menu Menu
வியக்க பழகிய நாள்
அப்பா - வாழ்க்கை
By பிரதீப் Posted in அபுனைவு, அனுபவம் on October 22, 2026 0 Comments 20 நிமிட வாசிப்பு
ஒர் தந்தையர் தினம் Previous தென்றலின் அறிமுகம் Next

வியக்க பழகிய நாள்

பகவத் கீதை| சாங்கிய யோகம்| பாடல் 29

இந்த ஆத்மாவை
“வியப்பென ஒருவன் காண்கிறான்
வியப்பென ஒருவன் சொல்கிறான்
வியப்பென ஒருவன் கேட்கிறான்
கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்”

**

ஒரு காப்பியை குடித்துவிட்டு வந்து இதை எழுத துவங்குகிறேன். எதையாவது எழுத வேண்டும் என்ற மனநிலை

நான் முதன் முதலில் டார்வின் என்ற சொல்லை எப்படி கேட்டேன் என்பதை குறித்ததுதான் இது. நான் நான்காவது படித்த போது நான் படித்த கிருஸ்த்துவ பள்ளியில் நண்பர்கள் மத்தியில் “கடவுள் இல்லை” என்பதை அறிவித்தேன். அந்த தகவல் வகுப்பு ஆசிரியை வரை சென்றது. செல்ல வேண்டும் என்றுதான் சொன்னேன். அவர் என்னை எழுப்பி “ஏன்” என்றார். என் அப்பா சொன்ன கதையை நானே சொல்வது போல் சொன்னேன். “யார் உனக்கு இதை சொன்னது” என்று ஆசிரியை கேட்டார். “அப்பா” என்றேன். ஆசிரியை “டார்வின்” என்றார். அப்பா சொல்லி நான் சொன்ன அந்த கதையை சொல்வதற்க்கு முன்னால் சிலவற்றை சொல்ல வேண்டி இருக்கிறது.

இதுவரை இரண்டு முன்று முறை பகவத் கீதை படித்துள்ளேன். துயரத்திற்க்கு செல்வதும் திரும்பி அதற்க்கு வந்து விடைகளும் வழிகளும் தேடுவதும் வழக்கம். Easy way to quit smoking என்ற Allen Car உடைய நூல் வழியாக புகைப்பிடிப்பதற்க்கான அடிமை தனத்திலிருந்து உலகம் முழுக்க பலர் விடுதலை அடைந்துள்ளனர். மிக எளிதாக எந்த சிரமமும் இன்றி இன்றே அந்த பழக்கத்தை விடுவது எப்படி என்பதை அவர் அந்த நூலில் பேசுகிறார். மருத்துவர்களின் வழிமுறைகள் நூல்களைவிட இவருடையது பிரபலமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்துள்ளது. நாற்பது வருடங்கள் நாள் ஒன்றுக்கு நூறு சிகிரெட்டுகள் வீதம் குடித்து அந்த பழக்கத்தை விட்டவர்தான் தான் அலன் கார். தன்னுடைய அனுபவத்திலிருந்து அந்த நூலை எழுதுகிறார். பல வழிமுறைகளை கையாண்டு தோற்று இறுதியாக எப்படி அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைந்தார். அதற்க்கு அவர் கையாண்ட வழிமுறை எவ்வளவு துயரமற்றது எளியது என்று அந்த நூலில் எலன் கார் பேசுகிறார்.

நான் என் வாழ்வில் எப்படி Easy way to quit smoking என்ற நூலை படித்தேனோ அப்படிதான் கீதையும் படித்தேன். என்னுடைய வினாக்கள் சிக்கல்கள் துயர்களுக்கான விடைகள், வெளியேரும் வழிகள் ஆகியவற்றுக்கான தேடலில் பதிலாக அமைந்தைவை இந்த நூல்கள். எனக்கான நூல்களையும் விடைகளையும் ஆசிரியர்களையும் தேடுவது என் விடுதலைக்கான வழிமுறை. கீதையை படித்த பின் என் துயரங்கள் எல்லாம் ஒரு நாளில் விலகிவிட்டன என்று சொல்லமுடியாது. அதன் வழியாக நாம் எடுக்கும் தீர்க்கமான தெளிவான முடிவொன்றுக்கு பின்னால் அனைத்தும் மாறிவிடுகிறது. சிகிரெட்டை விடுவதை போலவேதான். Easy way to quit smoking நூலில் Allen Car துவக்கத்தில் நமக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கிறார் ‘இந்த நூலை இறுதிவரை நீ வாசித்து முடித்தால் அதன் பின் நீ கட்டாயம் சிகிரெட் புடிக்கமாட்டாய் என்ற வாக்குறுதியை நான் உனக்கு அளிக்கிறேன் இது சத்தியம் இந்த நூலை நீ முழுவதும் படித்து முடித்தால் மட்டும் போதும் வேறு எதுவும் செய்ய தேவையில்லை’ என்று சொல்கிறார். நூலின் இறுதியில் இந்த நூலை படித்த பின்னும் நீ புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்கிறாய் என்றால் நீ இந்த நூலை சரியாக படிக்கவில்லை என்று பொருள் ஆகவே திரும்பி படி என்கிறார். அப்படிதான் நான் திரும்பி கீதைக்கு சென்று கொண்டே இருக்கிறேன்.

துயரில் பல நாட்கள் சென்றிருந்தாலும். மேலே இருக்கும் பாடலில் உள்ள முதல் வரியையும் கடைசி வரியையும் தவிர நடுவில் இருக்கும் வரிகளால் நிறைந்திருக்கிறது என் வாழ்வின் பெருபாண்மை தருணங்கள். முதல் வரியும் இறுதி வரியும் என்னால் அறுதியாக பொருள் கொண்டு சொல்லும் தொலைவுக்கு அப்பால் உள்ளவை. அதனால் நடுவில் உள்ள முன்று வரிகளை மட்டும் குறித்தே இங்கே பேசுகிறேன் அவை மூன்றும் கொடுக்கும் பொருளிலேயே அவற்றை இங்கே கையாள்கிறேன். கலை என்பது நாம் எதை சொல்கிறோம் (Subject) அதை எப்படி சொல்கிறோம் (Craft) என்பதை பொறுத்து அமைகிறது. பகவத் கீதை என்ற சொற்களின் அர்த்தம் “கடவுளின் பாடல்” (Song of God). கீதையின் இசை ஒழுங்கும் சொற்தேர்வும் ‘வியப்பில்’ ஆழ்த்துபவை. தமிழில் இத்தனை அழகாக இருந்தால் மூலமொழி சமஸ்கிருதத்தில் அது இன்னும் எப்படி இருக்கும். அதுவும் கிருஷ்ணன் தான் யார் என்று கூறும் பகுதியில் வெளிப்படும் கலை அல்லது அழகு மகத்துவமானது. நான் மேலே குறிப்பிட்டுள்ள பாடல் பொருளும் அழகும் ஒன்றென ஆன பாடல். ‘வியப்பென ஒருவன் காண்கிறான். வியப்பென ஒருவன் சொல்கிறான். வியப்பென ஒருவன் கேட்கிறான்’. நல்ல உணர்ச்சிகள் அனைத்தையும் வியப்பென ஒரு சொல்லுக்குள் கொண்டு வரமுடியுமா? இயற்க்கையை அறிவதை அனுபவமாவதை வியப்பென ஒரு சொல்லில் சொல்லிவிடமுடியுமா? முதலில் நாம் ஏன் வியக்கிறோம்? வியதல் ஏன் நிகழ்கிறது? நாம் வியக்காமல் இருந்து விட்ட மறந்துவிட்ட தருணங்களால்தான் நாம் வியக்கிறோம்.

ஆறு மாதங்களுக்கு முன் என்னுடைய தன் வரலாற்றை எழுத வேண்டும் போன்ற எண்ணம் வந்தது. அறுபது வயதில் வர வேண்டிய எண்ணம் 24 வயதில் வந்தது. எழுதபோவதில்லை. ஆனால் அந்த எண்ணம் வர காரணம் வாழ்க்கையின் எடையை உதறி தள்ளிவிட்டு முன் செல்ல வேண்டும் என்ற உணர்வுதான். கபடி வாழ்க்கைகான நல்ல குறியீடு. முட்டி பேத்து கொண்டு வெளியே தப்பி வரலாம். ஓட்டை போட்டு வரலாம். ஜம்ப்படித்து வரலாம். டெக்னிக்கல் கேம் என்று சொல்வார்கள் அடிப்படாமல் தொட்டு தொட்டு புள்ளிகள் சேர்த்து போனஸ் போட்டு வெல்லலாம். சிக்கல்களுக்கு போக வேண்டிய நிர்பந்தமும் அதில் இருத்து தப்பித்து மீண்டு வந்தாக வேண்டிய கட்டாயமும் என வாழ்க்கை. உண்மையில் அந்த விளையாட்டுதான் சிக்கலே. கபடி களவில் இருந்து பிறந்த விளையாட்டாக இருக்கலாம்.

குரு நித்ய சைத்தய யதி-யின் முக்கியமானதும் மற்றும் நான் படித்த நூல்களின் எனக்கு மிக பிடித்த நூல் ‘சின்ன சின்ன ஞானங்கள்’. அதில் நித்யா தான் துறவடைந்த தருணத்தை குறித்த நினைவுகளை ஒரு கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார். நித்யா சிறுவயதில் ஒரு கதையை படிக்கிறார். தன்னை துரத்தும் ஈக்களிடம் இருந்து தப்பிக்க நரி ஒன்று வைக்கோலுடன் ஆற்றுக்குள் சென்று விடுகிறது. நீருக்குள் சென்ற நரி வைக்கோலின் ஒரு நுனியை வாய்க்குள் வைத்து கொண்டு மற்றொரு நுனியை நீருக்கு வெளியே விட்டு அதன் வழியாக காற்றை சுவாசித்து முழு ஆற்றையும் நீந்திக் கடப்பதன் வழியாக ஈக்களிடம் இருந்து தப்பிக்கிறது. வெகு நாட்கள் கழித்து நித்யா ஒரு ஆற்றை நீந்தி கடந்து மறுக்கரையை அடையும் போது மறுக்கரையில் நின்ற நடராஜ குரு அந்த தருணத்தில் நித்தியாவிற்கான துறவு ஆடையை வழங்குகிறார். நித்யா அந்த கட்டுரையில் ‘நரி ஈக்களிடம் இருந்து தப்பித்தது போல நான் உறவுகளிடம் இருந்து தப்பித்து விட்டேன் என்று நினைத்து கொண்டேன்’ என சொல்லிகிறார். அதை படித்தபோது இத்தனை தந்திரமானதா துறவு என்று நினைத்து கொண்டேன் என்று சொல்கிறார். கபடி விளையாடுவதிலிருந்தே தப்பிப்பது போல.

நான் கொஞ்ச நாட்களுக்கு முன் நண்பர்களுடன் ஒரு ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். ஒருவரின் பிறந்த நாளின் பொருட்டு கேக் வெட்ட பரிசுகள் வழங்க அங்கு கூடினோம். கேக் வெட்டி வாழ்த்துக்கள் சொல்லி சில உணவு வகைகளை சாப்பிட்டு அங்கிருந்து கிளம்பினோம். நாங்கள் அங்கு வந்திருந்த காரில் சென்று ஏறி கிளம்ப தயாரான தருணம் எங்களை ஒரு கிழவி உணவுக்காக தானம் கேட்டாள். என்னிடம் எந்த பணமும் இல்லை. ஜீபே மட்டுமே இருந்தது. என் நண்பரிகளிடம் முப்பது ரூபாய் சொச்சம் மட்டுமே சில்லரை இருந்தது. நண்பர்கள் அந்த பணத்தையும் உண்டது போக மீதி இருந்த கேக்கையும் அந்த கிழவியிடம் கொடுத்தார்கள். அந்த கிழவி தனித்தவள் அல்ல ஒரு இளம் வயது தாயும் நாளு வயது போன்ற தோற்றம் கொண்ட அவளின் மகனும் அவளோடு பிச்சை எடுத்தார்கள். தொலைவில் அமர்ந்திருந்த அந்த தாயையும் சிறுவைனையும் நோக்கி கையில் கேக் பையோடு அந்த கிழவி சென்றுவிட்டாள். அது ரெட் வெல்வெட் கேக். நாங்கள் உண்டதுபோக முக்கால்வாசி கேக் அப்படியே இருந்திருக்கும் . தூவி இருந்த தேங்காய் பூக்களில் மட்டும் சற்று காரிய மணம். மற்றபடி மிக ருசியான வண்ண மையமான கேக். ஆடையற்ற அந்த கரும் தோல் சிறுவன் அந்த கேக்கை எப்படி எதிர்கொள்வான். அது அவன் நெஞ்சுகளில் கனவுகளை நிறைக்குமா. அது இன்னும் பெரிய சாலைகளின் நடுவில் அவனை கொண்டு நிறுத்துமா. 

எனக்கு மிக பிடித்த மற்றொரு நூலான நினைவின் நதியில் சுந்தர ராமசாமி-யில் எழுத்தாளர் ஜெயமோகன் சுரா-வுடனான அனுபவம் ஒன்றை பகிர்கிறார். சுராவும் இளம் ஜெயமோகனும் மாலை நடை செல்கிறார்கள். வழக்கமான மாலை நடை. அப்பொழுது சுரா விடம் பிச்சை எடுப்பவர் ஒருவர் வந்து தானம் கேட்கிறார். சுரா தன் சட்டை பையில் பார்த்தபோது எந்த பணமும் இல்லை. இல்லை என்று சொல்லவும் கேட்டவர் விலகி செல்ல இவர்கள் நடையை தொடர்கிறார்கள். மெல்ல மெல்ல மெளமான சுரா சில மணி நேரம் கழிந்து ‘வெளிய வரப்போ பணம் இல்லாம இனி வரக்கூடாது’ என்று சொல்கிறார். தொந்தரவு அடைய தன் அகத்தை திறந்து வைப்பவனே கவிஞன். அந்த கேக்கு உன்னும் சிறுவனின் காட்சி எனக்கு ஒரு தொந்தரவு. இந்த பின்னணியில் ஏழாம் உலகம் நாவலில் உள்ள பிச்சைகார்களில் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் எப்படி புரிந்து கொள்வது. துறந்து ஒதுங்குபர்கள் வேறு வழியின்றி ஒதுங்கியவர்கள் வேறு. இரு வேறு மகிழ்ச்சிகளும் ஒன்றாவதில்லை. ஏழாம் உலகம் நாவலிலேயே ஒரு கதாப்பாத்திரம் முழுசாப்பாடு உண்டு பாயசம் அருந்தும் காட்சி வலுவானது. என்னை அழுக செய்தது.

சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். பெருநகரின் இருவழி சாலை. மழை. ஒரு சாலையில் விரைந்து செல்லும் கார்கள். மற்றொன்றில் வீதியில் வாழும் சிறுவர்கள் சாலையில் உருண்டு விளையாடி மழையை கொண்டாடுகிறார்கள். இப்பொழுது நான் கிராபிக் டிசைனராக ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறேன். இங்கு மார்கெட்டிங் சேல்ஸ் ஆகிய துறைகளில் பணிப்புரிபவர்களிடமிருந்து நான் தெரிந்து கொண்ட சொல் “Social Netwoking”. மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் பழக்கம்பிடித்து கொண்டு சமயங்களில் தொழில் நிமித்தமாகவும் தனிபட்டமுறையிலும் தேவையான உதவிகளை பரஸ்பரம் செய்து கொள்வது. இதை செய்வதற்கான நீக்கு போக்குகளும் திரண்களும் உண்டு. பேசுவது முதல் கால் நகம்வரை இதில் வகிக்கும் பங்கு மிக பெரியது. “Contact” என்று சாதாரணமாக பயன்படுத்தபடும் சொல்லின் துறை சார்ந்த சொல்தான் “Social Netwoking”. மனிதர்களோடு நட்பின் பொருட்டும் அன்பின் பொருட்டும் முதன்மையாக பழகாமல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுவார்களே என்று பழகுவது. இதை தவறு என்றோ சரி என்றோ முடிவெடுக்க போவதில்லை. தொழில்களை செய்யவும் இந்த வாழ்க்கையை வாழவும் இதுபோன்ற உறவு முறைகள் வழிமுறைகள் நமக்கு தேவையாக இருக்கின்றன. நாம் முன்னேற இவை மிக பயன் உள்ளவையாக உள்ளன.

வெண்முரசில் வரும் கிருஷ்ணனான இளையயாதவர் அதன் வாசகர்களுக்கு தெரிந்தது போல முடிவற்ற முகங்கள் கொண்டவர். அதில் ஒன்று அவருடைடைய Marketing & Social Networking Skills. தன்னுடைய அரசாங்கத்தை நிலைநிறுத்தவும், மகாபாரத போரை நிகழ்த்தவும், வேதத்தை அறுக்கவும் அவர் செய்யும் சூழ்ச்சிகள் கனிகருக்கு நிகரானதாவே வெண்முரசில் சொல்லப்படுகிறது. தன் காரியத்திற்க்காக புகழவும் அச்சுருத்தவும் மனம் அறிந்து சொல் எடுக்கவும் தெரிந்தவர் வெண்முரசில் வரும் இளையயாதவர். ராஜதந்திரி. அவர் அப்படி இருப்பதற்கான நியாயங்களும் வெண்முரசிலேயே உள்ளது. எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் ராஜதந்திரி என்ற மனநிலையை ஆளுமையை புரிந்துகொள்வதற்க்காக இன்றைய ராஜதந்திரிகளோடு ஒப்பிட்டு பார்க்கிறேன். கலைஞர் மு. கருணாநிதி, எடப்பாடி K. பழனிசாமி என இன்னும் எத்தனையோ ராஜதந்திரிகள் இருக்கிறார்கள். அத்தனை மனங்களும் விளைவுகளும் விசைகளும் மோதும் இடத்தில், அரசியலையும் வரலாற்றையும் தீர்மானிக்கும் இடத்தில் இருந்த இளையயாதவர் எப்படி கீதையை உரைக்க முடிந்தவராகவும் ஆன்மீகனாக அகஉயர்வை கொண்டவனாகவும் இருந்தார். பற்று அற்று செயல் புரி அதன் விளைவுகளிலிருந்து விலகி இரு, என்ற சொல்லின் முன்னுதாரணமாக அவர் வாழ்க்கை முற்றிலும் இரு எல்லைகளால் ஆனதாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் அடித்து செல்லும் பரவசத்துடன் முர்கூட் குன்ஹப்பா எழுதி, என். சேஷன் தமிழில் மொழிபெயர்த்து, என்.சி.பிடி வெளிட்ட “ஸ்ரீ நாராயணகுரு” என்ற நாராயண குரு வின் வாழ்க்கை வரலாற்று நூலை படித்தேன். என் அப்பா எப்பொழுதோ வாங்கிய நூல். அனைவருக்கும் தெரிந்ததுபோல நாரயண குரு நவீன கேரளத்தை உருவாக்கியவர். ஆன்மீகஞானி, அத்வைதி, சமூக சீர்திருத்தவாதி. மிக பெரிய அமைப்புகளையும் நிறுவனங்களையும் உருவாக்கியவர் ஆலையநுழைவு போரட்டங்களை முன்னின்று நடத்தியவர், சாதி சமைய வேறுபாடற்ற சகோதரதுவத்தை முன்வைத்தவர், ஆலையங்களை கட்டியவர், பள்ளிகளை உருவாக்கியவர், கேரளா முழுவதும் வெவ்வேறு குருகுலங்களை அமைத்துள்ளார், மாணவர்களை உருவாக்கியுள்ளரார். அவர் வாழ்க்கையை படிக்கும் பொழுது தோன்றுவது செயல்கள் அவர் வழியாக நிகழ்ந்துள்ளன என்பதுதான். அவரை ஒரு ராஜதந்திரி என்று சொல்லமுடியாது இல்லையா. அந்த குணமே அற்றவர். அவரும் வெண்முரசு இளையயாதவரும் வேறுபடும் இடம் என்ன. காந்தியை ஒரு ராஜதந்திரி என்று சொல்லமுடியுமா. காந்தியும் இளையயாதவரும் வேறுபடும் இடங்கள் என்ன. காரணங்கள் என்ன. அதுவும் வெண்முரசிற்க்குள்ளே இருக்க கூடும்.

பிறப்பு வழியாக மனிதன் அடையும் வேற்றுமைகள் ஈவுஇரக்கம் அற்றவை. நவீன வாழ்வில் பிறப்பு வழியாக மனிதன் இழக்கும் அல்லது பெரும் ஒன்று Social Network. நவீன வாழ்வில் அது முக்கியமான சொத்து (asset) ஆக உள்ளது. பிறப்பின் வழியாக தந்தையின் தாயின் சொத்து கிடைப்பது போல. பிறப்பு வழியாக தாய்தந்தையின் சாதி பெயரும் சமூக அந்தஸ்த்தும் தோற்றமும் கிடைப்பது போல. பிறப்புவழியாக குடும்ப உறவுகளும் சமூக உறவுகளும் அமைகிறது. நவீன வாழ்வில் இவை ஒருவனின் வாழ்க்கையை அவனின் குடும்பத்தின் அடுத்த கட்டத்தை நிலை நிறுத்த இன்றியமையாதவையாக இருக்கின்றன. ஒருவனுக்கு தந்தை தாய் முதல் குடும்பம். சித்தப்பா பெரியப்பா அத்தை மாமா மாமி போன்றைவை அடுத்த கட்ட குடும்பம். அடுத்த குடும்ப பெயர் குல பெயர் சாதி பெயர் வழியாக அமைந்த உறவுகள் இன்னொரு குடும்பம். மதம் அடுத்த கட்ட குடும்பம். ஆனால் இன்று நவீன வாழ்வில் மதம் குடும்பமாக இருந்து ஆற்ற வேண்டிய பணிகளை அரசாங்கம் செய்கிறது. உதாரணம் முன்பு மதத்தால் நடத்தப்பட்ட பள்ளிகள் இன்று அரசாங்கத்தால் நடத்த படுகின்றன. ஏழைகளுக்கு பின்தங்கிய அல்லது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு பள்ளிகூடங்களும் கல்லூரிகளும் மட்டுமே அவர்களை சமூகத்தின் போக்குக்குள் நல்ல பொருள்வய வாழ்க்கைக்கான தேடலுக்குள் கொண்டுவரும் அமைப்பாக வழியாக முதல் உறவாக இருக்கிறது. சிலருக்கு பள்ளி என்ற அமைப்பு மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே சமூக உறவு. அதுவும் அமைய பெறாதவர்களின் இரு வாழ்க்கையையே நான் மேலே குறிப்பிட்டேன்.

இதை இரண்டையும் சொல்ல வந்த காரணம் என் கண்ணுக்கு தெரிந்த இந்த இரண்டு வாழ்க்கையை விட என்னுடைய வாழ்க்கையும் அனுபவங்களும் மோசமானவை அல்ல என்பதற்காகதான். நல்லத்தங்கா கதையில். எங்கும் பஞ்சம். உணவுக்கே வழியில்லா நிலை. கணவன் விரட்டி அடிக்கிறான். பட்டினியாக கிடக்கும் தன் ஏழு பிள்ளைகளை அழைத்து கொண்டு தன் அண்ணனின் உதவியைதேடி பிறந்த வீட்டுக்கு செல்கிறாள் நல்லதங்காள். பாலம்பாலமாக வெடித்து பொருக்குகள் உள்ளங்கால்களை பொக்கும் வயல்கள் வழியாக நடந்து ஊர்களை கடந்து பிறந்த ஊர் வந்து அண்ணன் வீட்டை அடைக்கிறார்கள் நல்லதங்காளும் அவள் ஏழு குழந்தைகளும். அங்கு வீட்டில் அவள் அண்ணன் இல்லை. அண்ணி மட்டுமே இருந்தாள். வாசலோரம் மூட்டையாக குவிந்திருக்கும் மாம்பழங்களை எடுக்கபோன நல்லத்தங்காளின் குழந்தைகளை அதட்டி விலக்குகிறாள் அண்ணி. பொய் காரணங்கள் கூறி அப்போதைக்கான உணவை மட்டும் போட்டு திருப்பி அனுப்பி விடுகிறாள். திரும்பி செல்லும் நல்லதங்காள் தேடி வரப்போகும் தன் அண்ணன் திசை அறிவதற்க்காக தன் ஆடைகளை கிழித்து வழி எங்கும் போட்டபடி வருகிறாள். ஒரு கட்டத்திற்க்கு மேல் திசைகள் அற்ற நிலையில் நல்லதங்காள் பாலும் கிணற்றில் குழுந்தைகளோடு விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுக்கிறாள். ஏழு குழந்தைகளையும், ஒவ்வொறு குழந்தையாக கிணற்றுக்குள் தள்ளிவடுகிறாள். ஒரு குழந்தை கதருகிறது “ஓடி பொழைகுறம்மா உன் பேரு சொல்லுரம்மா…தப்பி பிழைக்குறம்மா தாய் பேரு சொல்லுரம்மா”. அந்த குழந்தையையும் தள்ளிவிட்டு தானும் கிணற்றில் விழுந்து இறக்கிறாள் நல்லதங்காள். கிணற்றுக்குள் விழுந்த குழந்தைகளில் ஒன்று வாண் நோக்கி “ஆ” என்று அலற இறக்கும் முன் அதன் வாயில் ஒரு துளி தேன் வந்து விழுந்தது. ஏழு குழந்தைகளும் நல்லதங்காளும் அந்த கிணற்றில் விழுந்து இறந்தார்கள். இந்த கதையை விட கடுமையான வாழ்க்கையும் மண்ணில் இருந்திருக்க கூடும். நிகழவும் கூடும். ஏன் என்றால் வாழ்க்கை அப்படி பட்டது. அதற்க்கு குறிப்பிட்ட நியதிகள் இல்லை. மனிதர்களுக்கும் பேர் இயற்க்கைக்கும் இலக்குகளும் ஒழுங்குகளும் இருக்கும் கூடும். வாழ்வின் துயரங்களில் இருந்து தப்பித்து மகிழ்ச்சியாக இருப்பதற்க்கான வழிமுறைகள் இருக்க கூடும். ஆனால் வாழ்க்கைக்கு அப்படி ஒழுக்கங்கள் உண்டா நியதிகளும் அதற்க்கே உரிய நியாயங்களும் உண்டா என்று தெரியவில்லை. ஆனால் சொந்த வாழ்க்கையில் அனுபவித்துதான் வாழ்வின் நியதியை அல்லது வாழ்க்கை என்ற இயக்கத்தை புரிந்துக்கொள்ள முயல வேண்டும் என்பதில்லை. தன்வாழ்க்கையாக பார்க்கும் கற்பனையும் கருணையும் அறிவுழைப்பும் இருந்தால் என்றாவது ஒரு நாள் காலையில் இருந்து மாலைவரை புதியதலைமுறை செய்திகளை போட்டுக்கொண்டு அமர்ந்தால் வாழ்க்கையின் அடிப்படை குறித்த அனைத்து வினாக்களுக்கும் சென்றடைய முடியம். ஆனால் என்ன எதுவுமே நடக்காமல் இயல்பாக கடந்த 99% வாழ்க்கைகளை பற்றி அவர்கள் எந்த செய்தியையும் போடமாட்டர்கள்.

2021 ஆண்டு மட்டும் இந்தியாவில் 165,033 மனிதர்கள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். சராசரியாக 450 மனிதர்கள் நாள் ஒன்றுக்கு தற்கொலை செய்துகொள்கிறார்கள். தற்கொலை செய்துக் கொள்ளாமல் எத்தனையோ கோடிபேரும் வாழத்தான் செய்கிறார்கள். இலக்கிய சூழலில் நாம் பயன்படுத்தும் அனுபவம் என்ற சொல்லை நாள் ஒன்று 450 மனிதர்களும் அவரை சார்ந்தவர்களும் அனுபவிக்கிறார்கள். மரணமும் தற்கொலையும் மட்டுமே வாழ்க்கை என்ற இயக்கத்தை உணர செய்யும் அனுபவங்கள் அல்ல. பஞ்சம், பட்டினி, அவமதிப்பு, உணர்வு சுரண்டல், ஆண் பெண் உறவு, துரோகம், போதை அடிமை, பலாத்காரம், மானுட கீழ்மைகளை எதிர்கொள்ள நேர்வது, விழுமியங்களும் அடிப்படைகளும் ஒன்றுமில்லாமல் ஆவதை நேர்க்கொண்டு பார்ப்பது, இயற்றையின் மகதுவத்தையும் குரூரத்தையும் காண்பது, இலக்கியம் வழியாகவும் கலை வழியாகவும் அறிவது, பிறரின் வாழ்க்கை பார்த்து அறிவது இப்படி. மழை பொழிவது போல வாழ்க்கை பொழிந்து கொண்டே இருக்கிறது, துளிகள் ஒவ்வொன்றும் மனிதர்களாக வாழ்க்கையை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் குரு நித்தியா “வாழ்க்கை என்ற கடலில் ஒரு துளிதான் இலக்கியம்” என்கிறார்

என்னுடைய அம்மா என் மூன்று வயதில் தற்கொலை செய்து கொண்டார்கள். எப்பொழுதும் காசு கொடுக்காத அம்மா அன்று இரண்டு ரூபாய் கொடுத்து முட்டாய் வாங்கி கொள்ள சொன்னார்கள். அதன் பின் என் அப்பா தான் என்னை வளர்த்தார். அப்பா அப்பத்தா தாத்தா சித்தப்பா சித்தி அவரின் பிள்ளைகள் என கூட்டுக்குடும்பம். மறுபுறம் தாத்தா,ஆத்தா,மாமாக்கள் என் தாயை இழந்தவர்களின் குடும்பம். என் அப்பாவுக்கு மறுமனம் நிகழ்ந்தது. இரண்டு ஆண்டுகள், திருச்சியில் ஒரு வருடமும் தஞ்சை நகரில் ஒரு வருடமும் எங்களோடு வாழ்ந்த அவர் ஒரு மகளுடன் எங்களை விட்டு விலகி செல்ல நேர்ந்தது. அதன் பின் என் அப்பா தான் என்னை வளர்த்தார். இதை நான் பச்சாதாபம் கொள்ள சொல்லவில்லை. என் அனுபவங்களை சொல்லி என்னை ஒரு கதாபாத்திரமாக செவிகளில் உளவவிடவும் சொல்லவில்லை. திருப்பி திருப்பி சொல்கிறேன் இந்தியாவில் மட்டும் நாள் ஒன்றுக்கு 450 பேருக்கு நடக்கும் வாழ்க்கை இது. இத்தகைய அனுபவங்கள் வழியாக பலரில் வாழ்க்கை குறித்த வினாக்கள் எழுகிறது, திசைகளும் இயல்புகளும் தீர்மானிக்கப்படுகிறது மற்றும் வினாவுக்கும் தேடலுக்கும் வதைக்கும் பின்னணியாக அமைகின்றது என்பதனாலேயே இங்கு இவை சொல்லப்படுகின்றன.

என்னுடைய அப்பா என்னை வளர்த்தார். ஊருக்கு சென்றால் இன்றுவரை என் ஆடைகளை துவைத்துப் போடுகிறார். அவராக நான் ஆகும் அளவுக்கு நான் அவரையும், நானாக அவர் ஆகும் அளவுக்கு அவர் என்னையும் நேசித்த நாட்கள் அவை. எனக்காக பூமர் வாங்கி வருவார். அதை நான் மென்று சார் எல்லாம் தீர்ந்து சக்கையாகி துப்பும் வரை அருகே அமர்ந்திருப்பார். நான் தூங்கிவிட்டாலும் சொல்லிய கதையை முழுவதும் முடித்திருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இரவும் நான் இடும் ஆணை. சைக்கிள் பின்னால் அமர்ந்து அவரை வயிற்றை சுற்றி இருக்கி கொண்டு செல்வது எங்கள் ஊருக்கு தெரிந்த காட்சி. கல்லூரி முடிந்து ஊருக்கு சென்ற போது கூட அவர் மிதிக்க நான் பின் அமர்ந்து சென்றேன். நான் இரண்டாவது மூன்றாவது படித்து கொண்டிருந்த பொழுது சைக்கிளின் இருக்கையில் பின் அமர்ந்து அவரை அணைத்தபடி “சிக்கிரட்ட விட்டுருப்பா செத்துபோயிருவன்னு பயமா இருக்கு” என்று சொன்னேன். அந்த தினமே அந்த பழக்கத்தை விட்டுவிட்டார். நான் சிகிரெட் பிடிப்பதை நானே பகிர்ந்து கொண்ட வெகு நாட்களுக்கு பின் அப்பா அந்த பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். “அப்பத்தா காசு செலவாகுதுன்னு சிகிரட்ட விட சொன்னுச்சு, நீ செத்துபோயிருவன்னு பயமாருக்குன்னு சொல்லி விட சொன்ன..நான் அன்னைக்கே விட்டுடன்”.

அப்பா அவ்வபோது புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். நாஞ்சில் நாடன் நூல்கள், கிரா சிறுகதை தொகுப்புகள், இரு நாவல்கள், சு.ரா 2000 வரைக்கும் வந்த சிறுகதைகள், தி.ஜா,வைரமுத்து, நாரயண குருவின் வாழ்க்கை வரலாறு என இன்னும் பல நூல்கள் எங்கள் வீட்டில் இருந்தன. நான் வாசித்த நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடர்க்க, அவர் வாங்கி வாசித்து வைத்திருந்த நூல். சாகித்திய அகாடமி விருது பெரும் நூல்களை வாங்கி விடுவார். தான் முன்பு எப்பொழுதோ வாசித்த ஆ.மாதவனின் நாயனம் கதை குறித்து இப்பொழுது அடிக்கடி சொல்வார். கி.ரா வின் கதவு கதை குறித்தும் பேசியிருக்கிறார். எழுத்தாளர் சுபாஷ் சந்திர போஸின் ஒரு நாவலை சொல்லி அதில் வரும் சாவு வீட்டின் சடங்கின் வர்ணனை அபாரமானது உன்னால் அப்படி எழுத முடியுமா என்று கேட்டார். அந்த எழுத்தாளரை அதிகம் கேள்விப்படாததால் நான் அதை கவனம் கொடுத்து படிக்கவில்லை. ஆனால் சமீபங்களில் அவரை குறித்த சிறு பதிவோ அஞ்சலியோ வாசித்த போது அப்பா சொன்னபோதே படித்து பார்த்திருக்கலாமோ என்று நினைத்து கொண்டேன். நான் கதைகள் எழுதுகிறேன் என்று அப்பாவுக்கு தெரிந்தபின் கி.ரா வின் முழு தொகுப்பை வாசித்து கொண்டிருந்தவர் கிராமிய வாழ்க்கை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எப்படி நான் கதைகள் எழுதபோகிறேன் என்று கேட்டார். அது இல்லாமலும் எழுத முடியும் என்று சொன்னேன். சற்றே பயமுறுத்தும் குளுகுளுப்பில் தத்துவம் போன்ற சொற்களை போட்டுவிட்டேன் (மடமைதான்). அப்பாவுக்கு கிராமிய வாழ்க்கையை சித்தரிக்கும் நூல்கள் மிகவும் பிடித்தவை. நான் இங்கு சென்னைக்கு வேலைக்கு வந்த பின் ஃபோனில் கண்மணி குணசேகரனின் உரை ஒன்றில் கண்மணி குணசேகரன் தனக்கு எப்படி எழுதுவதற்கான நேரம் கிடைக்கிறது என்று சொன்னதையும் அவர் சொன்ன சில நகைச்சுவைகளையும் பகிர்ந்து கொண்டார். இந்த ஆறு மாதங்களாக அப்பா வாசித்து தள்ளுகிறார். என்னைவிட அதிகமாக நூல்களை வாசிக்கிறார். சாய்வு நாற்காலி, டர்லின் சர்ட்டும் எட்டுமுழ வேஸ்டியும் அனிந்த மனிதர்கள், வெக்கை, பிறகு, கூடுசாலை, மரபசு போன்று வாசிக்கிறார். வாசிக்கும் நூல்களின் படங்களை வாட்ஸப்பில் முக படமாக வைக்கிறார். காவல் கோட்டம் வாசிக்க முயன்றார். ரொம்ப நேரமா ஒரே வரலாறா இருக்கே என்றார். குறைந்தது இருநூறு பக்கங்களை வாசித்துவிட்டு கதைக்குள் சென்றுவிடமுடியும் என்று சொன்னேன். முடித்தாரா தெரியவில்லை. முன்பு என்னுடைய நூல் அடுக்குதான் அவருடைய வாட்ஸ் அப் டிபியாக இருந்தது. நான் ஜெயமோகன் சார் உடன் இருக்கும் படம் ஒன்றை அவரிடம் காட்ட அதை சில தினங்கள் டிபியாக வைத்திருந்தார். நான் வெட்கப்பட்டு எடுக்க சொல்லவே சில தினங்கள் வைத்திருந்து விட்டு எடுத்துவிட்டார்.

அப்பாவின் ஊரில் அவருடைய இளமையில் திருவிழாக்களில் நாடகங்கள் எழுதி இயக்கியுள்ளர். அதனுடைய போஸ்டர் ஒன்றை கூட பத்திரமாக வைத்திருந்து இப்பொழுது எடுத்து காட்டினார். ஆர்.கென்னடி உதவி இயக்குனர் என்று எழுதிய அவருடைய கல்லூரி நோட்டை நானே பார்த்திருக்கிறேன். இளமையில் சிறுகதைகள் எழுதி அதை இதழ்களுக்கும் போட்டிகளுக்கும் அனுப்பியுள்ளார். அனைத்தும் திரும்பிதான் வந்திருக்கின்றன. அப்படி எழுதி அனுப்பி திருப்பியனுப்பபட்டதாக சொன்ன கதை ஒன்றை என்னுடன் பகிர்ந்திருக்கிறார். அம்மா இறந்த முதல் சில வருடங்களில் எழுதிய கதை. “சும்மாடே சுமையாய்” என்பது. சும்மாடு என்பது தலையில் பாரத்தை தாங்கவேண்டியதே அதுவே பாரமாவது குறித்த கதை. சமீபத்தில் அவர் இளமையில் எழுத நினைத்த கதை ஒன்று இரண்டின் கருக்களை கூட பகிர்ந்திருக்கிறார். அப்பா அவர் வாசித்ததை சொல்லி என்னை தொந்தரவு செய்த கதை ஒன்று உண்டு. அவரையும் அது வெகு நாட்களாக தொந்தரவு செய்துள்ளது. அதனால்தான் நினைவில் நீடித்துள்ளது. அப்பா அந்த சம்பவத்தை ஒரு போலீஸ் அதிகாரியின் தன்வரலாற்று நூலில் இருந்து படித்துள்ளார். நாளை தூக்கு தண்டனை நிறைவேறும் கைதி ஒருவன் இரவு முழுவதும் தொண்டைகிழிய அலறியதை தன்னால் தாங்கவே முடியவில்லை இன்று வரை அந்த ஓசையை தன்னால் மறக்க முடியவில்லை என்று அந்த அதிகாரி சொல்கிறார். அதை என்னிடம் சொல்லி “அவனுக்கு எப்படி இருந்திருக்கும்” என்று சொல்வார். என்னிடம் இதை முன்பே சொல்லிவிட்டார் என்பதை அவர் மறந்துவிடுவதால் அதை அவர் இரண்டு முறை சொல்ல கேட்டிருக்கிறேன். அதை சொல்லும் பொழுது அவர் முகம் அவனாக ஒரு கனம் மாறும். அவரே அந்த சிறையில் இருந்தவர் போல இருக்கும். உண்மையில் இருந்தவர்தான். நானும் இருந்திருக்கிறேன். ஜெயமோகன் சாரின் “விருந்து” சிறுகதை அந்த சிறையை கடந்தவனின் கதை.

என் அப்பா நேர்த்தியே உருவானவர். அவர் துவைக்கும் ஒவ்வொரு சட்டைகளும் அவரால் மட்டுமே துவைக்க முடிந்தவை. அவருடைய கையெழுத்து மிக மிக அழகானது. அவர் பின்னும் கீத்துக்கள் கடைகளில் வாங்குதைவிட ஒவ்வொரு கீத்தும் நெருங்கி கட்சிதமாக இருக்கும். அவர் தைக்கும் படுதாக்களில் கரும் எறும்பின் நிரைபோல நைலான் கயிற்றின் தடம் இருக்கும். கஞ்சி போட்டு அவரே துவைத்து கடைகளில் கொடுத்து தேய்த்த மடித்த துனிகள் கட்சிதமாக பைகளுக்குள் வைத்து பிரோவில் இருக்கும். அவர் சைக்கிளின் சீரான வேகம் ஒரு பறவை நிதானத்தை நினைவுருத்துவது. தன்னுடைய இந்த இயல்பு குறித்த பெருமிதமும் அவருக்கு உண்டு. அவரின் பொறுமையும் கட்சிதமும் என் சித்தப்பாவால் ஏளனமும் கிண்டலும் செய்யப்படும். சித்தப்பாவின் அக்கறையின்மை பொருப்பேற்க்கா தன்மை தொடர் குடி பழக்கம் அப்பாவால் தாங்கிக்கொள்ளவே முடியாதது. அண்ணனும் தம்பிகளும் எதிரும் புதிருமாக அண்ணன் எல்லாம் ஒன்றுபோலும் தம்பிகள் எல்லாம் ஒன்றுபோலும் உருவாவதன் விந்தையை கிராமங்களில் கண்டு வியந்தபடி இருப்பேன். ஒருவர் விட்டதை இன்னொருவர் நிரப்புகிறாரா ஒருவர் மறந்ததை இன்னொருவர் முதன்மையாக கருதுகிறாரா. தாயும் தந்தையும் அண்ணனுக்கு எதையும் தம்பிகளுக்கு எதையும் தருகிறார்கள் என்று கோட்பாடுகளை உருவாக்கும் அளவிற்கு சாத்தியங்கள் நிறைந்தது. பாண்டவர்களின் ஐந்து குணங்களையும் கலந்தால் வரும் முழுமை எது. அந்த வேறுபாடுகளை வகுத்தவள் குந்திதானே. பருவங்களில் ஒவ்வொரு நாளும் என் சித்தப்பா அவரே ஆற்றில் பிடித்து வீட்டுக்கு மீன்கள் கொண்டு வருவார் ஊரில் விற்ப்பார். அப்பா அசைவத்தை விரும்பி உண்ணமாட்டார். அவருக்கு பிராமணர்களின் மீது ஒரு மோகம் உண்டு. வாழ்வதர்க்கான உதாரணங்களை சொல்லும் பொழுது அவர்களை சொல்லியே சொல்வார். அவர்களிடம் பேச்சில் நடையில் உள்ள நிதானம் ஒவ்வொன்றையும் சிலாகிப்பது இழுத்து இழுத்து பேசுவது என அந்த பாவனைகள் அவரிடம் உண்டு. தஞ்சை பகுதிக்கே அந்த பழக்கம் உண்டு என்று நினைக்கிறேன். பஞ்சாயத்து போன்ற பொது சபைகளில் பிராமணர்களின் சொற்களும் இழுவையும் ஒவ்வொருவருக்கும் தானாக வந்துவிடுகிறது. தேவர் மகன் படத்தில் சிவாஜி பேசும்பொழுது வெளிப்படும் இழுவை அது தான். பின்பு பரவலாக சொல்லப்படுவது போல தமிழகத்தில் பிறசாதிகள் பிராமணர்களை வெறுக்கவில்லை. “ஐயரு, செட்டி” போன்ற வார்த்தைகள் தஞ்சை பகுதிகளில் பெண்கள் குழந்தைகளை கொஞ்சும் சொல்.

அப்பாவின் கட்சிதம் பற்றி பேசும் பொழுது இது நினைவுக்கு வருகிறது. நான் சென்னை வந்த பின் அழைத்திருந்தார். என்னுடைய புத்தக சேகரிப்பில் உள்ள நூல்களை எழுதி எழுத்தாளர் வாரியாக பட்டியல் போட்டுவிட்டார். அடுத்து தலைப்பு வாரியாக போடவேண்டும். இருப்பதிலேயே ஜெயமோகனின் நூல்கள்தான் அதிகம் அடுத்து தி.ஜானகிராமன் என்று துவங்கி நூறு சொச்சம் எழுத்தாளர்களையும் அவர்களின் நூலகளையும் ஃபோனிலேயே முழுவதும் சொல்லி முடித்தார். குழந்தையை பார்ப்பது போல அவர் சொல்வதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் திருப்பி திருப்பி சொல்லி கொண்டே இருந்ததால் நினைவுக்கு வரும் பழமொழிகளை இப்பொழுது டைரி ஒன்றில் எழுதிவைத்து கொண்டிருக்கிறார்

இது மட்டுமல்ல அப்பாவின் முகம். எல்லா தந்தையையும் மைந்தரையும் போல எனக்கும் அவருக்கும் சிக்கல் இருந்துள்ளது. கடுமையாக அடிப்பது வசை பேசுவது, தண்டனைகள் கொடுப்பது, அவமதிப்பது அவருடைய குணம். ஒரு கட்டத்தில் தீர்க்கமாக வெளிப்பட்ட ஆணவம் அகங்காரம், துன்புறுத்தி இன்பம் காணும் குணம் என அனைத்தும். ஒவ்வொன்றுக்கும் அவரிடம் அனுமதி கேட்க பயப்படுவதே என் நித்தம். இந்த குணங்கள் ஒன்றும் என்னிடம் இல்லாமல் அவரிடம் மட்டும் இருப்பது அல்ல. அவரை போன்றவனே நானும். அதனுடன் போராடி வேறு ஒருவனாக ஆக முயன்றபடி இருப்பவன். அவரும் இப்பொழுது மிகவும் கனித்திருக்கிறார். மரம் நிகழ்வது போல ஆளுமை நம்மில் நிகழ்கிறது. என் சிறுவயது முதல் கல்லூரி செல்லும் வரை அப்பா நடுவில் ஒரு பத்து வருடங்கள் சிறிய அளவிலான மனநல சிகிச்சைகளை எடுத்து கொண்டிருந்திருக்கிறார் என்பது அவரே சொல்லி எனக்கு சமீபத்தில் தெரிந்த தகவல்.

அப்பா என்னை தஞ்சையில் உள்ள அக்சீலியம் டான் போஸ்க்கோ போன்ற பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தார். ஊரில் அந்த பழக்கத்தை என் அப்பா துவங்கி வைத்த போது அது ஊரில் ஒரு பெரிய பேசுபொருள். நான் என் சித்தப்பா வழி தம்பி தங்கை என அனைவருமே பெரும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்க வைக்கப்பட்டோம். செவுரே இல்லாத வீட்டில் இருந்து நான் பி.எஸ்.ஜீ போன்ற கல்லூரிகளில் படிக்கவைக்க பட்டேன். குடும்பத்தின் 22 வருட வருமானம் என்பது முன்று பிள்ளைகளின் படிப்பு மட்டும்தான். அப்பா அவருடைய கனவையும் என் மீது போட்டு அவரின் ஒற்றை பற்று என என்னையாக்கி பெரிய பள்ளிகளில் படிக்கவைத்தார். கிராமத்தில் உள்ள பள்ளிகளில் படித்தபோது நன்றாக படிக்க முடிந்த என்னால் நகரத்தில் ஏனோ சரியாக படிக்கமுடியவில்லை. அதன் பொருட்டு என் அப்பாவின் அடிக்கும் வெறுப்புக்கும் ஆளாக வேண்டியிருக்கும். மூன்றாவது படிக்கும் பொழுது ஒரு முறை ஒரு தவம் போல “கடவுளே ஓ+ வாங்க வேண்டும்” என்ற பிரார்த்தைனையுடன் அப்பாவுக்காக படித்தேன். ஒவ்வொருநாளும் படித்து அந்த முன்றாவது மிட் டர்மில் ஓ+ வாங்கி சென்று அப்பாவிடம் காட்டினேன். ஏ + யில் இருந்து ஓ+ க்கு ஓரே பாய்ச்சல். ரேன்க் கார்ட்டை வாங்கி பார்த்துவிட்டு அப்பா ”வெரி குட்” என்றார். அவ்வளவுதான். ஒரே சொல். அல்லது இரண்டு சொல். இதற்காக இவ்வளவு உழைப்பதில் நியாயமில்லை என்று பட்டது. மறுபடி பழைய மதிப்பெண்களை விடவும் மோசமான மதிப்பெண்களை நோக்கி சென்றுவிட்டேன்.

இவளத்துயும் ஏன் சொல்லிவருகிறேன். அந்த ஒரு நாளை குறித்து பேச. அப்பொழுது நான் தஞ்சையில் அக்ஸிலியம் என்ற பள்ளியில் மூன்றாவதோ நான்காவதோ படித்துக்கொண்டிருந்தேன். இரண்டாவதில் தான் அப்பா அங்கு கொண்டுபோய் சேர்த்தார். வடுவூரில் இருந்து தஞ்சைக்கு நாற்பது நிமிடம் காலையும் மாலையும் பேருந்து பயணம். வடுவூரில் இருந்து தென்பாதிக்கு இருபது நிமிடம் சைக்கிள் பயணம் காலை மாலையும். என்னுடைய அடுத்த பத்து வருடங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நாள் நிகழ்வு அது. ஆனால் 2வது சேர்ந்த முதல் ஆறு மாதம் ஒவ்வொரு நாளும் அப்பா பேருந்தில் என்னை கொண்டு வந்துவிட்டு அழைத்து செல்வார். தஞ்சை ராமநாதன் பஸ் நிறுத்தத்தில் உள்ள மணிமண்டபத்தில் ஒவ்வொரு முழுநாளும் காத்திருந்து பள்ளி முடிந்ததும் திரும்பி அழைத்து செல்வார். அதன் பின் மன்னார்குடியில் இருந்து பேருந்தில் வரும் அதே பள்ளியில் உயர் வகுப்பு படிக்கும் அக்கா ஒருவருடன் என்னை இனைத்து விட்டார். காலை அந்த பெண் வரும் பேருந்து பார்த்து ஏற்றி விடுவார் அப்பா. மாலை அந்த அக்காவுக்கும் எனக்கும் ஒரு பள்ளியில் பொது மரம் இருக்கும் பள்ளி முடிந்ததும் நான் அங்கு வந்து நிற்ப்பேன் அந்த அக்கா என்னை அழைத்து செல்லும். வடுவூரில் பேருந்து நிற்குமிடத்தில் அப்பா நிற்பார் என்னை திரும்பி சைக்கிளில் அழைத்து செல்ல. இரண்டு வருடங்களில் நானே பேருந்தில் போய் வர கற்றுக்கொண்டேன். நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் காலம் வரை அப்பா சைக்கிள் கொண்டுவந்து பேருந்தில் ஏற்றிவிட்டார். சைக்கிள் ஓட்ட கற்று கொண்டபின் ஒரு நாள் இரவு தூங்கி எழுந்து வழக்கம் போல வாசலுக்கு வந்தேன் நடுவாசலில் ரத்தன சிகப்பு கலரில் மின்னி நிக்கும் ஒரு சைக்கிள். சர்பிரைஸ் என்ற சொல்லாடல் எனக்கு அன்று தெரியாது. அப்பாவுக்கு இன்றும் தெரியாது. அப்பத்தா அம்மி அரைத்து தோசை சுட்ட கதையெல்லாம் சொல்ல நேரமில்லை. ஆனால் அம்மா என்ற ஏக்கம் வரக்கூடாது என்பதற்காக என் அப்பத்தாவை அப்பாவும் சித்தப்பாவும் அப்பத்தா என்றே அழைத்தார்கள். வீடுகளுக்கு வரலாறுகள் எழுதப்பட்டால் பக்கங்கள் போதாது. பின் வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் அர்த்தம் இருக்காது அல்லது அதன் அர்த்தங்கள் மாற்றியமைக்கப்படும். அசோகமித்திரன் செய்ய முயல்வது அத்தகைய ஒன்றைத்தானா.

அன்று நானும் அப்பாவும் வயலுக்கு போயிருந்தோம். மாலை. நான்காவது படித்து கொண்டிருந்தேன். வயல் வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டு ஆற்றுக்கு வந்தோம். அந்தி. இருபுறமும் முடிவற்று திறந்திருக்கும் வயல் வெளிகள். அண்ணக் கூடையில் துவைப்பதற்கான என் பள்ளி உடைகள். தன் ஆடைகளை கலைந்து விட்டு வயிற்றுக்கு மேல் துண்டை கட்டி அண்ணக்கூடையுடன் மெல்ல கால் அடி எடுத்து வைத்து ஆற்றுக்குள் இறங்கினார் அப்பா. கண்ணன் ஆற்றை சிறு அணை தடுத்து நிறுத்தும் இடம் அது. அந்த அணை உடன் இணைந்த படித்துறை. நீரோட்டம் அற்ற நிலைத்த நீரில் அலைவூறும் பாசிகள். அப்பாவின் துண்டு உப்பி நீரில் ஊரி பின் நீருக்குள் சென்றது. வயிறு முழுகும் ஆழத்தில் நின்றுகொண்டு நீர் அள்ளி படித்துறையில் அவர் துவைக்க போகும் பகுதியை மட்டும் கழுவினார். மெல்ல நடக்கும் சடங்கை போல நதியைவிட மெளனமாக அவர் துணி துவைத்தார். நான் அவர் மெளனத்தை கலைத்தேன். சவுக்காரத்தை கொண்டு வழக்கம் போல காற்றில் பறக்கும் முட்டைகளை விட சொன்னேன். அவர் செய்து காண்பித்தார். வண்ணங்கள் மின்னும் கண்ணாடி முட்டைகள். பின்பு அந்த கேள்வியை கேட்டேன்.


“நம்மல்லாம் யாருப்பா படச்சா கடவுளா”

“எத்தன ப்ளாணட்ஸ் இருக்கு”

“ஒம்போது”

“நம்ம பூமி இது இந்த கோள்கள் சூரியன் இந்த பால்வெளி மண்டலம் இதுல்லாம் முன்னாடி ஒன்னா ஒரே பந்தா இருந்துச்சு. ஒரு கட்டத்துல அது வெடிச்சு இப்படி ஆச்சு. சூரியன், தன்ன தானே சுத்திக்கிட்டு அதையும் சுத்தி வர ப்ளாணட்ஸ்சுன்னு எல்லாம் உருவாச்சு. பஸ்ட்டு பூமி இப்புடி இல்ல. ரொம்ப வருசம் எரிஞ்கிட்டே இருந்துச்சு. அப்புரம் ரொம்பவருசம் பேஞ்ச மழைல அந்த தீ அனஞ்சு பூமில இருந்த குண்டுகுழிலல்லாம் தண்ணி தேங்குச்சு. அதுதான் ஆறு கொழம் கடல்லாம். ரொம்ப நாள் தேங்கியே இருந்த தண்ணில பாசி வந்துச்சு. அதான் பஸ்டு உயிர். அதல இருந்து மீனு தவக்கலன்னு ஒவ்வொரு உயிரா தோன்றுச்சு. அதுல இருந்து நிலத்துல வாழ்ர நாய் நரி சிங்கம் புலின்னு அடுத்து விளங்குகள்ளாம் தோன்ற ஆரமிச்சு. கடசியா கொரங்கு அதுல இருந்து நம்ம வந்தம்”

ஆற்றின் அடியிலிருந்து எழுந்து வந்து தன் நுனியால் நீரின் நுனியை தொட்டு ஆடும் அந்த பாசி பரப்பை பார்த்தேன். விண்ணை பார்த்தேன். அன்று வியந்த விழிகளால் இன்றும் செலுத்த படுகிறேன்.

*

[6.11.2022]


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up