பழுத்திருந்த பாதங்களில் தார்ரோட்டு நுண்சல்லிகள் குத்தி ஒருகணம் ஒட்டி உதிர்ந்து தனிதனி வழிகளைத் தந்தது. இரண்டு கைகளாலும் தடிக்கம்பை பற்றிஊன்றி பெரியஊக்கின் வளைந்த முட்களைப் போன்ற தன் கவைக்கால்களிலும் மடங்காவிரல்களிலும் பாரம் போடாமல் ஒவ்வொன்றாக எடுத்துவைத்து நடந்தார்.
தெருவில் எதிர்பார்த்த அளவுக்கு பெரியதாக ஆள்நடமாட்டம் இல்லை. வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தை தவிர்த்தபடியே நடக்கவேண்டியிருந்தது. சிலவீடுகளில் மட்டும் வாசல் தெளிக்கபட்டு பின்கட்டில் வெளிச்சமும் எரிந்துகொண்டிருந்தது. வீடுகளின் கொல்லைப்புறமிருந்து மாடுகள் எழுப்பும் ஒலி தெருவை நிறைத்தது. சில வீட்டுக் கோழிகொடாப்புகள் திறக்கப்பட்டுவிட்டிருந்தன. யாராவது இடையில் நெருத்தி பேச்சுக்கொடுத்து தன் மனதின் வேகத்தை மட்டுப்படுத்திவிடுவார்களோ என்று அய்யமாக இருந்தாலும் வைத்தியின் வீட்டு திண்ணையை பார்த்தார் அவன் இல்லை. வைத்தியின் பேரன்தான் உள்த்திண்ணையில் நாற்காலிபோட்டு அமர்ந்து டீப்லைட் வெளிச்சத்தில் படித்துகொண்டிருந்தான். தன்வீட்டிலிருந்து பத்துவீடுகள் தூரம் கடந்து ரோட்டில் வடக்காகத் திரும்பி மறுபடியும் எதிர்எதிர்சாரி பத்துவீடுகளை கடந்து டீக்கடையை அடைந்தார். டீக்கடையில் எடக்குகூட இல்லை அவன் மனைவிதான் நின்றிருந்தாள். திண்ணையிலும் பெஞ்சிலும் அமர்ந்திருந்தவர்கள் பரிச்சியமான பார்வையை பார்க்கவில்லை. டீ குடித்தால் தெம்பாகத்தான் இருக்குமென்றாலும் பாலப்பாதையில் திரும்பி நடந்தார்.
பாலப்பாதையில் மணியன் மகன் மாடிவீடுகட்டி அக்கரையில் இரண்டுமா நிலமும் வாங்கியிருப்பதில் சென்ற தன் சிந்தனையை நெருத்தி மகள் வீட்டுக்கு செல்வது குறித்து நெருத்தினார். ஊரை அடைந்து மகள்வீட்டு திண்ணையில் போய் அமர்ந்தால் தன்னைப் பார்த்து “யப்பா” என்று ஆச்சரியத்துடன் அழ துவங்குவாள். பின் டீ கி ஏதேனும் போட்டு எடுத்துவருவாள், அவளிடம் “நான் சாவந்தட்டியும் இங்கனையே இருந்துக்குறன் ஆயி” என்று சொல்ல வேண்டும். திண்ணையிலேயோ பொலக்கடையுலோ படுக்கையை அமைத்து படுத்துகொள்ளலாம் வீட்டுக்குள் வந்து இருக்கச் சொன்னால் “இல்ல ஆயி” என்று மறுத்துவிட வேண்டும். அவளே சின்னவரைத் தேடவேண்டாம் என்றும் தான் அங்கு வந்துவிட்டதாக வீட்டுக்கு போன் அடித்து சொல்லிவிடுவாள். மகள் வீட்டில் லெட்டின் உண்டு என்பதால் வாளியை அதுக்குள் கொட்டிவிடலாம் ஆனால் யாரிடமாவது சொல்லி வீட்டிலிருந்து நாற்காலியையும் மலவாளியையும் எடுத்துவர மகளிடம் சொல்ல வேண்டும். கறி மீன் எதுவும் தனக்காக எடுக்காமல் வழக்கமாக செய்வதையே செய்ய சொல்லவேண்டும், தான் நாக்கிழுத்துதான் அங்கு செல்கிறேனா என்று தன்னை தானேக் கேட்டுகொண்டார். ஆனால் மாப்பிளையும் பேரப்பிள்ளைகளும் இருப்பார்கள். சின்னவருக்கு பேசாமல் அறைக்கே திரும்பி போய் அமர்ந்துவிடலாம் என்பதுபோல் வந்தது.
பாலக்கட்டையில் கைகளை ஊன்றி நின்று கண்களை இடு்க்கி தெற்கே சுடுகாட்டை நோக்கிப் பார்த்தார் சின்னவர். தூரத்தில் விழுதுகளை நீர்க்குளிறக்கி கிளைகள் விரிந்து குடையாக நின்ற ஆலமரத்திற்குள் இருந்த சுடுகாடு கற்பனையில் பார்த்ததைவிட இப்பொழுது தூரமாகத் தெரிந்தது. கரையிலும் ஓரிரு ஆள் நடமாட்டம் இருந்தது. சுடுகாட்டை அடைந்து இறக்கத்தில் இறங்கி வண்டிப்பாதையிலேயே நெடுந்தூரம் நடந்து வாய்க்காபாலத்தை தாண்டி மீண்டும் நடந்து மகளின் ஊரை அடையவேண்டும் அங்கு ஊர் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கும். கீழே ஆறு புங்கை மரப்பூ மொட்டுக்களைப் படலமாக ஏந்தி நடுவில் மட்டும் நீரோட்டத்துடன் அசைந்து சென்றது. நியாயமின்றி நதி எதிர்த் திசையில் திரும்பி ஓடுவது போல் சின்னவர் திரும்பி கம்பை ஊன்றிபடி வீட்டைநோக்கி நடந்தார். இவர்களிடம் ஏன் வெந்நீரை எதிர்பார்த்துக்கொண்டு என்று படித்துறையை நோக்கிச் சென்றவர் கீழிறங்கிச் செல்லும் படிகளைப் பார்த்துவிட்டு குளிக்கும் முடிவை கைவிட்டு சற்றுநேரம் படித்துறையிலேயே அமர்ந்து தன்னுள்ஆழ்ந்தபடி நீரசைவைப் பார்த்தார். சின்னவன் தேடி வந்துவிடுவதற்குள் நாமே அறைக்குச் சென்று அமர்ந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் கம்பை ஊன்றி எழுந்து நடந்தார்.
சற்றுமுன் கடந்துவந்திருந்த தெரு இப்பொழுது இயங்குவதுபோலவும் தன்னை கவனிப்பதுபோலவும் விநோதமாகப்பட்டது. நடுரோட்டில் நடப்பதைவிட்டு ஓரமாக ஒதுங்கிநடந்தார். சூரியன் மேலெழுந்து வெளிச்சத்தின் அடர்த்தியும் கூடியிருந்தது. இரவு சாப்பிட்டிருக்கவில்லை மயக்கம் வந்து விழுந்துவிடுவோமோ என்று பயமாகயிருந்தது, ‘எப்படியாவது வீட்ல கொண்டுபோய் சேத்தர்றா.. அய்யனாரப்பா’ என வேண்டியபடி, பொத்தான்கள் மாற்றி பூட்டப்பட்டு மேல்கீழ் எனயிருந்த சட்டை, கணுக்காலுக்கு மேலேறியிருந்த வேட்டி என தன்னைத்தானே பார்த்துக்கொண்ட சின்னவர் தன் தடிக்கம்பு தரையில் ஊன்றும் இடத்தையே பார்த்தபடி மெல்ல காலடிவைத்து நடந்துகொண்டிருந்தார். மகளுக்கு யாரிடமாவது செய்தி சொல்லிவிட்டு மோட்டர்சைக்கிள் அனுப்பசொல்லி மகள்வீட்டிற்கே சென்றுவிடுவோமா என்றும் ,தான் ஏன் இப்படி இருக்கிறோம் இவ்வளவு தூரம் நடக்க முடிந்திருக்கிறது ,அவர்களை எதிர்பார்க்காமல் அதை நீங்கள் யாரும் தொடவேண்டாம் என்று சொல்லிவிட்டு நாமே சாவதுவரை மலவாளியை கொட்டினால் என்ன என்றெல்லாம் யோசித்தாலும் மனம் தற்கொலை செய்துகொள்வதிலும் பொட்டியில் இருக்கும் சுருக்குக் கயிறிலுமே போய் நின்றது. மனதில் அதை நிகழ்த்திப் பார்த்தபடியே இருக்க, உடனே அறையுனுள் நுழைந்து தாளிட்டு தொங்கிக்கொள்ளலாம் என்று காலடி எட்ட விழுந்தது. ஆனால் வீடு இயங்கி கொண்டிருக்கும் தான் இப்படி கிளம்பிவிட்டு வந்ததை அறிந்தவர்கள் தன்னை கவனிப்பார்கள். சமயத்திற்காக காத்திருக்க வேண்டும் ஏதாவது எழுதிவைத்துவிட்டு சாகலாமா ,சுபம் என்று துவங்கலாமா “சுபம் இனி எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீங்கள் குடும்பம் நடத்தும் வகையும் எனக்குப்பிடிக்கவில்லை நான் ஏன் வாழணும்.. மேலும் நீங்கள் இருவரும் இன்னும் பங்கு பிரித்துக்கொள்ளாமல் இருப்பது சரியில்லை போர்செட்டோரம் ஒத்தாப்ல இருக்கும் பங்கை பெரியவனுக்கு பிரித்துகொடுக்கவும்.. சின்னவன் நீதான் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும்..மாப்பிள்ளையை வைத்துகொண்டு பிரிக்கவும்.
சின்னவன் உனக்கு..இப்படி குடிப்பது சரியா என்று யோசித்து பார்க்கவும் உனக்கு ஒரு பெண் இருக்கிறது..விவசாயத்தை ஒழுங்காக பார்க்கவும் உன் மகன் சிவனேசன் பத்தாம் கிளாஸ் பரிட்சை எழுதபோகிறான் நன்றாக படிக்கசொல்.. மேலும் அவனுக்கு படிப்பு ஏறுவது கொஞ்சம் சிரமம்தான் எனவே படிப்போடு இல்லாமல் அவனை வயலுக்கு அழைத்துசென்று வயல் வேலைகளைப் பழக்கவும்.
பெரியவனுக்கு.. உன்னிடம் எத்தனையோகெடுத்தம் சொல்லியாகிவிட்டது தனியார் பள்ளியோடத்து வாத்தியாருக்கு என்ன சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் மன்னார்குடியில் வாடகைக்கு வைத்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருக்கமுடியும்.. உன் மகன் எத்தனாம் கிளாஸ் படிக்கிறான் என்றுகூட தெரியவில்லை..இங்கு வந்து குடும்பத்தை வைத்துக்கொண்டு வெவசாயத்தையும் பார்த்துக்கொண்டு வேளைக்கு தினம் தினம் போய்த்துவரவும் மன்னார்குடி ஒன்றும் தூரமில்லை.
மகளுக்கு .. ஆயி என்னை நினைத்து வருந்தவேண்டாம் இது நானாக எடுத்துகொண்ட முடிவு” என யோசித்துக் கொண்டிருந்தவர் புண்ட என தார்ரோட்டின்மேல் காரி துப்பி தற்கொலைக் கடிதம் எழுதும் முடிவை கைவிடுவதைப்பற்றி யோசித்தார். பெட்டியில் வைத்திருந்த நோட்டும் பென்சிலும் இன்னும் இருக்கிறதா என்று தட்டுக்கேடாக இருந்தது.
சின்னவர் வீட்டை நெருங்க வீட்டிலிருந்து மோட்டர்சைக்கிளில் வெளிவந்த சின்னவன் சேகர் இவரை பார்த்துவிட்டு ரோட்டில் ஒரு வட்டமடித்துத்திரும்பி வீட்டுக்குள் போனான். வீடு ஒரே சமயம் இயல்பாகவும் அசாதாரணமாகவும் பட்டது. பேரன் பள்ளி கிளம்பி போய்விட்டிருந்தான் சைக்கிள் இல்லை. பேத்தி வேனுக்காக பைகளை திண்ணையில் வைத்துவிட்டு டீவிப்பெட்டி முன்னால் அமர்ந்திருந்தவள் சின்னவர் வருவதால் அதை அணைத்தாள். சின்னவர் அறைக்குள் அமர்ந்து உடலை தளர்த்திக்கொண்டு பெருமூச்சுடன் தடிக்கம்பை சாய்த்துவைத்துவிட்டு அமர்ந்தார். மனம் சுருக்கு வைத்துக்கொள்வதை கற்பனையில் ஓட்டியது. சற்றுநேரத்தில் முன்கூடத்தில் அன்னக்கூடையோடு வெளிப்பட்ட சின்னவன் அதை கொண்டுவந்து சின்னவர் அறைகதவுமுன் படையலைப்போல் வைத்தான். அரை அன்னக்கூடையளவு இருந்த பழுப்பு நீரில் அதிர்வுகள் தோன்றி அதிலிருந்து வெண் ஆவி எழுந்துகொண்டிருந்து. சின்னவர் திரும்பி அறைமூலையில் இருந்த நாற்காலியையும் மலவாளியையும் பார்த்தார்,கொட்டிக் கழுவி வைக்கபட்டிருந்தது. தலை திருப்பி ஒருகணம் சின்னவனின் கண்களை பார்த்தார் போதையில் சீலும் சிவப்புமாய் இருந்த கண்கள் பதறி இருப்பது போல் பட்டது, பார்வையை தரையில் பதித்து “திண்ணையில” என்று சொல்லி கையால் சைகை செய்தார். பெட்டியை திறந்து உள்ளங்கைக்குள் அடங்கும் சதுர கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்த்தார் சவரம் செய்யாமல் சமஅளவில் வளர்ந்த வெள்ளை முள் தாடிகள், குளிக்குமன்று சவரம் செய்வதற்காக இருந்தார் ஆனால் இப்பொழுது செய்தால் சுடுதண்ணி ஆறிவிடும். நடுமீசையிலும் மூக்கு துவாரத்திலும் பொடியின் காரை நிறமேறியிருந்து, சின்னவருக்கு காலையிலிருந்து இன்னும் பொடிபோடவில்லை என்பது ஆச்சரியமாக நினைவுக்கு வந்தது. நடக்கும்பொழுது நினைவெழுந்து ஆற்றங்கரையிலேறிப் போட்டுக் கொள்ளலாம் என்றிருந்தார் இப்பொழுது உடனே போடவேண்டும் என்பதுபோல் இருந்தாலும் குளித்து சாப்பிட்ட பின் போடலாமென்று தயார்படுத்திக்கொண்டார். பெட்டியினுளிருந்து நல்லெண்ணெய் டப்பாவையும் சீயக்காய் பொட்டலத்தையும் எடுத்து படுக்கையில் வைத்து பெட்டியைமூடி வேட்டியைக் கழற்றி கோமணத் துணியை அருணாகயிறில் சொருவி நன்றாக படுக்கையில் ஏறியமர்ந்து நல்லெண்ணெய் தேய்துக் கொள்ளத் துவங்கினார். உச்சந்தலையில் கலக்க இருந்த முடிகளூடேயும், கனிந்து தொங்கிய மார்பு, மருக்கள் நிறைந்த கழுத்து கம்கட்டிகளிலும், படுக்கையிலேயே படுத்து பட்டையிட்டிருந்த புண்களிருக்கும் கருத்த சூத்தாம்பட்டையிலும், சதைகள் நெகிழ்ந்து தொலதொலத்து தொங்கியசையும் கைசப்பைகளிலும் தொடையிலும் , நீர்கோர்த்த மொலங்கொட்டாச்சி மூட்டுகளிலும், முடிகளற்று பாம்புச்சட்டை ரேகைபோல் பாலம்வெடித்த கால் தோல்கள், விரல் இடுக்குகள் என உடல் முழுவதும் எண்ணெயைத் தேய்துக்கொண்டார். சனிக்கிழமையா அல்லது புதனாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம்வரவே அறைச்சுவறில் தொங்கும் காலண்டரை நோக்கி கண்களைச் செலுத்தினார். அது நாட்கள்விடுபட்டு தாள்கள் கிழிக்கப்படாமல் இறந்தகாலத்தின் எதோவொரு நாளை காட்டிக்கொண்டிருந்தது, விசேஷதினத்திற்காக காத்திருந்தோ அல்லது பேரப்பிள்ளைகளிடம் கேட்டோ காலத்தை சமன்செய்ய வேண்டும். எண்ணெயை உடலில் ஊறவைக்க நாழியில்லை. சுடுவிரல் நெகத்தால் தொப்புளிலிருந்து அழுக்கையும் மூக்கின் இருபுற பிறைவிளிம்புகளில் சேரும் கரும் எண்ணெய்ப் பிசுக்கழுக்கையும் சுரண்டி எடுத்தார். பின் தலையிலிருந்து உதிர்ந்துவிழும் தோல்த்துகள் திட்டுகளை சுரண்டியெடுத்து சீயக்காய் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு கம்பை ஊன்றியபடி திண்ணைக்குப் போனார். இரண்டு அன்னக்கூடைகளில் ஒன்றில் வெந்நீரும் மற்றொன்றில் விளாவும் நீருமாக இருந்தது. குளிக்கும் கப்பால் பச்சதண்ணியை மோண்டு வெந்நீரில் ஊற்றி விளாவிக் காலில்விட்டு சரிபார்த்துக்கொண்டு காலிலிருந்து தொடை பின் உடம்பு தலை என ஊற்றிக் குளித்தார்.
குளித்துமுடித்து அறைக்குள் நுழைந்து பழையவேட்டியால் துவட்டி படுக்கையில் போட்டுவிட்டு, காலை கட்டியிருந்த வேட்டியை கட்டிகொண்டபோதுதான் மரஸ்டூலில் வட்டபேசனில் தோசையும் தனியாக கறித்தட்டில் சுட்டுவிரல் குழியில் நல்லெண்ணெய் விட்ட பட்டமொளவா தொவையலும் டம்ளரில் டீயும் இருந்ததை கவனித்தார். அவர் எதிர்பார்த்திருந்தது வழக்கம்போல் பழையதையும் நார்தங்கா ஊறுகாவையோ அவிச்ச மொலவாயையோதான் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கே தோசை. படுக்கையில் அமர்ந்தபடி தலையைத்தூக்காமல் மூன்று தோசைகளைத் தின்றவர் ரோட்டாவை எடுத்து தண்ணிகுடித்துவிட்டு நாலாவது தோசைமேலேயே தண்ணியை ஊற்றி கழுவி பேசனை படக்கென ஸ்டூலில் வைத்தார். டீ யை எடுத்தார் சூடாகத்தானிருந்தது அதையும் தோசையின் மேலேயே ஊற்றினார். தோல்வி உணர்வு தன் விகாரபற்களால் கவ்விக்கொண்டது. வயிறுக்குள் தோசை அருவெருப்பாக நெளிவது போல்பட்டது. படுக்கையில் ஒருகையை ஊன்றி தாங்கியபடி மலவாளியை நெருங்கி இதை நாமே கொண்டுபோய் கொட்டிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் விரல்களை வாயுக்குள்விட்டு சத்தம்வராமல் வாந்தியெடுத்துகொண்டார். வயிற்றில் பசியும் நிறைவும் ஒருங்கே எழுந்தது. பொடியை தொடாமல்இருக்க முடியவில்லை, பொடிமட்டையை எடுத்து சுட்டுவிரலையும் கட்டைவிரலையும் குவித்து கனமாக அள்ளி உறிஞ்சுக்கொண்டாலும் சுயவெறுப்பே மேலோங்கியது. எதைக்கொண்டு திருப்தியடைவது. காலையில் இருந்து இன்னும் வெளிக்குயிருந்திருக்கவில்லை. அறைக்கதவு வரை போய் வாசலை எட்டிபார்த்தார் சின்னவனின் வண்டியில்லை, உள்வீட்டிலும் நடமாட்டமில்லை. அறைக்கதவைத் தாழிட்டு பூட்டி பெட்டியிலிருந்து சுருக்கு கயிறை எடுத்துக்கொண்டு படுக்கையில் வந்து அமர்ந்து தலையைத்தூக்கி பனைவலையை பார்த்துவிட்டு கையில் இருக்கும் சுருக்கு கயிறைப் பார்த்தார். சவரம் செய்துகொண்டு சுருக்கிட்டுகொள்ளலாமா என்ற வினோதமான எண்ணத்தைக் கடந்தார். உடல் அயர்ந்துவந்தது,பேசாமல் தூங்கலாம் என்ற எண்ணத்துடன் படுக்கையில் படுத்து தூங்கிக்கொண்டார். தாழிட்டு மூடியபடியிருந்த அறைகதவுகள் நேரம் கழிந்து மூன்றாவது உதையில் திறந்துகொண்டது. தடிக்கம்பு எங்கோ கிடந்தது. படுக்கையில் சுறுக்குகயிற்றை பற்றியபடி தூங்கிவிட்டிருந்த சின்னவர் கனவினுள்ளிருந்தார்.
*
(24-7-2019)