menu Menu
ஏன் நாட்கள் ஒன்றுபோல் இல்லை, முகங்களும்
வாழ்க்கை
By பிரதீப் Posted in அபுனைவு, அனுபவம் on October 22, 2026 0 Comments 7 நிமிட வாசிப்பு
தமிழில் இருக்கும் பின் நவீனத்துவ நாடக இயக்கம் : உரையாடல் Previous ஒர் தந்தையர் தினம் Next

ஏன் நாட்கள் ஒன்றுபோல் இல்லை, முகங்களும்.

ஏன் மகிழ்ச்சியின் உன்மத்ததின் சில நாட்கள் ? பின் ஏன் சில துயரமான நாட்கள். சுழற்ச்சியா இது ?

என்னில் நான் நிறைவடைந்த நாட்களில் செல்லும் நடைதான் எத்தனை அழகானது. என் காதல் கொடுத்த பேரின்பம் உண்மையில் எவ்வளவு பெரியது..

பின் வீழ்ச்சியும் அழுகையும் மண்டைபிளக்கும் கோவமும் ஏன் அரங்கேறியது. தொடர் போராட்டமும் துயரமும். குடி புகை கழிவிரக்கம், மனநோய்.

August 4 1997 என் பிறந்தாநாள் – (தகவளுக்கு : நான் பிரதீப்.தஞ்சைக்கும் மன்னார்குடிக்கும் இடையிலுள்ள வடுவூர் தென்பாதி என்ற கிராமத்தில் பிறந்தேன். அப்பா ஆர்.கென்னடி விவசாயி. அம்மா விஜயா, எனக்கு மூன்று வயதாக இருக்கும் பொழுது தற்கொலை செய்துகொண்டு இறந்தார்கள். அப்பாவுக்கு இரண்டாவது மனைவியும் அவர்கள் வழியில் எனக்கு தங்கை ஒருவரும் உண்டு – அவர்கள் இப்பொழுது எங்களுடன் வசிக்கவில்லை. என் அப்பாவின் அம்மா – என் அப்பத்தாவின் பெயர் சீத்தாலட்சுமி )

இந்த வீட்டில், இந்த கிராமத்தில் இந்த வாழ்க்கை பின்னணியிலிருந்து அப்படி ஒரு பள்ளிக்கும் கல்லூரிக்கும் நான் செல்ல நேர்ந்தது. கல்லூரி வந்துதான் இலக்கியம் கலை இந்த வகை நன்பர்கள்.

**
( இதில் நான் அந்தநாட்கள் என்று சொல்வது என் கல்லூரி முடிந்து முதல் ஒன்றரை வருடங்கள். இப்பொழுதில்லை. இந்த அறுமாதங்ளில் விலகி நின்று வேறுஒருவணாக அவற்றை பார்க்கிறேன். மகிழ்ச்சியாகவுமிறுக்கிறேன்)
**

எல்லாம் முடிந்துவிட்டது போல் ஒரு கிழவனின் மனநிலையை ஒத்து வாழ்ந்த பொறுமையின்மையின் நாட்கள் எத்தனை கொடுரமானதாக இருந்தது.

கோவையில். நண்பர்களின் அறையில் தனி அறைகளில் , சென்னையின் கிண்டியில், வலசரவாக்கத்தில், மாம்பலத்தில், கோவில்பட்டியில், மணபாட்டில், திருவனந்தபுரத்தில், தஞ்சையில், வீட்டில் மீண்டும் கோவை முருகன் மேன்ஷனின் வெவ்வேறு அறைகளில்.வாசிப்பதற்கான நிலையான இடம் தேடி எவ்வளவு அலைந்தேன்.அடுத்து என்ன செய்வது என்று தெரியாத குழப்பம்.
கண்ணீருடன் எத்தனை போன் கால்கள். எத்தனை பஸ் ஸ்டான்டுகள். எத்தனை வையின் ஷாப்புகள், கசப்பேறிய போதைகள். அளவுக்கு அதிகம் உண்ட உணவு, கிடந்த பட்டினிகள் . நான் அணைத்துப் போட்ட பீடி சிகிரட் துண்டுகள் எத்தனை.

சென்ற இலக்கிய நிகழ்வுகளும் அவை கொடுத்த அனுபவங்களும் பெரியது. 2019 குமரருபரன் விருது வழங்கும் விழாவின் சிறுகதை விவாத அரங்கிள் நடுங்கும் கைகளுடன் மைக்கை பிடித்து நான் கேட்ட கேள்விக்கு, அங்கு அவையில் அமர்ந்திருந்த ஜெயமோகன் திரும்பி உங்க பெயர் என்ன என்று கேட்டார். நான் சொன்னேன். எழுந்து மைக்கை வாங்கி அது நல்ல கேள்வி என்று சொன்னார். சிலருக்கு எளிய நிகழ்வாக இருக்கலாம், அது கொடுத்த தெம்பு மிக பெரியது. அப்பொழுது நான் மாம்பலத்தில் நண்பன் ஒருவருடண் இன்னும் சரியாக இருண்டு நாட்களில் அறையை காளி செய்து ஊர்திரும்பும் மனநிலையை அடையபோகிறேன் என்று தெரியாமல் ஒரு மாத வாடகையை கொடுத்து விட்டு தங்கியிருந்தேன்.

இளமையில் நாம் உணர்ச்சிகரமாக செய்யும் பல செயல்கள் பிறரால் பாவணைகளாக பார்க்கப்படும். அப்பொழுது இதுபோன்ற சில தருணங்களும் நாம் எழுதிய நல்ல சிறுகதை ஒன்றும் நம் கையில் இருந்தால் மனதில் வசைசொல்லோடு அவர்களை கடந்து சென்றுவிடலாம்.

ஏன் என்னை நானே அழித்துக்கொள்ளும் எல்லைவரை சென்றேன். வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நான் சென்ற மனநிலைக்கு என்ன காரணமும்..இல்லை என்றால் ஏன் அந்த பொருமையின்மை நிலையின்மை.

அந்த நாட்கள் என்னை இன்றும் வெறிகொண்டு துரத்தி அடிக்கிறது, திருப்பி பார்க்க முடியாத இரண்டு பக்கங்கள் கொண்டதாக.

கல்லூரி முடியதுவங்கும் முன், முதல் ஆளாக கோவையை விட்டு கிளம்பினேன் அவ்வளவு நம்பிக்கையுடனும், அத்தனை நண்பர்கள் கட்டி ஆர தழுவி விடைகொடுத்து அனுப்பிவைக்க. பின் ஏன் இப்படி எல்லாம் நடந்துது. ஏன் என் வீடு இப்படி இருந்து, அப்பா ஏன் இப்படி இருந்தார் , வீட்டின் சூழலும் சண்டைகளும். வீடுவேறுமாதிரி இருந்திருந்தாள் , இந்த நாட்கள் வேறு மாரி இருந்திருக்களாம். நான் ஏன் இப்படி இருந்தேன்.பொருமையாய் இருந்திருக்கலாம். நான்தானே என்னை அழித்துக் கொண்டுவிடாதபடி பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கல்லூரி படிப்பை முடித்திருக்கலாம். அப்பாவிடமும் அப்பத்தாவிடமும் கோவை செல்கிறேன் என்று எவ்வளவு அழுதிருப்பேன் கெஞ்சிருப்பேன். குடிபழக்கமும் சிகிரட் பழக்கமும் இல்லாதவனாக இருந்திருக்கலாம். எனக்கு நானே நிகழத்திக் கொண்ட வன்முறைகள் அல்லவா எல்லாம். குடித்து உழுது உண்டு உறங்கி எல்லா சூழல்களிலும் அடிதடி சண்டைகள் நிகழும் ரத்தங்களிலும் சூழலிலும் பிறந்த கிராமத்தானின் மூரகத்தால்தான் இதுஎல்லாமுமா.


ஒருகட்டத்தில் என் சித்தப்பாவை போல குறிப்பாக என் சின்ன மாமாவைபோல குடிகாரனாக நான் மாறி கொண்டிருக்கிறேன் என்ற உணர்வை அடைந்து துனுக்குற்றேன்.

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த காலையே வீட்டுக்குள் ஒரு மூலையிலிருந்த விறகுகளை எடுத்து வேறு இடத்தில் அடுக்கி, மண்ணை அகற்றி, சிற்றப்பா மகளில் உதவிகொண்டு சானிதெளித்து மெளுகினேன். கீற்றைகொண்டு ஒரு அறையை போல் அந்த மூலையை ஆக்கி உபயோகிக்கலாம் என்று இருந்தேன். அடுக்கியிருந்த விறகுகள் ஒழிக்கபட்டு சானிமெழுகி கிடந்த இடத்தை பார்த்த அப்பா ” என்னடா? யேன்டா ? என்ட சொல்லிட்டு செஞ்சுருக்கலாம்ல” என்றார். நான் “கீத்த வச்சு ஒரு ரூம் மாரி மறைக்கலாம்னு..” என்றேன். அப்பா “உனக்கு எதுக்குடா பிரைவசி ” என்றார். இப்பொழுதுவரை அதன் முக்கியதுவத்தை என்னால் முழுவதுமாக புரியவைக்க முடிந்ததில்லை.

குழப்பத்தில் எங்கு செல்லலாம் என முடிவெடுக்க முடியாத பொழுதுகள். கிழம்புதளுக்கான அனுமதிக்கான அழுகைகள் சண்டைகள். நம்பிக்கை பொய்த்து போகும் பயணங்களின் முடிவுகள், புதிய நம்பிக்கை ஒன்றை திரட்டி கொண்டு திரும்பும் திடங்கள். எத்தனை எத்தனை எனக்குள் நான் நிகழ்த்திய உரையாடல்கள். பஸ்ஸைவிடவும் ரயிலைவிடவும் மனம் விரைந்த வேகத்தில் சென்று தொட்டு வாழ்ந்து முடித்த கணவுகள். எனக்கு நானே சொல்லிகொண்ட மீட்பு முயர்ச்சிகளும் திட்டங்களும் எத்தனை.

எந்த மாறுதல்களும் நிகழாத என் அதே வீட்டில் பெரிய அளவில் பிரச்சனைகள் நிகழாமல் இப்பொழுது இந்த நாட்களில் என்பாட்டுக்கு இருக்கிறேன். பழகிகொண்டேனா ? வேகம் குறைத்து விட்டதா? எனக்காக வீடு பழகிகொண்டதா ?

அப்பாவால் இரண்டு முறை மனநல மருத்துவரிடம் அழைத்துசெல்லபட்டேன். இன்னொரு முறை நானே அழைத்துசெல்லும்படி சொல்லி கல்லூரி அண்ணன் ஒருவர் அழைத்து சென்றார்.சத்தங்களை குறித்து அச்சம் இரவை குறித்தும், இன்னும் சில உள்அடுக்குகள்.2019ல் கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவிய நாட்களில், கோவைக்கு செல்லும் ரயிலில் தூங்க முடியவில்லை. பாத்ரூம்களின் இருளுக்குள் இருக்க முடியவில்லை. சென்னையில் மாம்பலத்தில் தங்கியிருந்த மேன்ஷன் அறைகள் எப்பொழுதேனும் தீ பிடிக்கலாம், காரணம் அது முன்பகுதியில் ஒரு ஹார்டுவேர் கடையும் கூட, அந்த பாத்ரும் சல்லடைகளில் இருந்து எப்பொழுதும் பாம்பு வரலாம் காரணம் அது ரப்பர் சல்லடை தண்ணியில் மிதந்து மேலே வரும் , எனவே முகத்திற்கு சோப்பு போடும் பொழுது கண்களை விரிய திறந்து அதை பார்க்க வேண்டும். நான் அடைதிருக்கிறதா என்று சரிபார்த்த தாழ்பாழ்கள், கேஸ் சிலிண்டர்கள் எத்தனை. ஏதோ தவறு இழைத்து விட்டோம், யாரையோ புண்படுத்தி விட்டோம் என்ற மனநிலை. நன்பர் ஒருவர் மணம் பாதிக்கபட்டிருந்தை கேள்விபட்ட பொழுது..நான் இருக்கும் நிலை நினைவுருத்தபட்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்பொழுது ஆள் இல்லாத முருகன் மேன்ஷனில் தனியாக இரவுகளில் தூங்க விளக்கு அனைக்க முடியாமல் வெளிசத்தில் படுத்துகிடந்துதேன் அரியர்கள் எழுத.ஐந்து நாட்கள் விடுமுறை, தனியாக இருக்க பயந்து இரண்டு பரிட்சைகளை விட்டுஊருக்கு சென்று அடுத்த ஆறு மாதங்கள் கழித்து எழுதினேன்.

இப்பொழு எப்படியோ அந்த மனநிலைகளை பெரிய அளவில் நானே கடந்துவிட்டேன்.
அவைகள் உளநோய்கள்தான், நான் விரம்பி ஏற்று கொள்ளவில்லை. ஒரு லவ்கீக பிரச்சனையும் உணர்சிகரமான மணதும் மெல்ல மெல்ல நம் மணநிலையை மாற்ற, நாமே திகைத்து பார்க்கும் கணம் ஒன்றில் நாம் வேறு ஒருவராக மாறிவிட்டருக்கிறோம்.

தாத்தா ஆத்தா என இன்னும் நெருங்கியவர்களின் மரணங்களை மிக அருகே உணர்ந்தவன் நான். மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் என் அப்பத்தா இரவொன்றில் “நாம…இந்த உயிர்னா என்னாடா.. காத்துதான..யான்டா பிரதீப்பு….”என கேட்கிறாள். வீட்டில் அத்தனைபேர் இருக்க அதையேன் அவள் என்னிடம் கேட்கிறாள். கேட்டுவிட்டு அழுகிறாள். ஆனால் அடுத்த நாள் காலையில் வழக்கம்போல் கடுமையாக உழைக்கிறாள்.

பெரியஅளவில் நம்சூழலில் மாணவர்கள் பண்ணிரண்டாம் வகுப்புவரை அடைந்து வைக்கபடுகிறார்கள். கல்லூரிகள் தான் அவர்களுக்கு சுகந்திரங்களை வழங்குகின்றன. காதல், சுற்றுலா, கொண்டாட்டம் எல்லாம் அப்பொழுது தான். ஆனால் அதுதான் ஒருவன் வாழ்கையை தன் பாதையை முடிவுசெய்ய வேண்டிய வயது. அதே சமயம் வாழ்க்கை சில மாணவர்களுக்கு மாணவிகளுக்கு கொண்டாட்டத்தை வழக்கும் காலமே கல்லூரி காலம் மட்டுமாகிவிடுகிறது.ஏதோ ஒரு விதத்தில் கல்லூரி நாட்களை அனைவரும் நினைவு கூறுகிறார்கள். இங்கு பெரும்பாலும் மாணவர்கள் தன் கல்லூரி பாடத்தை தேர்வு செய்வது பெரிய தற்செயல் ஒரு accident. நம்மை சரியாக வளிகாட்டவோ கல்லூரிகள் பல்கலைக்கழங்கள் பாடபிரவுகளை பள்ளியிலேயே அறிமுகம் செய்து வைக்கவோக ஆட்கள் இல்லை . நாமாக முட்டி மோதி தட்டி தடுமாரி ஒருமாதிரி கல்லூரி கல்வி பிடிகிடைக்கிறது. என் பண்ணிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வந்து இரண்டுநாட்களுக்கு பின்தான் என் மேல்படிப்பு குறித்து சிந்திக்கவே துவங்கினேன். பின் பி.எஸ்.ஜீ BA sociology வரை வந்ததெல்லாம் ஊழ் நிழ்த்திய பகடை. சரியான வழிகாட்டுதல்களோ வாய்ப்போ இன்றி தான் கல்வியும் வாழ்வும் முடிவுசெய்யபடுகிறது.

ஏன் ஒரு நன்றாக படிக்கும் மாணவனாக என்னால் இருக்கமுடியாமல் போனது. இத்தனைக்கும் டான்பாஸ்கோவிலும் பி.எஸ்.ஜீ யிலும் படித்தேன்.

கல்லூரி முடியபோகும் நிலையில்.ஊருக்கு செல்வது முடிவானபின் நாற்பது நாட்களுக்கு மேல் சிகிரட் பிடிக்காமல் இருந்திருந்த நான், கிழம்புவதர்க்கு முந்தைய நாளின் இரவில் குடிக்கு பின்பு கடைசி என நினைத்து புகைத்த சிகிரெட் கொடுத்த கசப்பில் கண்ணீர்விட்டு அழுதேன். அன்று சிகிரெட்டை கடந்திருந்தால் என் நாட்கள் வேறுமாதிரி இருந்திருக்குமோ.

புயல் குழைத்த வாசல் முற்றுத்து மரங்கள் என நாட்கள். ஒடிந்தும் குழைந்தும் அழுகையின் ஒவியம்.

இந்த நாட்களில் தான்:
14-5-2019 வெண்முரசு வாசிக்க துவங்கினேன்- ஒரு வருடம் ஆகி விட்டது- இது வரை எட்டு நாவல் வரிசையாக வாசித்துள்ளேன்.
தாஸ்தவஸ்கியை படிக்க துவங்கினேன்.
தூங்கிகொள்ளல் என்ற சிறுகதை ஒன்று எழுதினேன் .
Nov 2 2019 குறிப்பொன்று எழுதி, குடியையும் சிகிரட்டையும் விட்டேன்.
18 19 arrear paper களை எழுதி டிகிரி முடித்தேன்.

ஜெயமோகனின் “ஒழுங்கே உண்மையான சுதந்திரம் ” என்ற ஜப்பான் கீர்ரோவிய வரியும். “நெறிகள் ஒருமுறை மீறப்படும் பொழுது பின் அவைகள் நெறிகளாக இருப்பதில்லை” என்ற வெண்முரசு வரியும். மணபிறழ்வின் விளிம்பில் துருபதனை மூனிவர் ஒருவர் அடித்து மீட்க்கும் வெண்முரசு காட்சியும். எனக்கு பெரிய உதவியாகவும் துனையாகவுமிருந்தன.

பொதுவாக என்னை யாரும் குறைகூருவதோ, என்னால் இயலாதென்று அவர்களால் சொல்லபடுவதோ எனக்கு பிடிக்காது. எனவே அதற்கு வாய்ப்புகள் வழங்காமல் இருக்கலாம்.

போன காலமும் உடலும் போனதுதான், அனுபவம் என்று கொள்ளளாம்.ஏன் நாட்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை ? முகங்களும் ? மனநிலைகளும் ?

“நாள் என ஒன்றுபோல் காட்டி”

ஒன்று சொல்லலாம் இந்த நாட்களில் இந்த என் மனநிலைகள் ஒரு கவிதை படிக்கும் பொறுமையை, இசை கேட்க்கும் நுன்மையை தேவையை வாய்ப்பை என்னுள் உருவாக்கியதில்லை. தன்னைதானே எரித்து அடங்கிய ஒருத்தியின் மகன் நான். அவளின் வேகம் என்னிள் குடிகொண்டிருந்த நாட்கள் அவை, அவளுடைய வயதும் கூட. அம்மா இருந்திருந்தால் இந்த வாழ்க்கை வேற மாதிரியாக இருந்திருக்கலாம்.

கட்டும் கோட்டையில் இருக்கும் பொறுமை அதை அழிக்கும் ஆவேசத்தில் இருப்பதில்லை. ஏன் அந்த நாட்கள் அப்படி இருந்தன. ஏன் இந்த ஒன்றை வருடங்கள் என்னை மெல்ல அழித்துகொண்டபடி இருந்தேன் ஏமாற்றமா, என் வீட்டின் அப்பட்டமான எதார்த்தமா, மறுபடியும் முதலிலிருந்து துவங்கலாம் என்று எண்ணியா.. அது முடியாது என்று காட்ட ஒரு குமரகுருபரன் இறக்க வேண்டியிருக்கிறது. கனவுகளுக்கு எதார்த்தங்கள் வாழும் வீடுகள் நேர் எதிர். அதனால் அறைகள் தேடி அழைந்தேன் . ஏன் எதற்காக அப்படி குடித்தேன் புகைத்தேன், அழுதேன் வாழ்க்கை மேல் மோதி மண்டையை வெறிகொண்டு உடைத்தேன். அப்பா மேல் ஏற்பட்ட வெறுப்பா இல்லை என்மேல் எனக்கு ஏற்ப்பட்ட கோபமா. உடைத்த பொருட்கள்,உதிர்த்த வசை சொற்கள் எத்தனை.அடைந்த கசப்புகள் கழிவிரக்கங்கள், என் பூவிதழ் மணம் கசங்கிய நாட்கள். ஏன் அவை நடந்தது, ஒரு கதாபாத்திரத்தின் ஒருமையோடு அப்படி நிகழ்ந்துகொண்டிருந்து ஏன். ஒரு நல்ல முடிவைநோக்கி செல்லும் பாத்திரமாக நான் நடித்துகொண்டிருந்தேனா. எவர் நினைத்திருந்தால் அந்த நாட்கள் இல்லாமல் போயிருந்திருக்கலாம். மெழுகு இரும்பாவது போல் நம்கண் முன்பே நாம் அன்பற்றவனாக மாறுவதை அறிவது கொடுரமான கணங்கள். அப்பா எனக்காகவிட்ட கண்ணீர்? பாவம் அப்பா என் கூட இருந்தவர்களும்.

காலம் தன் கூர்வாள் ஏந்தி நிற்கும் களம் இது. நிகழ்ந்து முடிந்த நாட்களும், அதன் நிகழ்வுகளும் முடிந்தவைதான். இனி எஞ்சிய நாட்கள் மட்டும்தான்.

விலகி நின்று வேறு ஒருவானாக, இன்று பார்க்க முடிகிறது என்பதில் ஆறுதலும் இனி கவனமும் கொள்வதே நம்மால் முடிவது.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

**

(எனக்கு நான் எழுதிவைத்துகொள்ள நினைத்து எழுத்துவங்கிய இந்த வரிகள் இப்படியாக அமைந்தது.
இதையெல்லாம் பதிவிடலாமா என்று தெரியவில்லை – பொதுவாக நான் இப்படிதான் இருக்கிறேன்.இதைதான் எழுதமுடிகிறது.)

(உங்கள் யூகங்களுக்கு ஏற்ப்ப தேவையில்லாமல் சங்கடமெல்லாம் அடைந்து அறிவுரைகள் கூறுவது, மணவருத்தை பகிர்ந்துகொள்வது போன்ற காரியங்களை செய்யாதீர்கள்.இது அந்த பழையநாட்களை குறித்த பதிவு. நான் நன்றாக மகிழ்சியாக உள்ளேன்)

***

(20-5-2020)


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up