menu Menu
தென்றலின் அறிமுகம்
காதல்
By பிரதீப் Posted in அபுனைவு, அனுபவம் on October 22, 2026 0 Comments 15 நிமிட வாசிப்பு
வியக்க பழகிய நாள் Previous கவிதைகள் Next

தென்றலின் அறிமுகம்

நான் பன்னிரண்டாம் வகுப்பில் 718 மதிப்பெண் எடுத்திருந்தேன். அப்பொழுது கல்வியில் என் கவனம் குவிந்ததில்லை. இப்பொழுது முழுவதும் அதில் குவிந்திருக்கிறது, திருக்குறளுக்கு நேர்மாறாக. பள்ளிக்காலம் முழுக்க வீட்டிலும் பள்ளியிலும் தண்டனைகளும் அடியும் பெற்றுக்கொண்டிருந்தேன். ஆண்டு விழாக்களில் நாடகங்கள் நடித்தேன். நகைச்சுவைகளை உருவாக்கி ஆசிரியர்களை கேலி பேசி வகுப்பில் அனைவரையும் சிரிக்க வைப்பேன். எதிர்காலத்தில் நான் எடுக்க போகும் சினிமாக்களை இரண்டு மணி நேரம் நண்பர்களுக்கு சொல்வேன், வகுப்புகளை கவனிக்காத அவர்கள்  அதை கவனிப்பார்கள். மணிக்கணக்காக பள்ளியிலும் ஊரிலும் விளையாடுவதன் வழியாக என் தந்தையின் எதிர்ப்பை சம்பாரித்துக்கொள்வேன்.

கல்வியில் எனக்கு  இருந்த பிரச்சனை ஏன் அவைகளை படிக்கிறோம் என்று தெரியாததுதான். எனக்கு சிறு வயதிலேயே வாழ்க்கை துவங்கிவிட்டது, கல்வியை கொண்டு என் குடும்பத்தையோ, தனிப்பட்ட பிரச்சனைகளையோ, ஏன் ஊரையோ, சமூகத்தையோ, இயற்க்கையையோ எப்படி புரிந்து கொள்வது என்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை.  வீட்டிலும்  பள்ளியிலும் கிடைக்கும் பாராட்டுக்காகதான் பல குழந்தைகள் படிக்கிறார்கள் அதற்க்கு அப்பால் கல்வி குறித்து அவர்களுக்கு ஆர்வமோ தேடலோ இல்லை என்பதுதான் என் யூகம். கல்வி  நமக்கு வேலையை வாங்கி தருகிறது. கல்வி வழியாக சமூகத்திற்க்கு தேவைப்படும் ஒன்றை நாம் பூர்த்தி செய்து, அந்த  செயலின் தேவைக்கும் இன்றியமையாமைக்கும் தக்கவாறு நாம் பொருளையும் புகழையும் மதிப்பையும் அடைகிறோம். ஆனால் இதற்க்கு அப்பால் கல்வி எதை நமக்கு சொல்கிறது. புவியியல், வரலாறு, தாவரவியல், விளங்கியல், வேதியல், இயற்பியல், அறம், விளையாட்டு இப்படி ஒவ்வொரு பாடமும் நமக்கு சொல்லி தருவது எதை. இங்கு நம் முன் விரிந்திருக்கும் அனைத்து கூறுகளையும் பகுத்து பகுத்து பாடமாக பிரித்து படிக்கிறோம். ஆனால் அனைத்தையும் தொகுத்து படிக்கிறோமா?

சிந்தனைக்கான பயிற்சி இன்றி எந்த கல்வியும் முழுமை பெறமுடியாது. தத்துவம் இன்றி ஒன்றையும் சிந்திக்க முடியாது. தத்துவம் என்பதை இங்கு இந்திய அர்த்தத்தை ஏற்றி சொல்கிறேன். அது, பிரம்ம வித்தியா (The Science of All Sciences அல்லது The Science of the Absolute). தத்துவம் நம் பாடத்திட்டத்தில் இல்லாதது அல்லது தத்துவார்த்தமாக பாடங்களை புரிந்து கொள்ளாதது இன்றைய கல்வியின் போதாமை. முன்பு எந்த பாடத்தில் முனைவர் பட்டம் பெருவது என்றாலும் தத்துவம் [M.phil – Master of Philosophy] ஒரு ஆண்டு படித்தாக வேண்டும் என்று இருந்த காரணம் இதுதான். இன்று அதையும் அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். Philosophy of Physics, Philosophy of Chemistry, Philosophy of Engineering என்ற பாடப்பெயர்களை கேள்விப்படும் தோறும், தத்துவம் இன்றி கல்வி முழுமை பெறமுடியாது, பயனுறு கல்வியே கூட மிக பெறிய வெற்றிகளை அடைய இது இன்றியமையாதது. அனைத்து மலர்களையும் ஒன்றினைக்கும் சரடு இது ஒன்றே என்ற உண்மை மேலும் உறுதியாகிறது. எனக்கே கூட Philosophy in Sports என்று ஒரு சுவாரஸ்யமான நூல் ஒன்றை எழுதலாமா என்ற ஆர்வம் உள்ளது.

எனக்கு தாய் இல்லை என்பதும் கிராம பின்னணியில் இருந்து நாற்பது நிமிடம் பேருந்தில் பயணம் செய்து வருகிறேன் என்பது என் பெரும்பான்மை ஆசிரியர்களுக்கு தெரியாத ஒன்று. நான் சரியாக படிக்காததற்க்கு காரணங்கள் சொல்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் நான் சொல்லவருவது அந்த தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்க்க முடியாது என்பதைத்தான். ஏன் என்றால் நான் வேறு பலவற்றில் சிறப்பானவனாக இருந்தேன். நடராஜ குரு தன் சுய சரிதையானா “Auto Biography of an Absolutist” என்ற நூலில் ஒரு தகவலை சொல்கிறார். கண்ணாடி போட்டிருக்கும் குழந்தைகளால் இயற்க்கையை கூர்ந்து கவனிக்க முடியாது தன் பார்வை குறைபாடு காரணமாக அவை வேடிக்கை பார்க்காமல் ஒன்றில் கவனம் செலுத்தும். இது தான் கண்ணாடி போட்ட பிள்ளைகள் நன்றாக படிப்பதற்க்கு பின்னால் உள்ள காரணம். கண் கூர்மை கொண்ட குழந்தைகள் புதிய உலகை தேடும். எப்படி நம் பள்ளி கல்வி முறை குறையை திறனாகவும் திறனை குறையாவும் பார்க்கும் இயல்பை கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து கோடை விடுமுறையில் வாலிபால் விளையாடி முடித்து வீடு வரும் பொழுதெல்லாம் கெமிஸ்ட்ரி வினாத்தாளை எடுத்து பாஸ் ஆகிவிடுவதற்க்கான சாத்தியங்களை நானாக மதிப்பெண் போட்டு பார்த்து கொண்டிருப்பேன். தேர்வு முடிவின் இறுதியில் 1200 மதிப்பெண்களுக்கு 718 எடுத்து தேர்ச்சியானேன். கெமிஸ்ட்ரியில் தேர்ச்சியாக வேண்டிய மதிப்பெண் 70-ல் இருந்து நான்கு மதிப்பெண்கள் கூடுதலாக பெற்றிருந்தேன். என் நெருங்கிய நண்பர்கள் ஐவரில் இருவர் தேர்வில் தோல்வியுற்றனர். பள்ளியிலேயே தோல்வியுற்றவர்கள் அந்த இருவரும்தான். நாங்கள் ஐவரும் ஆவோம் என்ற ஆசிரியர்களின் கணிப்பு பொய்யானது.

மேலே என்ன படிப்பது குறித்து என் அப்பாவின் நோக்கியா 2600 ஃபோனின் குட்டி திரையில் தேட துவங்கினேன். அப்பாவின் ஆலோசனையான டிப்லமோ, மாமாவின் யோசனைப்படி B.P.Ed, ஊர் வழக்கப்படி இஞ்சினியரிங் இது மூன்றையும் தவிர்த்து ‘பி.ஏ இங்கிலிஷ் லிட்ரேச்சர்’ படிக்கிறேன் என்று வீட்டில் அறிவித்தேன். என் மதிப்பெண்களிலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் நான் அதிகமாக இருந்தேன். அப்பாவின் ஃபோனில் செய்த ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் “சமூகவியல்” என்ற புதிய பாடத்தை கண்டடைந்தேன். அந்த பாடம் சென்னையில் இரண்டு கல்லூரிகளிலும் கோவையில் ஒன்றிலும் இருந்தது.

ஊரில் இருந்து முதன் முதலாக சென்னை தனியாக கிளம்பினேன். அப்பா மன்னார்குடியில் பேருந்து ஏற்றிவிட்டார். படப்பையில் நண்பர் ஒருவரின் அறையில் தங்கி லயோலா, அமெரிக்கன் காலேஜ் மற்றும் மெ.சீ.சீ ஆகிய கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பங்களை போட்டேன். அந்த அறையில் தஞ்சையின் வெவ்வேறு விவசாய கிராமங்களை சேர்ந்த நண்பர்கள் தங்கியிருந்தனர். சென்ற முதல் நாள், இரவு காட்சி படத்திற்க்கு போனோம். விஜய் சேதுபதி நடித்திருந்த பொறம்போக்கு. நண்பர்கள் யாருக்கும் படம் பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு பிடித்திருந்தது. அப்லிகேசனை போட்டு விட்டு ஊருக்கு சென்றேன். அடுத்த வாரமே ஒரு ரெக்கமண்டேசன் லெட்டர் வாங்குவதற்க்காக நானும் அப்பாவும் சென்னை கிளம்பி வந்தோம். இந்த முறை அத்தானின் கல்லூரி விடுதி அறையில் தங்கியிருந்தோம். சென்னையின் DPI கட்டிடத்திற்க்கு இரண்டு மூன்று தினங்கள் அலையவேண்டியும் அங்கே காத்திருக்க வேண்டியும் இருந்தது. கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள புத்தகக் கடையில் பிப்பின் சந்தராவின்  “கம்யுனலிசம்” என்ற சின்ன நூலை வாங்கினேன்.

ரெக்கமண்டேசன் லெட்டர்களில் எதற்க்கும் இருக்கட்டும் என்று கோவை பி.எஸ்.ஜீ கல்லூரிக்கும் வாங்கினேன். மீதி இரண்டும் லயோலாவுக்கும், எம்.சீ.சீ-க்கும். என் மதிப்பெனிற்க்கு சாத்தியமே இல்லாத கல்லூரிகள். ஆனால் சமூகவியல் என்ற பாடம் ஒரு வாய்ப்பை வழங்குமோ என்ற நம்பிக்கை இருந்தது. ஊரில் இருந்து தப்பிக்க வேண்டும், சென்னை செல்ல வேண்டும் என்ற என் இலக்கின் அடிப்படையில் லயோலாவை என் கனவாக வைத்திருந்தேன். சினிமா கனவும் உள்ளே இருந்தது. லயோலாவின் முதல் செலக்ஷ்சன் லிஸ்டிலும் அடுத்த லிஸ்டிலும் என் பெயர் வரவில்லை, வெய்டிங் லிஸ்டிலும் இல்லை. பி. எஸ். ஜீ-க்காக வாங்கிய ரெக்கமண்டேசன் லெட்டரை கோவையில் இருந்த உறவுக்காரர் ஒருவருக்கு அனுப்பி அங்கு அப்லிகேஷன் வாங்கி அவரையே அங்கு அனுப்ப சொன்னோம்.

அப்பொழுது கோவை பி.எஸ். ஜீ கல்லூரியில் எல்லா அட்மிஷன் வேலைகளும் முடிந்து கல்லூரியே வெறிச்சோடி இருந்த நேரம் என்பதை நான் பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். அந்த உறவுக்காரர் நேராக ப்ரின்சிபலின் அறைக்கே அழைத்து செல்லப்பட்டு இரண்டு மூன்று நாட்களில் ஒரு லட்சம்  நண்கொடை  அளித்தால் உடனே அட்மிஷனும் போட்டுக் கொள்ளலாம் என்ற தகவலை பெற்று எங்களுக்கு தெரிவித்தார். பணத்துக்காக சிறு சிறு முயற்ச்சிகள் செய்து தோற்று அவரிடமே ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு கேட்டோம். அவரும் தருவதாக சொன்னார். அடுத்த நாள் செம்மொழியின் அன்-ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் கோவை பயணமானோம். அவரின் வீட்டிலேயே தங்கி கிளம்பி கல்லூரிக்கு சென்று காத்திருந்து தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் பெற்று, நண்கொடையாக அதன் டிரஸ்ட்டுக்கு பணத்தை கட்டி அந்த கல்லூரியில் சேர்ந்தேன். ஒரு வாரம் கழித்து எந்த எதிர்கால பதட்டமும் இன்றி ஊரில் வாலிபால் விளையாடி கொண்டிருந்தேன். அங்கே சைக்கிளில் வந்த அப்பா பேச்சு இன்றி தன் ஃபோனில் ஒரு மெசேஜை காட்டினார் லயோலாவில் நான் சமூகவியல் படிக்க தேர்வு செய்ய பட்டுள்ளதாகவும் ஒரு ஆண்டுக்கான கல்வி தொகை 11000 ரூபாயோ அதை ஒட்டியோ கட்டி சேர்ந்து கொள்ளலாம் என்றும் அதில் இருந்தது.


ஒரு லட்ச ரூபாய் டொனேஷனாக கட்டிவிட்டமையால் நான் கோவையிலேயே படிப்பதாக முடிவானது. நான் மிக தாமதமாக சேர்ந்ததால் ஹாஸ்டல் கிடைப்பதில் ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் தஞ்சாவூரின் தொலைவு காரணத்தால் தருவதாக சொன்னார்கள். ஹாஸ்டல் ஃபீஸ் எண்பதாயிரத்திற்க்கு மேல் அது அல்லாமல் மெஸ் ஃபீஸூம்  இருந்தது. நானாக முன் வந்து வெளியே வேறு எங்கும் தங்கி கொள்ள முடியுமா என்று பார்க்கலாம் என்று அப்பாவிடம் சொன்னேன். எங்களுக்கு  அப்லிகேஷன் போட்டு வட்டிக்கு டொனேஷன் போட்ட அந்த  உறவு காரரே மேன்சன் அறை ஒன்றை பார்த்து அமைத்து கொடுத்தார். மாதம்  1200  வாடகை என்று நினைக்கிறேன். உணவுக்கு பணம் கேட்டால் அப்பா  ஏடிஎம்-ல் போட்டு  விடுவார். உணவு உட்பட ஒரு நாளைக்கு நூறு ரூபாய் செலவு செய்து கொள்ளலாம் என்று  நானே  எனக்கு ஒரு கணக்கு வைத்திருந்தேன். நான் இருந்தது  மேல் தளத்தில் ஒரு தனி அறை. காமன் பாத் ரூம். மற்ற அறைகளில் பெரும்பாலும் வேலைக்கு  செல்பவர்கள் இருந்தனர். அதிகம் கே.எம். சீ. ஹச் மருத்துவமனையில் செவிலியர் வேலை  பார்க்கும் மலையாள இளைஞர்கள். காலையில்  அறைக்கு  எதிரே  இருக்கும் குப்பை கூடைகளில் மது பாட்டில்கள் நிறைந்து கிடக்கும். அங்கு பதினெட்டு வயது கல்லூரி செல்லும் பையன் நான் ஒருவனே.


கல்லூரி சேர்ந்து முதல் ஆறு மாத காலம், வார இறுதிகள் தோறும் நானும் பிறை சூடன் என்ற நண்பன் இருவருமாக சினிமா பார்க்க கிளம்பி செல்வோம். என்னை போன்று கோவில்பட்டியின் கிராம பின்னணியில் இருந்து வந்த அவன் அணுக்கமானவனாக இருந்தான். அடுத்தடுத்த ஆண்டுகளில் இருவரும் இணைந்து நாடகங்கள் நடித்தோம். இப்பொழுது அவன் பெங்களூரு நேஷ்னல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்து முடித்திருக்கிறான். கல்லூரியின் முதல் ஆண்டே தமிழ் பேராசிரியரும் நாடக இயக்குனருமான ராம்ராஜ் சாரின் அறிமுகத்தை நானே வழியவாரி சென்று பெற்றுக்கொண்டேன். அவர் நடத்திய திரைக்கதை வகுப்புக்கு அவரிடம் அறிமுகம் ஆவதன் பொருட்டே போய் சேர்ந்து கொண்டேன். அடுத்த இரண்டாம் ஆண்டும் மூன்றாம் ஆண்டும் என்னில் மிக பெரிய செல்வாக்கை செலுத்துபவராக அவர் அமைந்தார். அதன் பின் சிந்தனை மன்றம் நிலாமுற்றம் போன்ற கல்லூரிகளின் மிக முக்கியமான அமைப்புகளில் என்னை இணைத்துக் கொண்டேன். அவை சிந்தனையையும் இலக்கியத்தையும் அறிமுகம் செய்பவையாக அமைந்தன. அதன் வழியாக சீனியர்களும் அண்ணன்களும் நண்பர்களுமான வெங்கடேஷ் வினீத் மற்றும் கபிலன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் எனக்கு படிப்படியாக நான் அடுத்தடுத்து வாசிக்க வேண்டிய நூல்களை பரிந்துரைத்தார்கள். என்னுடைய ஆரம்ப கட்டக் கல்லூரி கால எழுத்துக்கள் அனைத்தையும் படித்து அதன் நிறை குறைகளை என்னிடம் சொல்லி உத்வேகம் அளிப்பவர்களாக இருந்தனர்.


எப்பொழுதும் ஒரு உந்துதல் இருந்துள்ளது என்ற போதும் கல்லூரிக்கு முன் என்னை இந்தளவுக்கு நானே முக்கியமாக கருதியதில்லை. என்னை பெரிய பள்ளிகளில் படிக்க வைக்கும் அப்பாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதவனுமாகவும் அனைத்து ஆசிரியரிடமும் அடிவாங்குபவனாகவும் இருந்த  எனக்கு கல்லூரி வாழ்க்கை எனக்கே என்மீது மிக பெரிய மதிப்பை உருவாக்கி தந்தது. நான் பேசும் கருத்துகளுக்கு கைதட்டல்கள் கிடைத்தது. வென்ற விவாதங்களுக்கு பரிசாக நூல்கள் கிடைத்தது. வாசகர்களாகிய சீனியர்களின் நட்பு கிடைத்தது. இரண்டாம் ஆண்டு முழுவதும் ராம்ராஜ் சாருக்கு துணையாக இரவுகளில் அவரோடு இருப்பேன். அப்பொழுது அவர் பல இலக்கிய நூல்களை அறிமுகம் செய்தார். பல கதைகளை எனக்கு சொன்னார். தன்னுடைய லேப்டாப்பை எடுத்து உலக சினிமாக்களை பார்க்க சொன்னார். ஸ்டெஃப்ஃபி புல்வெளி பற்றி சொன்னார்.  அவர் வழியாக எங்கள் கல்லூரிக்கு வந்து கல்லூரி மாணவர்களை வைத்து நாடக இயக்குனர் முருக பூபதி இயக்கி “நீர் நாடோடிகள்” என்ற நாடகத்தில் நான் நடித்தேன். அதன் வழியாக பல மணல் மகுடி நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. ஏதோ ஒரு வகையில் எல்லோரும் என்னை ஏற்பதையும் அங்கிகரிப்பதையும் நான் பார்க்க துவங்கினேன்.

இப்பொழுது சினிமாவில் உதவி  இயக்குனராக இருக்கும் நண்பன் கார்த்தியின் அறிமுகம் முதலாம் ஆண்டுதான் கிடைத்தது. மாலை ஆறு மணியில் இருந்து உணவுவரை இருவரும் ஏர்போர்ட் ரோட்டில்  அமர்ந்து சினிமாக் கதைகளை எங்களின் எதிர்கால கனவுகளையும் அந்த முதலாம் ஆண்டு முழுவதும் பேசிக்கொண்டிருந்தோம். நான் சமூகவியலும்  அவன் விஸ்காமும் படித்தான். அவன் வழியாக ஷியாம், அரவிந்த், நிக்கிஃபர் பூபதி, தமிழ் அரசன், ராக்கி போன்ற நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் அனைவரும் இணைந்து அடுத்த ஆண்டு முதல் ஒன்றாக அறை எடுத்தோம். ஒரு வகையில் பொருளாதார பிரச்சனைக்களும் தனிமையும் குறைந்தது.

முதல் ஆண்டு அந்த தனி அறையில் இருந்த போதுதான் நான் புகைப்பிடிக்க பழகி கொண்டேன். அப்பொழுது லேப்டாப் வாங்க வேண்டும் திரைப்படம் பார்க்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருந்தது. நண்பர்கள் குறிப்பிட்டு பேசும் எந்த திரைப்படமும் இயக்குனர்களும் எனக்கு தெரிந்திருக்கவில்லை. மணிரத்னம் ஒருவரே எனக்கு பிடித்த இயக்குனராக அப்பொழுது இருந்தார். வெற்றிமாறனின் மயில்ஸ் டூ கோ-வை அந்த தனி அறையில்தான் வாரம் வாரம் விகடனில் படித்தேன். கோவையின் ஏர்போர்ட் சாலையில் இருந்து அமர்ந்து கொண்டு வீட்டில் பேசும் பொழுது லேப்டாப் வேண்டும் என்று கேட்பேன். அவர்களும் சில முயற்ச்சிகள் எடுத்து அது தோற்று போனது. அதேபோல் அப்பொழுது என்னிடம் டச் ஃபோன் இல்லை. இண்டர்நெட் வொர்க் ஆகும் படி காந்திபுரத்தில் ஒரு நோக்கியா ஃபோன் செகன்ட் ஹாண்ட் ஒன்று வாங்கினேன். அதை கல்லூரியில் வெளியிலே எடுக்கமாட்டேன் என்பது நான்கு மாதம் பழகிய நண்பர்கள் ‘உன் ஃபோன குடு நான் பார்த்ததே இல்லை’ என்று சொன்ன பொழுதுதான் தெரிந்தது.  ஐந்து ஆறு சட்டைகளும் இரண்டு பேண்ட்டுகளும் இருந்தது. துணிகள் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் நானும், வேறு இலக்குகளுடன் இன்னொரு நண்பனும் ஒரு வாரம் தேடி பழமுதிர் சோலை ஒன்றில் பார்ட் டைம் வேலைக்கு சேர்ந்தோம். சேர்ந்த அரை மணிநேரத்தில் வேலையில்  செலவாகும் நேரத்திற்க்கு திரைப்படங்கள் பார்க்கலாம் புத்தகம் படிக்கலாம் கதைகள் எழுதலாம் என்று அந்த நண்பனிடமும் வேலைக்கு சேர்த்தவரிடமும் சொல்லிவிட்டு வேலையைவிட்டு வெளியேறிவிட்டேன். அந்த கடையை விட்டு வெளியேறி ஐந்து நிமிடம் நடந்து சென்றிருப்பேன், ஃபோன் அடித்தது. என்னோடு வேலைக்கு சேர்ந்திருந்த அந்த நண்பன் அழைத்திருந்தான் “என்னையும் வேலையைவிட்டு தூக்கிட்டாங்கடா அங்கையே இரு வரன்”.

நான் சிறுவயது முதல் எழைகள் என்றுதான் எங்கள் குடும்பத்தை நினைத்திருந்தேன். ஆனால் இன்று நாங்கள் எழைகள் இல்லை என்றும் உண்மையில் ஏழ்மை எது  என்றும் தெரிந்திருக்கிறது. விவசாய கூட்டு குடும்பமான எங்களுக்கு 8 ஏக்கர் மொத்தமாக நிலம் இருக்கிறது ஒரு போர் செட்டும். ஆனால் நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை நாங்கள் ரேசன் கடைகளில் அரிசி பருப்பு சீனி பாமாயில் மண்ணெண்ணை கோதுமை டீ-தூள் வாங்கிதான் பயன்படுத்தி வருகிறோம். என் சிறுவயதில் ரேசன் கடை அரிசி இழிவு என என் உறவுக்காரர் ஒருவர் சொல்ல அது  என்னில் ஆழ பதிந்திருந்தது. நான் என் சித்தப்பா மகன் மகள் என குழந்தைகள் மூவருக்கும் தீபாவளிக்கு எங்கள் வீட்டில் துணி எடுத்ததில்லை. எங்கள் இருவரின் தாய் மாமன் வீடுகளில் மட்டுமே அதை எடுத்தார்கள். ஆனால் மூன்று குழந்தைகளும் ஃபீஸ் கட்டி தனியார் பள்ளிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் படிக்க வைக்கப்பட்டோம். கல்விக்காக செலவு செய்வது அவர்களை அறியாமலையே குடும்பத்தின் கொள்கையாக இருந்தது. அதைவிட முதன்மையாக நிலத்தை விற்கக் கூடாது என்பது. நிலமாக பார்த்தால் அதன் மதிப்பு அதிகம். விவசாயிகளுக்கு உயிருக்கே ஆபத்து என்றாலும் விற்ககூடாது  என்ற நிலம் மற்றும் அடுத்த தலைமுறை மீதான பற்று அதிகம். ஆனால் அப்படி இருந்தும் விவசாயம் ஏன் இவ்வளவு வருவாய் தராத தன்னை தாழ்வாக உணரவைக்கும் தொழிலாக இருக்கிறது என்பது வெளி உலகை பார்க்க துவங்கியதிலிருந்து எனக்கு எழ துவங்கிய கேள்வி.

விவசாயிகள் பெரும்பாலும் தாங்கள் விளைவிக்கும் நெல்லை அரசாங்கத்திடம் விற்கிறார்கள். DPC-யில் நாற்பது கிலோ நெல் பை ஒன்றுக்கு விலை இவ்வளவு என நிற்ணையித்து எங்களிடம் இருந்து பெற்று கொள்கிறது. இன்சென்டிவ் கூட தருகிறார்கள். அதை அரசாங்கமே பதப்படுத்தி மீண்டும் ரேசன் கடைகளில் இப்பொழுது  இலவசமாக தருகிறது. இது அல்லாமல் தனியார் விவசாயிகள் நெல்லை எடைக்கு போட்டு வாங்கி கொள்கிறார்கள். அரசாங்கம் நிர்ணயிக்கும் விலைக்கும் தனியாரின் விலைக்கும் பெரிதாக  வித்தியாசம் இல்லை, பெரும்பாலும் அரசாங்க விலையைவிட அது குறைவாகவே இருக்கும். என் கேள்வி, அரசாங்கம் தான் இலவசமாக  விற்கும் பொருளை அதிக விலை கொடுத்து வாங்குமா. அப்படி வாங்கும் போது அரசிற்கு நஷ்டம். அந்த நஷ்டத்திற்க்கு பயந்து குறைந்த விலை நிர்ணயித்தால் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நஷ்டம். அதே போல, சந்தையில் அரசாங்கம் ஒரு அடிப்படையான விலையை நிர்ணயித்துவிடும் பொழுது அதலிருந்து தனியார் அதிக விலையை ஏற்றி வாங்க வாய்ப்பில்லை. காரணம் சந்தையில் ஒரு பொருளுக்கான போட்டியே இல்லாத போது அதன் விலை கூடவும் அந்த பொருளை தயாரிப்பவர்களின் லாபம் கூடவும் சாத்தியமே இல்லை. ஒரு பொருளுக்கான போட்டியை வைத்துதான் அதன் உண்மை மதிப்பை அறிய முடியும். இலவச அரிசி அதை தடுத்து விடுகிறது.

ஆனால் விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து விற்க்கும் ஆவின் நிறுவனத்தால்  அரசாங்கத்திற்க்கும் லாபம், மாடு வளர்ப்போருக்கும் லாபம். சந்தையிலும் போட்டி உள்ளது. மில்கி மிஸ்ட் போன்ற மிக பெரிய நிறுவனங்கள் அமூல், ஆவின் போன்ற அரசாங்க நிறுவனங்களுடன் போட்டி போடுகிறது. இந்த போட்டியில் மாடு வளர்க்கும் விவசாயிகள் லாபம் அடைகிறார்கள். ஆவின், அமூல் போன்று ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் இருக்கும் அரசாங்க  நிறுவனங்கள் வாயிலாக பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அந்த நிறுவனங்கள் அடையும் லாபம் வரி பணமாக திருப்பி மக்களுக்கு செலவு செய்யப்படுகிறது.

இத்தனை ஆண்டுகளில் அரசாங்கம் ரேசன் கடைகளை ஒரு முக்கியமான சந்தையாக மாற்றாமல் போனது  திருத்திக்கொள்ள வேண்டிய தவறு. இன்று அது சலுகைகள் மற்றும் இலவசம் கிடைக்கும் இடம் ஒன்றாகவே உள்ளது. விவசாயிகளுக்கு நன்மையின் பொருட்டு உருவாக்கப்பட்ட உழவர் சந்தை காய்கறி விவசாயிகளுக்கு லாபம் தரலாமே ஒழிய  நெல், கரும்பு, உளுந்து, எல், கடலை போன்ற பயிர்களை விவசாயம் செய்வோருக்கு லாபம் தருவதாக இருக்க சாத்தியம் இல்லை. இந்த பயிற்கள் அனைத்துமே ஒரு  மூல பொருள் மட்டுமே அதாவது இது அனைத்தும் B to B (Bussiness to Bussiness), மாறாக காய்கறிகள் கீரைகள் போல B to C (Business to Customer) அல்ல. ஆனால் பெரிய அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்வோரேகூட அவர்களே அதை சந்தைக்கு கொண்டு விற்க முடியாது. இடைத்தரகரிடம் கொடுத்துதான் ஆக வேண்டும். அதே போல பதப்படுத்தவும் மூலப்பொருளை பயன்படுத்தும் பொருளாக மாற்றவும் விவசாயிகளையே இணைத்து ‘மதிப்புகூட்ட’ சொல்வதும், நெல் கரும்பு போன்ற அளவில் மிக பெரிதாக இருக்கும் பயிர்களை விவசாயம் செய்வோருக்கு பயன்படாத ஒரு தீர்வு. அரசாங்கம் செய்ய முயல வேண்டியதெல்லாம் ரேசன் கடைகளை, வெளியே இருக்கும் அரிசி எண்ணை பருப்பு சந்தையில் தன்னையும் ஒரு போட்டியாளராக  ஆக்கிக்கொள்ள வேண்டியதுதான். இலவச அரிசி தேவைப்படுவோரை கணக்கு எடுத்து அவர்களுக்கு மட்டும் இலவச பொருட்களை ரேசன் கடைகளில் வழங்கும்படி செய்ய வேண்டும். இன்று இயற்கை வேளாண் பொருட்களுக்கு உருவாகி இருக்கும் விழிப்புணர்வையும் சந்தையையும் தனியார் பயன்படுத்திக் கொள்கிறது, அங்கே அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு தோராயமாக 90 ரூபாய், நாட்டு கோழி முட்டையின் விலை 8 ரூபாய் என்று நினைக்கிறேன். அரசு ஆராய்ச்சி  செய்து வேளாண் கொள்கைகளை உருவாக்கி ரேசன் கடைகள் வழியாக ஆரோக்கியமான பொருட்களை அனைவருக்கும் கிடைக்க செய்யலாம்.

கட்சிகள் தன்னுடைய ஓட்டுக்காக ஒரு ரூபாய் அரிசி இலவச அரிசி போன்ற திட்டங்களை, அவை விவசாயிகளில் உருவாக்கும் பாதிப்புகளை கருதாமல் அறிவிக்கின்றன. விளைவிக்கும் பொருளுக்கான சந்தையை உருவாக்காமல் போனது, சந்தையின் போட்டிக்கு தகுந்தார்  போல விவசாயிகள் ஊக்கத்துடன் புதிய முயற்சிகளை உருவாக்காமல் போனது, விவசாயிகளை தங்களின் இலவச திட்டங்கள் மூலம் சந்தைகளில் இருந்து தனிமை படுத்தி அவர்களின் வருவாயை குறைத்து, விவசாயம் சார்ந்த கூலி தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நாட்களுக்கு மாற்று தொழில்களை உருவாக்கி தராமல்  போனது (சிறுகுழுக்களும் 100 நாள் திட்டங்களும் பெரிய மாற்றங்களை உறுவாக்க முடியவில்லை), ஊருக்கு ஒரு டாஸ்மாக் திறந்து வைத்தது என அரசாங்கம் செய்த பிழைகள் ஒரு அநீதிக்கு நிகரானவை.
விவசாயிகளும் தங்கள் பிரச்சனை குறித்த அறியாமையில் உள்ளனர். அவர்களும் தங்களின் ஏழ்மைக்கான காரணம் அறிந்திருக்க வேண்டும். தங்களின் கோரிக்கைகளுடன் அவர்கள் அரசாங்கத்திற்கு முன் நிற்க வேண்டும். டெல்டா பகுதிகளின் எம்.எல்.ஏ-களையும் விவசாய மந்திரியையும் தீர்மாணிக்கும் இடத்தில் இருக்க வேண்டும் விவசாயிகளின் ஒற்றுமை. தமிழகத்தில் அடுத்து ஒரு விவசாய பல்கலைக்கழகம் உருவாகுமானால் அது தஞ்சையில் அமைய வேண்டும். இல்லை என்றால் நிலத்தையும் குடும்பதையும் தொடர்ச்சியும் விட்டு கல்விக்கும் பிழைப்புக்கும் சென்னைக்கும் கொங்கு பகுதிக்கும் சென்று  நின்றிருக்கும் நம் பிள்ளைகள் அனைத்து வகையிலும் தங்களை தாழ்வாக உணர்வார்கள். நான் சொல்வது தறவாக இருக்கலாம் ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது அது எப்படியோ சரி செய்யப்பட்டாக வேண்டும் என்று மட்டும்தான் சொல்கிறேன்.

தஞ்சையில் இருந்து கோவை வந்த முதல் ஒரு வருடம் எனக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது என அப்பொழுது தெரியவில்லை.  ஆனால் பள்ளி கல்வியை சரியாக படிக்காத எனக்கு இப்படி ஒரு கல்லூரியில் படிப்பதற்க்கான வாய்ப்பும் அதன் வழியான கலை இலக்கியம் சிந்தனை என பல புதிய உலகங்கள் அறிமுகம் ஆகிக்கொண்டிந்தது குறித்த  திகைப்பும்  நன்றியும்  ஒரு சேர இருந்தது. முதல் ஆறு மாத காலம் எந்த பெண்ணிடமும் நான் பேசியதில்லை. அதற்க்கு முன்பும் கூட பேசியதில்லை. சமூகவியல் எதைகுறித்தும் நான் சிந்திக்கலாம் கருத்துக்களையும் கருத்துருவாக்கங்களையும் நானே உருவாக்கி கொள்ளலாம் என்ற மிக பெரிய லைசன்ஸை எனக்கு கொடுத்துது.  சாலைகள், மனிதர்கள், பறவைகள், பெயர் இல்லை என்றால் மனிதன் யார், என பார்க்கும் ஒவ்வொன்றை பற்றியும் சிந்தித்தேன். நான் நடவு வயலுக்கு சோறு கொண்டு செல்லும் பொழுது ஆற்றங்கரையில் சிந்திப்பதை போலத்தான் சமூகவியலின் சிந்தனையாளர்கள் சிந்திக்கிறார்கள் என்பது என் இனத்தை அடையாளம் கண்டுக்கொண்டதன் பதட்டமின்மையை தந்தது. மறுபுறம் என் கவனத்தையும் மீறி கோவை என்ற நகரின் உடைகள் கார்கள் கட்டிடங்கள் அனைத்தும் என்னை பாதித்தும் இருக்கலாம். 5 ரூபாய் முட்டை ஆம்லேட் ஆகும் பொழுது தோசையின் விலையைவிட அதிகமாவது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஆறு மாதம் ஆம்லேட் சாப்பிடகூடாது என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்தேன். இலக்கியம் சினிமா சிந்தனை போன்றவை அறிமுகம் ஆகியிருந்தாலும்  நண்பர்கள் சீனியர்கள் சொல்லும் எந்த நூலும் திரைப்படமும் நமக்கு தெரிந்திருக்கவில்லையே என்பது அன்றாட அதிர்ச்சியாக அப்பொழுது இருந்தது.

நான் முதலாம் ஆண்டு இருந்த மேன்ஷன் அறை ஒரு பத்துக்கு பத்து அறையாக இருக்கலாம். ஒரு சன்னலும் அந்த சன்னலை பார்த்தப்படி சுவரோடு இணைக்கப்பட்ட எழுத்து பலகையும் இருந்தது. அப்பா வந்து இரண்டு மூன்று நாட்கள் என்னுடன் தங்கி இருந்து விட்டு போனார். அவர் சித்திராவில் பஸ் ஏரி சென்ற பொழுது வந்த கண்ணீர் இன்றும் நினைவிருக்கிறது. அறையில் ஒரு கப்போடு இருந்தது, அதில் அப்பாவிடம் இருந்து எடுத்து வந்த கள்ளிக்காடு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலக போர், வைரமுத்து சிறுகதைகள், நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க, கி.ரா வின் கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், பெண் கதைகள், நான் சென்னை டீ.பி.ஐ கட்டிடத்தில் வாங்கிய பிப்பின் சந்தராவின் கம்யூனலிசம், பின்பு தஞ்சை புத்தக கண்காட்சியில் என் அப்பாவின் எதிர்ப்பை மீறி வாங்கிய பா. ராகவனின் மாவோஸ்டுகள் என்ற நூல், இது அல்லாமல் என் அப்பாவின் பெரிய ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி, அப்புறம் நான் நாட்க்குறிப்பு எழுதி வைத்திருக்கும் அந்த ஆண்டு டைரி ஆகியவற்றை வைத்திருந்தேன். அப்பொழுது எனக்கு டைரி எப்படி எழுதவேண்டும் என்று தெரியாது. அன்றாடம் நான் செய்த செலவுகளையும் சென்று வந்த இடங்களையும் குறித்து வைத்திருந்தேன். நண்பன் கார்த்தி தான் அதை ஒரு முறை படித்து விட்டு டைரி எழுதுவது மிகப்பெரிய பழக்கம் ஆனால் டைரி வேறுமாதிரியும் எழுதுவார்கள் என்று சொன்னான்.

அறையில், இரண்டு கட்டில்களும் இரண்டு வெள்ளை நிற ப்ளாஸ்டிக் நாற்காலிகளும் கிடந்தது. ஒரு கட்டிலில் என் படுக்கை, அதில் வீட்டில் இருந்து எடுத்துவந்த பாய் தலையனை போன்றவை. இன்னொரு கட்டிலில் என் துணிகளும் ஒரு இண்டக்சன் ஸ்டவ்வும் தோசை கல்லும் இருந்தது. மாலையும் காலையும் ஊத்தி திண்பதற்க்காக வீட்டிலிருந்து கொடுத்து விடப்பட்டிருந்த கோதுமை மாவு இருந்தது. ஆனால் நானே சமைத்து உண்பதை என்னால் வெகு நாட்கள் கடைப்பிடிக்க முடியவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் அப்படி செய்தேன். சில வேலைகள் பிரட் ஜாம் முட்டை என போட்டு சாப்பிடுவேன் ஆனால் ஒரு பாக்கெட் பிரட்டையும் ஒன்றாக என்னால் தின்றுவிட முடியும் ஆகையால் அதற்க்கு ஆகும் செலவு வெளியே சாப்பிடும் மூன்று தோசையின் 24 ரூபாய்க்கு நிகராக வந்து விடும்படி இருந்தது. சில மாதங்களிலேயே சமைத்து சாப்பிடாமல் கடையில் சாப்பிடுவதற்க்கு பழகிவிட்டேன். வீட்டுக்கு சிரமம் கொடுக்கிறோம் என்ற குற்ற உணர்வும் புகை பிடிப்பது குறித்த குற்ற உணர்வும் கடுமையாக இருக்கும். வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி செம்மொழியின் அன் ரிஸ்சர்வ்டில் 100 ரூபாய் கொடுத்தேறி சனி ஞாயிறு ஊரில் இருந்துவிட்டு செம்மொழியில் திரும்பி வரும் வாடிக்கை முதலில் ஒவ்வொரு வாரமும் இருந்து, அதன் பின் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை என்றானது. இரண்டாம் ஆண்டில் தீபாவளி பொங்கல், மூன்றாம் ஆண்டில் அதுவும் இல்லை. ஆனால் தஞ்சையில் இருந்து கோவை வரும் பொழுது கரூரை தாண்டியதும் தொட்டு எழுப்பும் குளிர் என்றுமிருக்கும் நினைவு.

2015, இங்கிருந்து எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் என் முதலாம் ஆண்டு மேன்ஷன் அறையின் கட்டிலில் படுத்திருந்தேன். ஃபோனை எடுத்து பார்த்த பொழுது அதில் இலக்கியாவிடம் இருந்து “Hi” என்று முகநூல் வழியாக ஒரு குறுஞ்செய்தி. நான் “Hai” என மறுமொழி செய்தேன். அதன் பின் ஒரு ஆண்டு நட்பு, ஏழு ஆண்டு காதல் இன்று புதிதாக திருமண வாழ்க்கையின் துவக்கம். இந்த காதல் நான் யார் என்று எனக்கே காட்டி கொடுத்தது. எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள் வழியாக நாங்கள் இந்த காதலை வெற்றியடைய செய்திருக்கிறோம். இதோ குளித்து விட்டு வந்து என் முன்னே நின்றிருக்கும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இதை எழுதுகிறேன்,  எங்கிருந்து எங்கு வந்திருக்கிறோம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டபடி. ஆனால் இந்த திருமண வாழ்க்கை ஒரு துவக்கம் மட்டுமே.

அவள் என் வாழ்க்கையில் வந்த போது இன்று நான் வாசித்திருந்த எந்த நூலையும் அன்று வாசித்திருக்கவில்லை இன்று எழுதியிருக்கும் எதையும் அன்று எழுதியிருக்கவில்லை. சொல்லப்போனால் கனிந்துருகும் அன்பையும் கனவுகளையும் பண்படாத இயல்பையும் குளிருக்கு ஒண்டும் நாயின் தனிமையையும் மட்டுமே அப்பொழுது கொண்டிருந்தேன். அவளை பற்றி என்ன சொல்ல. நிறைய இருக்கிறது. அதற்க்கு ஒரு நூல்தான் எழுதவேண்டும். அதிலும் என்னைப்பற்றிதான் அதிகம் சொல்ல வேண்டியிருக்கும் அப்பொழுதுதான் அவள் யார் என சொல்ல முடியும். அதை எழுத காலத்தில் இன்னும் விலகி செல்ல வேண்டும். அல்லது அவளை குறித்து எனக்கு எழுத தெரியவில்லையா அது என் போதாமையா என்றும் தெரியவில்லை.

சரி இலக்கியாம்மா எனக்கு எதை தந்தாள்? அல்லது
அவள் யார்?

ஆரம்பத்தில் ஒரு நாள் ‘இது தெரியாதா இந்தப் பாட்ட கேட்டதில்லையா’ என்று திகைத்த முகத்துடன் “தென்றல் வந்து தீண்டும் போது” பாடலை எனக்கு அறிமுகம் செய்தாள். அதற்க்கு முன் அந்த பாடலை நான் கேட்டதே இல்லை. அதற்க்கு பின் அந்த ஒரு பாடலை கேட்டுதான் உயிர் வாழ்ந்தேன்.

அந்த பாடலோடு அவளும் அறிமுகமானாள். எனக்கு, அந்த பாடலே அவள் தான்.

💚👊


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up