menu Menu
ஒர் தந்தையர் தினம்
என் அப்பாவின் எழுத்து 
By பிரதீப் Posted in அபுனைவு, அனுபவம் on October 22, 2026 0 Comments 4 நிமிட வாசிப்பு
ஏன் நாட்கள் ஒன்றுபோல் இல்லை, முகங்களும் Previous வியக்க பழகிய நாள் Next

ஓர் தந்தையர் தினம்

நேற்று அப்பா வழக்கமாக அழைக்கும் நேரமில்லாத வேறு ஒரு நேரத்தில் அழைத்திருந்தார். வாட்ஸ்அப்பில் அனுப்பியதை படித்தாயா என்று கேட்டார். நான் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னேன். இன்று தந்தையர் தினம் போலயே, அதான் அப்பத்தாட்ட அதோட அப்பாவ பத்தி சொல்லசொல்லி கேட்டு எழுதுனன், படிச்சுட்டு சொல்லு என்றார். அவ்வப்போது அப்பா இப்படி எழுதி அனுப்பும் வழக்கம் உருவாகியுள்ளது. அப்படி, கரண்ட்டே இல்லாத காலக்கட்டம் ஒன்றின் நிகழ்வு வாட்ஸ்அப் வழியாக நேற்று எனக்கு வந்து சேர்கிறது.

அப்பத்தாவுக்கு எழுபத்தி ஒன்பது வயது. அதன் அப்பாதான் அதன் ஒரே தெய்வம். அப்பத்தாவை அடிப்படையாக கொண்டுதான் நான் “பெயர்” என ஒரு கதை எழுதினேன்.

இதில் வரும் சாதி சார்ந்த பட்டபெயர்களை இனைப்பதா வேண்டாமா என்ற அறகுழப்பம். அப்பத்தா சொல்லி அப்பா எழுதியவைகளை அப்படியே நான் தட்டச்சுமட்டும் செய்திருக்கிறேன்.


சிவப்பு நிறம். இடுப்பில் ஒற்றை வேட்டி. குறுக்கு மாராப்பு துண்டு. சற்றே கணத்த மடி. கக்கத்தில் குடை. கொண்டை போட்டு கொஞ்சம் குனிந்த நடை. பூனூல் போட்டிருந்தால் புரோகிதர் போகிறார் என்றே சொல்லும் உருவம்தான் எங்கள் அப்பா.

நாங்கு இளைய சகோதரர்கள் அவர்தம் மனைவி மக்கள், மகிழ்ச்சியும் மக்களும் நிறைந்த குடும்பத்தில் மூத்தவராய் பிறந்த அப்பாதான் வரவு செலவு.

புள்ளவராயன் குடிக்காடிலிருந்து அம்மாபேட்டை எங்கே, நீடாமங்களம் எங்கே என கால் நடையாக ஒற்றை ஆளாக செல்வார்.

எனக்கு பத்து வயது இருக்கும். நானும் அச்சும் (ராமன்-இளைய அண்ணன்) கீழக்குடிக்காடில் படிக்கிறோம். அப்புகண்ணு (நடராஜன் – மூத்த அண்ணன்) அம்மா பேட்டையில் சாம்ப மூர்த்தி சேண்டபிரியர் வீட்டில் தங்கி படித்து கொண்டிருக்கிறது.

நாங்கள் விழிப்பதற்க்கு முன்பு புறப்பட்டு, நாங்கள் தூங்கிய பின்பு வீடு வருபவர் அப்பா. அன்று நாங்கள் விழித்த பின்பு நடுவீட்டில் அப்பாவின் பேச்சு அரவம் கேட்டு எனக்கு ஒரே மகிழ்ச்சி.

அப்பாவின் பேச்சு குரல் கேட்டு நடு கூடத்தை எட்டி பார்க்கிறேன், அப்பாவின் கால் மட்டும் தெரிகிறது, முகத்தை பார்க்க நான் தலையை நீட்டுகிறேன், “ஆயா” என என்னை அன்போடு அழைக்கும் அப்பா நான் பார்க்க கூடாது என தலையை வேறுபக்கம் திருப்பி கொள்கிறார்.

நீண்ட வாழையிலையில் எங்க அப்பா கால் தெற்க்காக தலை வடக்காக படுத்து கிடக்கிறார். கலங்கிய கண்ணோடு திரும்பிய என்னிடம் அம்மா சொன்னது ‘அப்பாவை பார்க்க கூடாது பெரியம்மை கண்டுள்ளது , இனி நீங்கள் பள்ளிக்கூடம் போக கூடாது’. அப்பாவின் அருகில் சென்று தோப்பு கரணம் போடச் சொன்னார்கள். நானும் சித்தப்பா பிள்ளைகளும் பயபக்தியாய் அவ்வாறு செய்தோம்.

அப்பாவிற்க்கு அவரின் தாயார் அமிர்தம் மட்டும் அருகில் இருந்து பணிவிடை செய்கிறார்கள். பொன்னாப்பூரிலிருந்து ஆண் ஒருவர் பெண் ஒருவர் என இருவர் ‘அம்மாப்பிள்ளை’ என வந்து காலை மாலை வேப்பிலை கொண்டு அப்பா அருகில் குழை அடித்து வருந்துகிறார்கள்.

நான் தோப்பு கரணம் போடும் போதெல்லாம் கண்களை இருக மூடி கொள்வேன். அப்பாவின் உடம்பெல்லாம் இடம் இல்லாமல் தக்காளி பழம் போன்ற கொப்பளங்கள். அப்பாவின் முனகல் சத்தம் கேட்டு கொண்டே இருக்கும் ரொம்ப மெல்லியதாய்.

அம்மாபிள்ளைகள் சொன்னார்கள் “அம்மாவின் உடம்பு (அப்பா) தீயை கொட்டியது போல் எரியும் அம்மன் கோயில் சென்று (விக்ரகத்திற்கு) அம்மாவிற்க்கு தண்ணீர் ஊற்றுங்கள் அம்மாவிற்க்கு எரிச்சல் குறையும்”

அதன்படி மாவடி அம்மனுக்கு காலையும் மாலையும் எண்ணிக்கொண்டு ஐம்பது ஐம்பது குடம் தண்ணீர் ஊற்றினேன். என் கால்களும் கைகளும் கடுத்தது எனக்கு சந்தோசமாக இருந்தது (எவ்வளவு முட்டாளாக தண்ணீர் ஊற்றி இருக்கிறேன் என்று எனக்கு விபரம் தெரிந்த நாளில் புரிந்தது).

எங்கள் சித்தப்பாக்கள் வாழை இலை கொண்டு வந்து போடவும் அகற்றவும் செய்கிறார்கள். வீட்டில் அம்மை கண்ட நாளிலிருந்து உலை வைக்க மாட்டார்கள், வைக்க கூடாதாம். காலையில் எழுந்து ஒரு பாத்திரத்தை எடுத்துகொண்டு தெருவில் வீடுவீடாக சென்று அவர்கள் தரும் பழைய சாதத்தை வாங்கி மோரும் வெங்காயமும் சேர்த்து பிசைந்து அப்பா அவர்களுக்கு ஒருவாய் ஊட்டிவிட்டு அவர்களால் அவ்வளவு கூட சாப்பிட முடியாது பிறகு நாங்கலெல்லாம் சாப்பிடுவோம். மதியம் இரவுகளுக்கு எல்லாம் உற்றாரும் உறவினரும் சமைத்து வீட்டு வாசலில் வைத்து விட்டு சென்று விடுவார்கள் அதை சாப்பிட்டு கொள்வோம்.

ஒவ்வொரு நாளும் அம்மாபிள்ளைகள் குழை அடித்து வருந்தி விட்டு சித்தப்பாக்களிடத்தில் எதாவது சொல்லிவிட்டு செல்வார்கள். அப்படி ஒரு நாள் மணம் வீசுகிறது என்றார்கள். அவர்கள் சென்றபின் பெரியவர்களிடத்தில் கேட்டேன் அம்மை கண்ட இடத்தில் சதைகள் பியிந்து பியிந்து விடுமாம் அதைத்தான் மணம் வீசுகிறது என்றார்களாம்.

அம்மை கண்டு 30 நாள் நெருங்குகிறது. எங்க அம்மா மாட்டு கொட்டகையில் கொஞ்சம் குரல் உயர்த்தி ஒப்பாரி வைக்கிறது. வீட்டில் எல்லார் முகமும் கண்ணீர் வழிந்த படியே உள்ளது. பெரியவர்கள் அழகூடாது என்று மற்றவர்களிடத்தில் அழுதுகொண்டே சொல்கிறார்கள்.

என் மனசு என்னென்னமோ நினைக்கிறது அப்பா எப்படி எல்லாம் வேதனை படுவார், என்னிடத்தில் என்ன சொல்ல எண்ணி கொண்டு இருப்பார். ஊசி விழுந்தால் ஓசை கேட்க்கும் அப்படி ஒரு அமைதி. பல்லி தொடர்ச்சியாக சப்தமிடுகிறது. சுலோச்சனா அப்பா சொல்கிறார்.. திங்கள் கிழமை தெற்கே பல்லி சொல்கிறது ஏதோ நடக்க போகிறது என்று சொல்கிறார்கள்.

தூரத்தில் நின்று நாங்கள் பார்க்கிறோம். சிறுக சிறுக காசு பணம் சேர்த்து பெருக பெருக நிலபுலன்கள் வாங்கி ஊருக்கு உயர்ந்த குடும்பங்களில் சம்மந்தம் போட்டு, உக்கடை அப்பாவு தேவர் அருகில் அமர்ந்து பேசும் அறிவார்ந்த எங்க அப்பா உடம்பு வடக்கே தலைவைத்து தெற்க்கே கால் நீட்டி வாழையிலையில் வாடி கிடக்கிறது.

அப்பாவின் அருகில் பெற்ற தாய் அமிர்தம், பொன்னாப்பூர் அம்மா பிள்ளைகள் இருவர் அந்த அறையில் உள்ளனர். பெரியவர்கள் எல்லாம் ஒன்னும் ஆகாது அழுவாதிங்க அழுவகூடாது என்று ஒருத்தருக்கு ஒருத்தரும் தமுக்கு தாமேயும் ஆறுதல் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

அப்பா அறையிலிருந்து அம்மாபிள்ளைகள் வெளியில் வந்தார்கள். அனைவரும் அவர்கள் முகத்தை பார்க்கிறோம். வெளியில் வந்த அம்மாபிள்ளைகள் எதுவும் சொல்லாமல் தெருவுக்கு வந்தார்கள், எதுவும் சொல்லாமல் ரோட்டில் கிழக்கு நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் குலுங்கி குலுங்கி வாயில் துண்டை வைத்து அமுக்கிக்கொண்டு அழுகிறார்கள்.

அப்படி அம்மாபிள்ளைகள் எதுவும் சொல்லாமல் போய்விட்ட்டால் உயிர் அடங்கிவிட்டது என்று அர்த்தமாம்.

அம்மாபேட்டையில் படிக்கும் அப்புகண்ணு அண்ணனுக்கு தெரிவிக்காமல் அவர் வரமலும் அப்பாவை கைபாடை கட்டி தூக்கி செல்கிறார்கள். அதில் அப்பா குழந்தைபோல சுருண்டு கிடக்கிறார். வீட்டிலிருந்து தெற்க்கே கொல்லையில் குழி தோண்டி என் அப்பா எனும் உயிரை அடக்கம் செய்துவிட்டார்கள்.

*


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up