
பிறப்பு
1997 ஆகஸ்ட் 4 நான் பிறந்த தேதி. தமிழுக்கு ஆடி 19. எனக்கு வைக்கப்பட்ட பெயர் பிரதீப்.
குடும்பம்
அப்பா கென்னடி. அம்மா விஜயா. அப்பா வழி தாத்தா ராமச்சந்திரன், அப்பத்தா சீதாலக்ஷ்மி. அம்மா வழி தாத்தா சின்னையன், ஆத்தா கிருஷ்ணவேணி. எனக்கு மூன்று வயது இருக்கும் பொழுது என் அம்மா தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அடுத்த சில ஆண்டுகளில் என் அப்பாவுக்கு நான் மம்மி என அழைக்கும் ராஜேஸ்வரி அவர்களோடு மறுமணம் நிகழ்ந்தது அதன் வழியாக எனக்கு மகாலக்ஷ்மி என ஒரு தங்கை, ஆனால் முதல் சில ஆண்டுகளுக்கு பின் நாங்கள் ஒன்றாக வாழவில்லை. குடும்ப அமைப்பு விவசாய கூட்டு குடும்பம், என் சித்தப்பா மனோகரன், சித்தி பாரதி அவர்களின் பிள்ளைகள் தம்பி சாம்ராஜ், தங்கை ஜெயஶ்ரீ.
ஊர்
ஊர் திருவாரூர் மாவட்டம் வடுவூர் தென்பாதி. தஞ்சாவூர் மன்னார்குடி வழியில் உள்ளது. வடூவூர் அங்குள்ள ராமர் கோயிலுக்கும், கபடி, வாலிபால் போன்ற விளையாட்டு கலாச்சாரத்துக்கும், பறவைகள் சரணாலயத்துக்கும் பெயர் பெற்றது. விவசாயம் ஊரின் மையமான தொழில்.
கல்வி
முதல் மூன்று ஆண்டுகள் பள்ளி கல்வி தென்பாதி, இடமேலையூர், திருச்சி, தஞ்சை என ஒவ்வொறு ஆண்டும் ஒவ்வொரு இடத்தில் அமைந்தது. அதன் பின் இரண்டாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை தஞ்சாவூரில் உள்ள அக்ஸீலியம் என்ற பள்ளியிலும், ஆறாவதில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை டான் பாஸ்க்கோ என்ற பள்ளியிலும் வடுவூரில் இருந்து தஞ்சைக்கு பயணம் செய்து படித்தேன். கல்லூரி படிப்பை சமூகவியல் பாடப்பிரிவில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜீ என்ற கல்லூரியில் படித்தேன்.
காதல்
கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து 2015ல் நண்பர்களான நானும் இலக்கியாவும் 2017 முதல் காதலித்து 2023ல் திருமணம் செய்து கொண்டோம். இலக்கியா தகவல் தொழில்நுட்ப துறையில் பணி புரிகிறார். நான் தஞ்சையில் விவசாயம் பார்க்கிறேன்.
கலை இலக்கிய பண்பாட்டு அறிமுகம்
அப்பாவிடம் சில நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களின் நூல் சேகரம் இருந்த போதும் நான் அப்பொழுது இலக்கியத்திற்க்கு அறிமுகமாகவில்லை. கோவை பி. எஸ். ஜீ கலை அறிவியல் கல்லூரியில் இருந்த நிலா முற்றம், சிந்தனை மன்றம், நாடக மன்றம் போன்ற அமைப்புகள் சமூகவியல் என்ற பாடம் மேலும் கல்லூரியில் அமைந்த நண்பர்கள் ஆசிரியர்கள் என அந்த சூழல் எனக்கு இலக்கியம், அரசியல், நவீன நாடகம், உலக சினிமா ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதாக அமைந்தது. அதன் வழியாக நாடகங்களில் நடிக்கவும் வாசிக்கவும் சிந்திக்கவும் உரையாடவும் எழுதவும் துவங்கினேன். ஆரம்பத்தில் அப்பாவின் பெயரை மட்டும் இணைத்துக்கொண்டு எழுதிய நான் பின் அம்மாவின் பெயரையும் இணைத்து பிரதீப் விஜயா கென்னடி என வைத்து கொண்டேன்.
தேடல்
எனக்குள் அடிப்படை என அமைந்த ஆன்மீக தேடல், தத்துவ தேடல், சமூக சிந்தனை, எழுத்து, பிற கலை வெளிபாடுகள், என் சவாலாக சிறு வயது அனுபவங்கள், வாழ்க்கை சூழல் வழியாக என் உள்ளார்ந்த இயல்பாகிவிட்டவை என்று நினைக்கிறேன். மூன்று வயதில் என் அம்மாவின் தற்கொலை, ஐந்து வயதில் என் அம்மா வழி தாத்தாவின் திடீர் மரணம், நான் பெண்மையின் தொடுகையை முதலில் உணர்ந்த என் ஆத்தா நான் 10-ம் வகுப்பு படிக்கும் பொழுது கேன்சர் வந்து இறந்தார். நான் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் பள்ளிக்கும் என அலைந்து கொண்டிருந்தேன். என் அம்மாவின் தற்கொலையை வைத்து சொந்த பந்தங்களுக்கு இடையே உருவான தகராறுகள். அதை தொடர்ந்து அம்மா வழி குடும்பத்துக்கும் அப்பா வழி குடும்பத்துக்கும் ஏற்பட்ட பகை இருவருக்கும் இடையே நான். அப்பாவுடனான தனிமையான வாழ்க்கை என என் அனுபவங்கள் என் சிறு மனதில் ஆழமான பாதிப்புகளை உருவாக்க சாத்தியம் உள்ளவை. நான் அனைத்திலும் இருந்து தப்பித்து விளையாட ஓடி விட முயன்றாலும் வாழ்க்கை என்னை சிறுவனாக மட்டுமே இருக்க அனுமதிக்காமல் வாழ்க்கை பெரிய அனுபவங்களை தந்தபடி இருந்தது.
வளர்ந்து வரும் பொழுது சிறுவயது அனுபவங்கள் மரணம் பற்றிய கேள்விகளையும் அதிலுள்ள அச்சங்களையும் எனக்கு தந்திருந்தது. மேலும் கோவிட் காலக்கட்டத்தில் வீட்டிக்குள் வந்த கட்டுவிரியன் பாம்பு குட்டியிடம் இருந்து ஒரு அடி தூரத்தில் உயிர் பிழைத்தேன். அது அப்பத்தாவின் தடி அடிக்கு இறந்து போனது. இந்த நிகழ்வு ஏற்கெனவே பல கேள்விகளாலும் உணர்ச்சிகளாலும் கொந்தளித்து கொண்டிருந்த என்னை மேலும் உளவியல் ரீதியாக உடைத்து போட்டது. ஒரு நொடியில் மரணம் வந்து தொட வாய்ப்புகள் உள்ள வாழ்க்கையில் நம் கனவுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்? நீண்ட ஆண்டுகளுக்கு பின் தொடர் தேடல் வழியாகவும் கீதை போன்ற ஒரே நூலை மட்டுமே பல ஆண்டுகளில் அவ்வப்போது வாசித்து சற்று வாழ்வை புரிந்து கொண்டு இப்பொழுது தெளிந்தி அடங்கி இருக்கிறேன்.
அப்பா, ஆத்தா, தாத்தா, அப்பத்தா, இலக்கியா என ஒவ்வொறுவரும் என் வாழ்க்கையின் கடுமையான காலங்களில் உடன் நின்று கரை சேர்த்துவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றியும் அன்பும். என் அம்மாவுக்கும் என் நன்றியும் அன்பும். போலவே, இதுவரை மெய் ஞானம் தேடி வழிகாட்டி சென்ற ஒவ்வொறுவருக்கும் என்றென்றைக்கும் நன்றிகள்.
செயல்
எதிர்ப்படும் வாழ்க்கை சவால்களுக்கு மத்தியில் வாழ்க்கை எனக்கு தந்த தேடும் இயல்பை உழைப்பின் வழியான திறனாக மாற்றி வெளிபட்டால் சில முக்கியமான சமூக பங்களிப்புகளை நான் ஆட்றகூடும். அது தத்துவம், இலக்கியம், சமூக சிந்தனை, காட்சி கலை, ஆன்மீகம் ஆகிய தளங்களில் அமையும். அதன் வழியாக என்னையும் விடுதலையானவனாகவும் மகிழ்ச்சியானவனாகவும் மாற்றிக்கொள்ள கூடும்.
அரசியல்
மதம், தேசம், இனம், மொழி, வர்கம், சாதி, பால் போன்ற பேதங்களால் உயர்வு தாழ்வு என மனிதர்கள் மனிதர்களை எந்த வகையிலும் துன்பப்படுத்தாத ஒடுக்காத இயற்க்கையோடு இனைந்து பேதங்கள் எல்லாம் குறைந்து மனிதர்களோடு மனிதர்கள் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் போது சமூகமும் தனிமனித சுதந்திரமும் நிறைந்த ஓர் உலகம்தான் என் அரசியல் கணவு.
மனிதகுலத்தின் மனசாட்சியை இன்னும் பெரியதாக்குவதே என் அரசியல் செயல்பாடு.
மத நம்பிக்கை
பல குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் வழிவகுக்கும் என்பதால் மதம் சார்ந்த நிலைப்பாட்டை இங்கேயே தெளிவாக வெளிப்படுத்துகிறேன்.
என் பார்வையில் மனித வரலாற்றை செங்குத்தாக பிரித்தால் அதை இரண்டாக பிரிக்கலாம். நவீன அறிவியல் புரட்சியை ஒட்டி பொது சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்திய நவீன அனுபவ-நிரூபண அறிவியல் உலக பார்வை உருவாகுவதற்கு முன்பான மரபின் காலக்கட்டம் அதற்குப் பின்பான நவீனத்தின் காலக்கட்டம்.
இரண்டாவது யுகத்தின் முகப்பு வாயில் அமர்ந்திருக்கிறோம். மதங்களோ அதை ஒட்டிய தத்துவ பள்ளிகளோ பிரபஞ்சத்தை பற்றியும் அதில் நம் இருப்பை பற்றியும் கேள்விகள் கேட்டு விடை கண்ட அளவுக்கு, அறிவியல் கேட்டு கண்டடைந்த பதில்கள் வெகுமக்களை தெய்வங்களை போல சூட்சம வடிவில் இன்னும் வந்து சேரவில்லை. அப்படி நிகழத் துவங்கும்போது எதிர்காலத்தில் உலகம் முழுவதுக்குமான பொதுவான பார்வைகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்குவது அறிவியல் கண்டுபிடிப்புகளாகவும், அடுத்த கண்டுபிடிப்பு வந்து முந்தைய நம்பிக்கையை உடைப்பதாகவும் இருக்கும். அது ஒருவகை அறிவியல்வாத மதமாகவும் ஆகக்கூடும். அதேபோல இயற்கை வழிபாட்டுக்குரிய கருத்துருவத் தெய்வங்களாக ஆகக்கூடிய சாத்தியங்களும் தென்படுகின்றன. யாருக்குத் தெரியும். அந்த போக்கை சுட்டுவதுதான் யுனிவர்ஸ் என்ற தெய்வம், மேணிஃபெஸ்டேஷன் என்ற புதிய வழிபாட்டு முறை.
அல்லது மரபின் கண்டறிதல்களும் நவீன அறிவியல் கண்டறிதல்களும் இணைந்து பிரபஞ்ச தேடல் மற்றும் மனித வாழ்க்கை முறையின் புதிய சாத்தியங்களையும் வழிமுறைகளையும் கண்டறியக்கூடும். அது மனித வாழ்க்கையின் இருத்தலியல் சிக்கல்களையும் அறிவியல் பிரச்சனைகளையும் சமூகவியல் பிரச்சனைகளையும் குறைத்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடும்.
ஆகையால் என்னை நான் அனைத்து மதத்துக்குமானவன் என்றோ ஆன்மீக தேடல் கொண்டவன் என்றோ அழைத்துக் கொள்கிறேன். அல்லது அறிவியல் நோக்கில் இந்த பிரபஞ்சம் என்ன அதில் நாம் ஏன் பிறந்துள்ளோம் என்ற எளிய அறிவியல் கேள்வியை எழுப்பிக்கொள்பவன் என்று அழைத்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவன் என்றோ அல்லது குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரானவன் என்றோ நான் இல்லை.
பிரபஞ்ச தேடல் கொண்ட எனக்கு அதற்கான விடைகளும் வழிமுறைகளும் எங்கு எல்லாம் உள்ளதோ அங்கு எல்லாம் தேடிச் செல்வதே ஒரே வழி. ஆகையால் என் தேடல் மதம், மத உருவகங்கள், புராணங்கள், தத்துவம், சமூகவியல், உளவியல், இயற்பியல், இன்னும் நவீன அறிவியலின் பிற துறைகள் புதிய கண்டுபிடிப்புகள், என அமையும் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
பிற ஆர்வங்கள்
சிறுவயது முதலே விளையாட்டு என்றால் மிகுந்த ஆர்வம். வெவ்வேறு சூழலில் அப்பா கொடுக்கும் அனுமதிகளுக்கு ஏற்ப கபடி, வாலிபால், கிரிக்கெட், ஃபுட்பால் என விளையாடி இருக்கிறேன். ஆறு மாத காலம் ஒரு ஆபிஸில் வேலை பார்த்த போது டேபுல் டென்னிஸ் ஆடினேன். இப்பொழுது எனக்கு அன்கைலோசிங் ஸ்பான்டிலிட்டிஸ் என ஆட்டோ இம்மியூன் கண்டிஷன் இருப்பதால் டென்னிஸ் ஆடுகிறேன். அது பலனும் அளிக்கிறது. இசை ஓவியம் போன்று இன்னும் பிற ஆர்வங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த இணையதளம்
நான் பிரதீப் விஜயா கென்னடி என்ற பெயரில் இந்த இணையதளத்தில் எழுதுகிறேன். இந்த இணையதளம் என்னுடைய கதைகள், கவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், மற்றும் பிற கலைவெளிபாடுகள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இந்த தளத்தில் உள்ள லோகோ நான் எழுதிய ‘உயிர்மரம்’ என்ற கதை மற்றும் ‘கண் நதி வண்ண பெருக்கு’ ‘புள்ளி இட்ட கோலம்’ என்ற கவிதை வரியை அடிப்படையாக வைத்து உருவாக்கியது. பச்சை நிறம் மரத்தை குறிக்கவும், நீலம் நதியை குறிக்கவும் பயண்படுத்தபட்டுள்ளது. கருத்து வடிவம் லோகோவாகவும் காட்சி வடிவம் முகப்பு பேனராகவும் உள்ளது.
இந்த தளத்தில் உள்ள ஃபெவ் ஐக்கான் நான் இலக்கியாவுக்கு மெழுகில் செய்து கொடுத்த முதல் காதல் பரிசு.
நான்
நான் யார் என சுருக்கமாக சொல்ல முயல்வது என்றால், நான் யார்? என கேள்வி கேட்க்கும் ஆன்மீக தேடல் கொண்டவன். இந்த பிரபஞ்ச இருப்பையும், இயற்க்கையையும், மனித வாழ்வையும் மனிதர்களையும், சமூகத்தையும், பிறப்பையும் இறப்பையும், என்னையும் என் அகத்தையும் புரிந்துக்கொள்ள முயல்பவன். அதை எழுத்து மற்றும் கலையாக எனக்காகவும் சமூகத்துக்காகவும் வெளிப்படுத்துபவன், வெளிபடுத்துவன் வழியாகவும் அறிந்துகொள்பவன். இந்த புரிதல்கள் அறிதல்கள் வழியாக என்னை தகவமைத்துக்கொண்டு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் விடுதலையாகவும் இந்த வாழ்க்கையை ஈடுபாட்டுடன் வாழ முயல்பவன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Previous page Next page