menu Menu
ஆறு
[சிறுகதை]
By பிரதீப் Posted in புனைவு, சிறுகதை on October 22, 2026 0 Comments 9 நிமிட வாசிப்பு
தூங்கிக்கொள்ளல் Previous உயிர்மரம் Next

ஆறு [சிறுகதை]

இருபத்துநான்கு நாட்கள் நடைக்குப் பின் நாங்கள் எதிர்பட நேர்ந்தது ஒரு நதி. அந்த பேருந்து நிலையத்திலிருந்து முன்பின் அறியாத திசைநோக்கி நடப்பதென்றும் முதலில் எதிர்பட போவது நதியா மலையா என்று அப்பாவின் கேள்வியோடு அது வரும்வரை நடக்கும் இந்த முடிவை நானும் ஏற்றுக்கொண்டு நடக்க துவங்கினேன். முதல் நாள்  “நீ என்னடா நெனைக்குற நதியா மலையா” என்று கேட்டுக்கொண்டிருந்த அப்பா  மெல்ல உடல்நிலை, சாப்பாடு, இரவு தூங்குமிடம் என்பதைத் தாண்டி எதுவும் பேசாதவரானார். நானும் இரண்டு மூன்று நாட்களில் எதிர்பட வரபோவது எது என்ற ஆவலை இழந்து யூகமற்றவனானேன். முதலே அப்பா அவைகள் இல்லை என்றுவிடதாள் கம்மாயிகளையும் குன்றுகளையும் கடந்தபடி இருந்தோம்.இருபத்துனான்கு நாட்களின் இரண்டு பகல் ஒய்வுகளைத் தவிர மீதி எல்லா நாளும் நடந்தோம். இந்த காலையில் காற்றின் குளிரைக் கொண்டு  நீர்நிலை இருப்பதை ஒரு கிலோமீட்டருக்கு முன்பே உணர்ந்திருந்தாலும் யூகம் செய்ய முயலாமல் அதை நோக்கி நடந்தோம். நெருங்க நெருங்க நதி எங்கள் முன் நிகழ்ந்தது.

ஆபீஸுக்கான உடையணிந்து கிளம்பிக் கொண்டிருந்த அப்பா என்னை எழுப்பி, “கிளம்பு வெளிய போகலாம்” என்றார். பேருந்து நிலையம் சென்று எந்த பஸ் என்று என்னிடம் கேட்டார். பெங்களூரு நோக்கி சென்ற பேருந்திலிருந்து இடையில் இறங்கி வேறு ஊருக்கு பஸ் ஏறி அது  இரண்டு நிமிடங்கள் தடைப்பட்டு நிற்க அப்பா இப்படி செய்யலாம் என்று இந்த திட்டத்தைச் சொன்னார். முதலில் வழக்கமாக ஒருவரை சமாதனம் செய்ய அப்பா மேற்கொள்ளும் அதீத முயற்சிகள் தான் இது என்றும் நான்கைந்து கிலோமீட்டர் தூரத்தில் நதியோ மலையோ இருப்பதை அறிந்து வைத்துகொண்டுதான் இப்படி செய்கிறார் என்றும் நினைத்திருந்த எனக்கு பின்னர்தான் அவரின் தீவிரம் புரிந்தது. ஒருபகல் நடந்தும் எதுவொன்றையும் அடையவில்லை. பேண்டுகளைக் கலைத்து ஒரு கடையில் வேட்டி வாங்கி உடுத்திக்கொண்டோம். ஷூக்களை எறிந்து ரப்பர் செருப்புகளை வாங்கி அணிந்து கொண்ட நாங்கள் அதும் வெட்டித் தோல்களை வொயட்டி எடுக்கவே வெறுங்காலில் நடந்தோம். இடையில் முன் அறிவிப்பின்றி  ஷோரூம் ஒன்றைப் பார்த்ததும் எனக்கு அடிடாசின் ஷூ ஒன்று வாங்கிக்கொடுத்தார். பையினுளிருந்த லேப்டாப்பை தூக்கிப் போட்டுவிடலாமா என்று கேட்டார். நாள் ஒன்று ஒரு சிகரெட் மட்டுமே பிடித்தார். வீட்டில் இரவுகளிள் தூக்கம் பிடிக்காமல் இருப்பவர் மேன்சன் அறைகளிலும் பேருந்து நிலையங்களிலும் இரவுநேர ஹோட்டல்களிலும் நான் எழுந்து எழுப்பும் வரை தூங்கினார். தன் ஃபோனை அணைத்து வைத்துக்கொண்டவர் எனக்கு அழைத்து விசாரிப்பவர்களிடம் வெளியூர் சென்றிருக்கிறோம் என்றும் தான் தூங்குவதாகவும் சொல்ல சொன்னார். சுர்ஜித் அங்கிளும், என் காதலியும் மட்டும்  மாறி மாறி அழைத்தபடி இருந்தார்கள். மூன்றாவது நாளில் என் ஃபோனும் முழுவதுமாக அணைந்து போய் இன்றுவரை அப்படியே உள்ளது.

என்னைக் கடந்து முன்சென்று நின்ற அப்பா நீர்பெருக்கைப் பார்த்தபடி “நம்ம நாட்டுல ஒரு நதிய பாக்க இத்தன நாள் ஆகும்ங்குறது எத்தன பெரிய ஆச்சரியம் இல்ல.. ம்ம்” என்றுவிட்டு என்னைப் பார்த்து மறுப்பேனோ என நினைத்து மீண்டும் ஆறுபக்கம் திரும்பினப்படி “பாலைவன மாநிலங்கள பத்தி நான் சொல்ல ” என்றார்.

நான் புன்னகைத்தேன்.

இருவரும் மெல்ல காலடி எடுத்துவைத்து படித்துறையை அடைந்தோம்.

அப்பா “குளிக்கலாமா” என்றார். நான் தோல் பையை இறக்கி உள்ளிருந்து மாற்றுவேட்டியையும் துண்டையும் எடுத்தேன். மலையா இருந்தா என்ன செஞ்சிருப்போம் என்ற கேள்வி என்னுள் எழவே துண்டை அவரிடம் நீட்டியபடி கேட்க துவங்குவதற்குள், அவரே “இந்நேரம் மலைன்னா உச்சில ஏறி நின்னு  சுத்தியும் பாத்துருப்போமில்ல ” என்றார்.

கரையின் இருபுறமும் எழுந்த சுனைகொண்ட நாணல்களாலும், குஞ்சம் என வெண்பஞ்சு பூத்த வெழல்ளாலும் மூடப்பட்டிருந்த நதி நீண்டு தூரத்தில் சற்றே ஒசிந்து மீண்டும் நீளக் கிடந்தது. எரிக்கப்படும் நீரின் கொதிப்பு போல ஆறு வெண்பொடி மணல்கள் மேல் எழ பொங்கியபடி சுழிந்து சென்றது. கரையில் இருந்தபடி கண்களை ஓட்டி முழு ஆற்றையும் ஒற்றை பார்வையில் பார்க்க முடியவில்லை. ஆழத்தில் உற்றுப்பார்க்க மணல்வரிபடிவங்களாக இருந்தன .நீர் ஒவ்வொரு மணலாக இடமாற்றியபடி இருந்தது. மொத்த ஆறும் நிகழ்ந்தபடி இருந்தது.

வெயில் ஏறிவர முகங்களில் வெள்ளை வேட்டியில் என எங்கும் நிறமேறி இருந்த பொன்னொளி , நெய் என கரைந்து காய்ந்து இல்லாமல் ஆனது. கருங்கற்படித்துறையின் முதல்படிலேயே அமர்ந்த அப்பா ஒரு காலுக்கு மேல் மற்றொன்றை தூக்கி வைத்து உள்ளங்காலைப் பார்த்தார். பொத்துவடிந்து உளர்ந்து ஒட்டி பிய்ந்த தோல்களற்ற உள்ளங்கால் கருபேரி இருந்தது. சேறில் பதிந்த நெற்று என கால் நகங்கள் ,நைய்ந்து நீர் வடிந்த கணுக்களில் ஒட்டியிருந்தன.  நானும் அமர்ந்து ஷூ லேசை அவிழ்க்க குனிந்த போது அப்பாவின் கால்களிலிருந்து இந்த நாட்களில் பரிட்சயமான சதை அழுகல் மணம் எழுந்து வந்தது. கை நகங்களால் உள்ளங்காலில் படிந்த பிசுக்கழுக்கை அவர் சுரண்டி எடுக்க கிளோரின் பவுடரின் மணம் வந்தது. பற்கள் இருகக் கடிக்கபட்டு நரநரக்க கழுத்து நரம்புகள் புடைக்க அவர்முகம் சிவக்க துவங்கியது. மொத்தமாக அது அவரின் பழைய கோவத்தையே நினைவுபடுத்தியது. ஏன் இப்படி வேறு ஒருவராக மாறிக்கொண்டிருக்கிறார்.

வேட்டியை கழட்டி துண்டை கட்டி ஜட்டியை அணிந்துகொண்டு ஊதிப்பெருத்து ரப்பர் துண்டுகள் போலிருந்த என் கால்களை படிகளில் தூக்கி வைத்து ஆற்றுக்குள் இறங்கினேன்.

அப்பா “அறியாத ஆத்துல கால் நனைக்குறபொல்லாம் ஜாக்கிரதைன்னு நான் டூர் போறப்பல்லாம் உங்க தாத்தா சொல்லுவார்” என்றார். “அப்போ இந்தா இந்தமாறி ஆத்துல சொழல்ல சிக்கி பொதமணல்ல மாட்டி செத்தவங்க ரொம்ப பேர் அதிகம்”.

நான் இடுப்பளவு நீருக்குள் நின்று மாருக்கு குறுக்காக கைகளைக் கட்டி உள்ளங்கையால் தோள்பட்டைகளை தேய்த்துவிட்டபடி அவரைப் பார்த்தேன். நீரின் மேல்மட்டம் மயிர்கூச்செரியும் குளிராகவும் அடியாழம் வெதுமையாகவும் இருந்தது. காற்றுப்புடைக்க உப்பி மேலேறிய துண்டு நீரில் ஊறியபின் உடலோடு ஒட்டியது. காலில் பொத்து வடிந்த இடங்கள் எரிய துவங்கின. மூத்திரம் பெய்ய வேண்டும்போல் இருந்தது. உள்ளங்கையால் நீரை அள்ளி எடுத்து வாய்க்கொப்பளித்து நீட்டித் துப்பினேன்.

அப்பா “திருவையாரு மாதிரியே இருக்குல்ல” என்றபடி உள்ளிறங்கி வந்தார். நான்கு மாதங்களுக்கு முன்னால் அம்மாவிற்கு அங்குதான் பதினாராம் நாள் கருமாதி நடந்தது. அம்மா அப்பா இருவருக்குமே தஞ்சை அருகே சொந்த ஊர் இருவருமே ஒரே தெரு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இரண்டு வகுப்புகள் இடைவெளி ஆனால் ஒரே பள்ளி. சேர்ந்தாற் போல் நான் ஊரில் இருந்தது அந்த பதினாறு நாட்கள் தான். வெகுநாட்களாக நாங்கள் எதிர்பார்த்ததுதான் என்பதனால் அம்மாவின் மரணதில் பெரிய துக்கமும் அதிர்ச்சியுமில்லை . அங்கு ஊர்வீட்டில்  பதினைந்தாம் நாள் அம்மாவின் படம் ஒன்றை திரந்தார்கள்.நான் அந்த ஆற்றை கற்பனையில் எழுப்ப முயன்றேன். குளித்த பெண் முதுகில் படிந்த ஈரமுடி போல் வெண்மணற் பரப்பில் ரேகைகள் என ஒடியது அது. உள்ளங்கைகளை தேய்த்தப்படி அப்பா “தாத்தாக்கு பண்றப்போ தண்ணி இல்ல ஆனா அதுக்கு முன்னாடி அப்பாயிக்கு இந்த அளவுக்கு தண்ணி. படியிலிருந்தபடிதான் செஞ்சம் ” என்றார். பாட்டி  நான் பிறக்கும் முன்பே இறந்து விட்டார் தாத்தா நான் ஃபோர்த் படிக்கும் பொழுது.

“உனக்கு நீச்சல் தெரியாது என்ன “

“ம்ம்”

“நான் ரொம்ப நல்லா நீச்சல் அடிப்பன்..அதான் பாத்துருக்குயே”

சற்று நேரம்  தன்னுள் ஆழ்ந்திருந்தவர் “முங்கு முங்குனா குளுரு தெரியாது” என்று சொல்லிவிட்டு மூழ்கிவிட்டார். என் முன் அவர் இருந்த இடத்தில் இப்பொழுது நீர் சுழித்தோடியது. நான் பதறி மூழ்கி நீருக்குள் கண்களைத் திறந்து பார்த்தேன் உள்ளே தான் இருந்தார். கண்கள் எரியவே மேல் எழுந்து கொண்டேன்.

மூழ்கி எழுந்து முகத்தில் நீரை வழித்துவிட்டு அப்பா “உங்க சித்தப்பா இருக்கான்ல அவன் இப்படித்தான் மூனு முங்கு முங்காம போனா செத்துருவம்னு சொல்லி சொல்லி எனக்கு ஆத்துல குளிக்குறப்பல்லாம் பயம் வந்துடுச்சு” என்றார். நான் கைகளாலேயே உடலை தேய்த்து இன்னொரு முங்கு முங்கி கரை ஏறினேன். அவர் இப்படி இயல்பாக பேசவே மீண்டும் என்னுள் வெறுப்பு ஊறி நிறைந்தது. மீண்டும் வயிரை புரட்டுவது போல் இருந்தது. மேல் ஏறி முதல்படியில் நின்றபடி கீழே இருந்தவரை பார்த்தேன் அழுக்கு தேய்த்துக் குளித்தார். பெயின்ட் பிரஷ் தெளிப்பு போல் இருந்தது படிகளில் இருந்த என் ஈர பாத சுவடுகள். அப்பா “துண்ட புழிஞ்சு ஒடம்ப தொவட்டிக்கோ.. மறுபடியும் துண்ட கட்டிகிட்டு ஜட்டிய கெழட்டு” என்றார். அவர் சொன்னது போலவே செய்தேன்.

முன்றுமுங்கு முங்கி முடித்து முகத்திலும் தலையிலும் நீரை வழித்தபடி அப்பா மேலேறி வந்தார். பாதிக்கு பாதி அப்பாவின் தாடி நரைத்து விட்டது, தலை இன்னும் கூடுதலாக. இருபத்துநான்கு நாட்களும் அப்பா சவரம் செய்திருக்கவில்லை. அம்மா இறந்ததில் அதிர்ச்சிகள் இல்லை என்றாலும் அப்பாவிடம் சின்ன மாறுதல்கள் உருவாகி இருந்தன. தினமும் சவரம் செய்வது, நினைத்தபோதெல்லாம் குளிப்பது, இரவு சமையலை கறி மீன் என எடுத்து மிக பெரியதாக செய்வது, தூங்கும்போது சட்டை அணிந்து கொள்வது, இப்படி.

துவட்டிக்கொண்டிருந்தவர் “அடுத்து என்னடா பண்ணலாம்” என்றார்.

சிவந்த நரம்புகள் இழையோட ஒரு பழச்சுழை போல மாறி இருந்த அவர் கண்களை பார்த்தபடி “பசிக்கலையா உங்களுக்கு” என்றேன். “அது இல்லடா..செரி டீ குடிச்ச கடையிலேயே சாப்ட்ரலாமா” என்று விட்டு உடைகளை உடுத்திக்கொண்டார். நானும் உடுத்தி தயாராக இருந்தேன். பையை எடுத்து அவரே தோளில் அணிந்து கொண்டவர் எனக்கும் சைகை செய்து மீண்டும் படிகளிலேயே அமர்ந்துக் கொண்டார். மறு கரையை பார்த்தபடி அப்பா “எனக்கு திரும்பியும் வீட்டுக்கு வர பிடிக்கலடா..வெறி கொண்டு நடக்கனும் போல இருக்கு. ஒன் அம்மாட்ட விளையாட்டா சொல்லிருக்கன் நீ இல்லனா கெழம்பிருவன்னு.கூம். உன் கூட இருந்தா அது ஒரு தெம்பதான். நீ சின்ன பையன்யில்ல உனக்கு எல்லா வெவரமும் தெரியும். நான் கெழம்பியரன்டா கீர்த்தி என்னால இனிமே வரமுடியாதுடா அங்க”. எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை என்னுள் நான் நினைப்பதைத்தான் சரியாக அப்பா  சொல்கிறாரா.என் தொடைகளை ஒட்டி கொண்டேன் .அடிவயிறு ,விரை மூத்திரம் என அந்த பகுதியையே கவ்வி இழுத்துகொண்டது. நுரையீரல் கசக்கபடுவதுபோல் இருந்தது. உடலை மொத்தமாக ஒடுக்கி கொண்டு “என்னப்பா சொல்ற எங்கப்பா போவ” என்றேன்.

சற்று அமைதியாக இருந்துவிட்டு என் மொகத்தை பாராது அப்பா “காலேஜ் முடிஞ்சதும் என்ன பண்ணலாமுனுடா இருக்க கீர்த்தி ” என்று கேட்டார்.

“ஜாப் தான்”

“ம்ம்.. நீ போப்பான்னு சொன்னா போரன்..இல்லன்னா இல்ல…போனா சந்தோசமா இருப்பன்னு அர்த்தமில்ல என்னால இருக்கமுடியலடா கஸ்டமா இருக்கு”

“என்னப்பா என்ன என்னமோ பேசுற.. தேவல்லாம என்னையும் பயமுறுத்தற.. பேசாம இருப்பா” உடைப்பட்ட என் குரல் அடியாழத்திலிருந்து வேறு ஒன்றாக இருந்தது. சற்று மட்டுமே இமைகளை திறந்து வைத்திருந்தேன்.அப்பா எதுவும் திருமணம் செய்துகொள்ளபோகிறேன் எங்க போகிறாரா .கைகளால் கண்களை மூடிக்கொண்டேன் வெளிச்சத்தை பார்க்கமுடியவில்லை. முகத்தை தொடைக்குள் இடுக்கிய தருணம் அவர் எழுந்து வந்து என் தோள்களைப்பற்றி தூக்கி “சரி வா மொல்ல போய் சாப்டலாம் அப்பறம் வந்து பேசிக்கலாம்” என்றார்.

அப்பாவும் அழுதுகொண்டிருந்தார். ஆனால் வழக்கம் போல் பற்களைக் கடித்துக்கொண்டு உள்ளங்கையில் நகம் பதிய இருக்கி ,முகம் சிவந்து நெற்றியில் மான்கொம்பு நரம்பு புடைக்க அல்ல, மாறாக பொத்தல் விழுந்த பானைபோல் கசிந்தார்.

எழுந்து ஹோட்டலை நோக்கி நடக்க துவங்கினோம். அடிபட்ட பச்சை பப்பாளி பால் போல் புரங்கால்களில் நீர்துளிர்த்து வடிந்தது. கடந்து சென்ற பச்சை நாத்துகளை தாங்கிய நெல் வயலினுள் பாய்ந்து புரண்டு சேற்றை அள்ளி முகத்தில் பூசி கொள்ள வேண்டும் போல் இருந்தது.

“நான் அங்க வீட்டுக்கு வரலடா..போரண்டா கீர்த்தி”

“எங்கப்பா போவ”

“எங்கையாச்சும் காசி ராமேஸ்வரம்னு”

நான் தூரத்தை வெரித்தேன்.

“முடியலனா எதாது ஹோட்டல்ல வேல பாக்குறன்.. உனக்கு இந்த இயர் காலேஜ் முடியுது.. சித்தப்பா இருக்கான் உனக்கு ஹெல்ப் பண்ண.. நான் எப்பவும் போல ஃபோன்லாம் பண்ணுவன்டா… ஒங் கல்யாணத்தன்னைக்கு கண்டிப்பா இருப்பன்”

அப்பா முடிவு செய்துவிட்டார். என் அனுமதிக்காக காத்திருக்கிறார்.

“சென்னை வரைக்கும் வாங்க..கோயம்பேட்டுல வந்து விட்டுட்டு போங்க”

கணம் தயங்கிவிட்டு சரி என்று தலையாட்டினார்.

அன்று அப்படி நடந்ததால் தான் அப்பா இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். பக்கத்து அறையில். இவருடைய பாட்னர் சுர்ஜித் அங்கிளுடன் குடித்தபடி பேசியது எல்லாம் என் அறையில் படுத்திருந்த என் காதில் விழுந்தது. கொஞ்ச நாட்களாக இது வாடிக்கையும் ஆகியிருந்தது. அவர்கள் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருத்தியின் பெயரைக் குறிப்பிட்டு அப்பாவோடு சம்பந்தப்படுத்திப் பேசி கொண்டிருந்தார் சுர்ஜித். சிரிப்பு சத்தம் வேறு. அப்பாவும் சிரித்தார். நான் சந்தேகப்பட்டதும் அவளாகத்தான் இருக்கவேண்டும். அவளின் உறுப்புகளைப் பற்றி பேச்சு சென்றதும் அப்பா கோவப்பட,நான் போர்வைக்குள்ளேயே வாந்தி எடுத்துவிட்டேன். சத்தம் கேட்டு வந்த அப்பா போர்வையை விலக்கி என் முகத்தைப் பார்த்தார். அழுது என் முகம் சளி அப்பியிருந்தது.வாந்தியும்.என்னை பாத்ரூமிற்கு அழைத்துச் சென்று முகத்தைத் துடைத்து சளியை வழித்து சிந்தி துணியை மாற்றிவிட்டனர். உடைமாற்றி நான் ஹாலுக்குச் சென்று வேறு போர்வையை போர்த்திக் கொண்டு படுத்தேன். சுர்ஜித் அங்கிள் கீர்த்தி என்று என் பெயரை மட்டும் சொல்லி சற்று நேரதிற்கெள்ளாம் விடை பெற்றுச் சென்றார். அதன்பின் அப்பா என்னை இயல்பாக்க முயன்றபடி இருந்தார். ஆனால் நான் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. நடுக்கமாகவும் என்னை யாரோ கொல்லப் போகிறார்கள் என்று பயமாக இருந்தது. வீட்டிலிருந்து நாங்கள் இப்படி கிளம்பியதற்கு முந்தையநாள் இரவு அப்பாவிடம் நண்பனின் அறைக்குச் சென்றுவிடுவதற்காக அனுமதி கேட்டேன்.

இப்பொழுது அப்பா இப்படி  பேசும்போது, அதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் பெரிய தவறில்லை என்பதுபோல், அவருக்காக நான் உருவாக்கிய  நியாயங்கள் அனைத்தும் உண்மை என்றே படுகிறது.

ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டிருந்தோம். “அப்பா அன்னைக்கு அப்படி..” என்று நான் துவங்குவதற்குள் அப்பா “அதெல்லாம் எதுமில்ல கீர்த்தி” என்றபடி காலை அவர் அமர்ந்திருந்த அதே இருக்கையில் அமர்ந்தார். நான் எதிர்புறம் அமர்ந்து கொண்டேன். எனக்கு என்ன வேண்டும் என்று நான் சொல்லாததால் அவரே தோசை என்றார். அவருக்கு இட்லி வந்தது சாப்பிட்டு முடித்ததும் டீ. எல்லாம் முடிந்து வெளிவந்ததும் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்தார், இன்று இரண்டாவது. உனக்கு இந்த பழக்கம் உண்டா என்று கேட்பார் என்று நினைத்தேன் அல்லது வேண்டாம் என்ற அறிவுரையை. எதும்  இல்லை.

நகரத்திற்கு சென்று அங்கிருந்து சென்னைக்குப் பஸ் ஏறினோம். அவரே சன்னல் ஓரம் அமர்ந்து கொண்டார். தோள்பையை திறந்து பணத்தை எடுத்த நான் டிக்கட்டுகளை எடுத்து சில்லரையை சரி பார்த்து மீண்டும் உள்வைத்து பூட்டினேன்.

” தொழில நீ பாத்துக்கலாம்ல “

” இல்ல.. “

” ஏன் ஆருவமில்லையா.”

“ஆமா”

“ஏடிஎம் பின் நம்பர் தெரியும்ல”

” உங்களுக்கு?”

“எறங்கி கையில கொஞ்சம் பணம் எடுத்துக்கலாம்.. அப்பறம் ஒரு குட்டி நோட் வாங்கி உன் நம்பரு, சித்தப்பா, சுர்ஜித் நம்பரு எல்லாத்தையும் எழுதிக் குடு”

அவள் நம்பரை கேட்கவில்லை. மனப்பாடமாக தெரியுமாக இருக்கலாம். இல்லை இனி தேவை இல்லையாக இருக்கலாம். அப்பா அன்று நடந்ததைப் பற்றி ஏதும் பேசுவார் என நினைத்தேன், பேசவில்லை.

“ஃபோன் எடுத்துட்டு போலாம்ல”

“அது வேணாம்டா”

“மத்தவங்க கேக்குறப்போ என்ன சொல்றது”

“இந்த மாரின்னு சொல்லு ” என்று என் கையை பற்றி இழுத்து தன் உள்ளங்கைகளுக்குள் வைத்துக்கொண்டார்.

அவர் மனதினுள் ஓடுவதை கணக்கிட முயன்றபடி இருந்தேன்.

“டைரிய தூக்கி போட்டுரு..உனக்கு படிக்கனுன்னா படி ஆனா அதுல பெருசா எதுமில்ல.. ஃபோன் உனக்கு வேணுனா எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு  யூஸ் பண்ணு…லேப்டாப் உனக்கு கண்டிப்பா தேவப்படும்… நீ பாத்துப்ப இவ்ளோ பெரியவனா ஆய்டல்ல”

நான் வெறுமென அவரைப் பார்த்தேன்.

“மறுபடி அங்க வந்து புதுசா ஒரு வாழ்க்க வாழமுடியாதுடா… குடிக்காம இப்படியெல்லாம்..”

“சரிப்பா”

இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார். என் இடதுகை அவர் கைகளுக்குள் இருந்தது. சன்னல் வழியே பார்த்தாலும் காட்சிகளில் மனம் நிலைகொள்ளவில்லை. நானும் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன். வீட்டின் கதவை திறப்பதை நினைத்தாலே பயமாக இருந்தது. வீடு துண்டுக்காட்சிகளாக எழுந்துவந்தபடி இருந்தது. குவிந்து கிடக்கும் அப்பாவின் செருப்புகள் ,ஷூக்கள் ,காரின் முன் சீட், சிங்க் நிறைந்த பாத்திரங்கள், வேட்டி கடையில் காவிவேட்டி நுனியை விரலிடையில் வைத்து அவர் தடவி பார்த்தது, அம்மா நோய்ப்படுக்கையில் இருந்த கட்டில், அவரின் ஊதா துண்டு, பாத்ரூம் சல்லடையில் தேங்கிய முடிகள், வெள்ளையில் கட்டம் போட்ட கைலி, புகைப்படங்கள்,ஆஷ் ட்ரே, நாங்கள் மூவரும் செய்த பயணங்கள். எனக்கு பிடித்ததுபோல் வீட்டை ஒழுங்கு செய்ய வேண்டும். என் காதலைப் பற்றி அப்பாவிடம் சொன்னதேயில்லை. முன்பென்றால் சொல்லியிருக்கவே முடியாது. அப்பா கிளம்புவது உறுதியா. கனமாகி அழுத்திய இமைகளை திறந்து முழித்துகொண்டேன் .உடனே அழுகையும் வந்து விட்டிருந்தது.

அப்பா தூங்கவில்லை எழுந்து சன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்.

“அப்பா”

“ம்ம்”

“மலைன்னா என்னப்பா பண்ணிருப்போம்”

*

27. 3. 2020


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up