menu Menu
கவிதைகள்
இதுவரை எழுதிய கவிதைகள் 
By பிரதீப் Posted in கவிதை on October 22, 2026 0 Comments 13 நிமிட வாசிப்பு
தென்றலின் அறிமுகம் Previous In the road of questions Next

இருப்பின் மொழி

“தும்பு” – வய் பற்றி
உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
நானே இப்பொழுதுதான்
அதன் இருப்பை கவனித்தேன்
தும்பு வை தெரியாதென்றால்
கிட்டையை கித்துவை
கிட்டியை கீண்டுக்குட்டுவை
தெரியவும் வாய்ப்பில்லை

ஆனால் இங்கேதான் இருக்கிறது
ஆ வந்ததும் ஊ வந்தது போல
அது என்றால் இது என்பதுபோல
அது இங்கேதான் இருக்கிறது
உடலுக்கு நிழல் போல்
கட்டைக்கு சாம்பல் போல்
அது இங்கேதான் இருந்திருக்கிறது
காலுக்கு கிழே
நெற்றிக்கு நடுவே

தும்பு வை பற்றி தேட முயன்றேன்
இணையம் அர்த்தம் சொல்ல முயல்கிறது
எனக்கு அதை
ஏற்றுக்கொள்ள மனமில்லை
ஏன் என்றால் எனக்கு
அர்த்தமின்மைகளின் அர்த்தம் தெரியும்

வத்திகுச்சி பத்திகாதடா பாட்டில்
தும்பு சரியாக அமர்ந்திருகிறது
தாளத்தில் அமர்ந்ததை சரிபார்த்தவர்கள்
அமர்ந்த அர்த்தத்தை பார்த்திருக்கமாட்டார்கள்

தேச்சு வச்ச சட்டையை
போடும் போதெல்லாம்
ஒருவர் கிட்டை-யை யும்தான்
அணிந்துகொள்கிறார்
சாப்பிட அமர்ந்தவன்
ரசத்தோடு கிசத்தையும்
ஊற்ற சொல்கிறான்
அவள் தொட்டுக்களோடு கிட்டுகளையும்
கொண்டுவந்து வைக்கிறாள்
நாண்டுக்குவன் என்று ஒருவர்
சொல்லும்போது பதட்டம் அடையும் ஒருவர்
கூடவே வரும் கீண்டுக்குவனை கேட்டு
சற்று ஆசுவாசம் அடைகிறார்

இவை என்ன மொழியின் நிழலா
சூரியன் என்று சொல்லும்பொழுது
கீரியன் எனறு சூட்டுவது எதை
சாமி என்னும் போது
கீமி என்பது எதை
இது மொழிகுள்ளே ஒரு தனி மொழி
ஒளியால் வழி நடத்தப்படுவதைவிட
நிழலால் வழி நடத்தப்படுகிறோம்
மொழிக்கு தன்மையோ
இலக்கோ இல்லை
ஆனால் கிழி க்கு இருக்கிறது
அது நீ பொருட்படுத்தும் தோரும்
பொருளிலக்க செய்வது
மொழிதான் மாயை கிழிதான் நிஜம்
கீட்ச்சு இல்லை என்றால்
வாட்ச்சு வாங்கும் விலை மிகும்
கித்து இல்லை என்றால்
சாவை அஞ்சுவதும் அப்படியே

அடையாளங்களை மீட்கிறார்கள்
மரபை உரிமையை மொழியை
ஆனால் தும்பு வை
கிட்டையை கித்தை கிட்டியை
யார் காப்பார்கள்
எல்லோவற்றையும் யாரோ
உருவாக்கினார்கள் என்கிறார்கள்
கிழுத்தை யார் கிழுதி வளர்த்தது

இவை உருவாக்கபடாததைபோலவே
தொலைக்கபடவும் முடியாதவை
தொலைந்தாலும்
அவை கிலையபோவதே இல்லை.

*

ஒன்றை நிச்சயப்படுத்தி சொல்லும் காலம்

பாவம்தான் அர்ஜுனன்
ஒன்றை நிச்சயப்படுத்தி சொல்
என்று எத்தனை முறைதான் சொல்வான்
நிச்சயப்படுத்தி சொல்லும் வழி ஒன்றில்லையா என்ன
குழப்பமான பேச்சினால்
எத்தனை முறைதான் அவன்
அவயங்கள் சோரும்
விபரீதமான சகுனங்களை
எத்தனை முறைதான் காண்பான்
வாழ்க்கை எத்தனை முறைதான்
கையில் இருந்து நழுவும்
நா உளர்ந்து உடல் நடுங்கி
விஷத்தின் யோகம் புரிகிறான் அவன்

அழுகாதே அர்ஜுனா
தாய்க்கு நீயும்தான் மகன் இல்லை
தம்பிக்கு நீயும்தான் அண்ணன் இல்லை
ஊர் துயர் எற்றது நீயும்தான்

ஆம்! அழுகாதே அர்ஜுனா
ஒன்றை நிச்சயப்படுத்தி சொல்லும்
காலம் ஒன்று வரும்
உன்னிடம் வந்து சொல்பவன்
அவனாகவேகூட இருக்கும்

*

என் அப்பத்தாவை பிடிக்காமல் போன நாள்

அப்பத்தா
மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை
கொட்டகையில் அடைப்பதற்க்கு
ஒரு உத்தி வைத்திருந்தாள்
கொழுந்து வேப்பங் குழை
ஒன்றை உடைத்து
ஆடு முன் நீட்டுவாள்
அவை தின்ன வரும்பொழுது
அதை காட்டி கொண்டே
நடந்து கொட்டகை வரை வந்து
தொடர்ந்து வரும்
ஆடுகளை பிடித்து கட்டிவிடுவாள்

அவளிடம் ஒருநாள் சொன்னேன்
காந்தியும் ஆடு வளர்தார்
அதை அவர் நேர்மையாக வளர்த்தார்

அப்பத்தாவுக்கு அது புரியவில்லை

*

அத்தனை விழைவு இல்லை
நதி வாசல் வழியாகத்தான் போனது
நீந்துவது மட்டுமே என்
கடமையாக இருந்தது

எங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி
என் சட்டை பைக்குள்
என் முகம் எனக்கு
நன்றாவே நினைவிருக்கிறது

வீட்டில் உள்ள எடைக்கல்
என்னை சரியாகவே மதிப்பிடும்
கூட்டுவதும் இல்லை
குறைப்பதும் இல்லை
எனக்குதான் அதில் வருத்தம்

என் வீட்டு வண்டி மாடுகள்
நான் துயின்றாலும்
செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லும்
தன் இலக்கை தான் அறியும்
மறந்து போய்
அது கதிர் தின்று நின்ற
தோல்வியும் அதுக்கு தெரியும்

*

ஒரு நாள் வானம்
நிர்வாணமாக இருக்கும் என்றார்கள்
அது
உதயத்தையும் அஸ்தமனத்தையும்
பிறையையும் முழு நிலவையும்
தாளத்து பறவைகளையும்
கூடிவரும் கருமேகங்களையும்
கொண்ட வானத்தை விட
அழகாக இருக்கும் என்றார்கள்
அல்லது அது அழகும் கூட அல்ல
அதற்க்கு அப்பால் என்றார்கள்
நிர்வாணமான வானம்
எப்படி இருக்கும்
பிறந்த புதிய குழந்தையைப் போல
பிறக்காத கருவை போல
அதற்க்கும் முந்திய விந்தை போல
உடல் அற்ற உயிரை போல
எத்தனை உடைகளை கலைக்கும்
வானம் நிர்வாணம் அடைய
எந்த கண்ணை இழப்பார்கள்
அதை காண
எங்கோ ஏதோ ஒரு கண்
ஒவ்வொரு நாளும்
வானத்தில் நிர்வாணம்
உதிப்பதற்க்காக விழிகளை
இழக்கத்துவங்குகிறது
பதிலுக்கு வானமும்
தன் உடைகளை
களையதுவங்கியிருக்கிறது

*

எதிலிருந்து ஓடுகிறாய் நதி பெருக்கே
எதை தாண்ட அலையடிக்கிறாய் கடலே
காற்றை கோதி எதை அறிகிறாய் மரமே
குழந்தைகளில் குழறல் ஏன் கால்தடமே
ஆண்டுகளாக படுக்கையில் எதை நினைக்கிறாய் கிழமே
சாலைகளின் சிக்கை அவிழ்த்து முடித்தாயா பித்தே

வரும் போது யாரும் எதையும் அறிந்திருக்கவில்லை
போகும் போது யாரும் எதையும்
அறிந்திருப்பார்களா

*

ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொருளுக்கும் அர்த்தத்துக்கும்
இடையே நீ என்னவாக
இருந்தாய்
ஆதியில் எப்படி இருப்பாய்
தூணுக்கும் துரும்புக்கும்
இடையே நீ என்னவாய்
இருந்தாய்
துயிலில் எப்படி இருப்பாய்
ரூபங்களை ஏன் எடுத்தாய்
தூயதில் யார் நீ
துகள் மண்ணுக்கும்
துளி நீருக்கும்
உள்ள உறவில்
நீ யார்
கிழவன் கொஞ்சும் குழந்தையில்
அழியாதது எது
பெயர் இல்லாத பொருளை
எடுத்துவர ஓடியவன் எங்கே
மரணங்களை ஏன் படைத்தாய்
மாயங்களை ஏன் விரித்தாய்
நா நீட்டி தீ ஏங்கும் நீர் எது
நதியின் கரையில்
கால் மடக்கி கண் மூடி
அமர்ந்தவன் காண்பது
எது

*

நான்
என் மகன்
என் தங்கையின் மகள் மகன்
நால்வருமாக தொடர்ந்து
நாடக விழாவின் நாடகங்கள்
ஒவ்வொன்றையும் மாலைகள் தோறும் சென்று பார்த்து வந்தோம்
அவர்களை அழைத்து சென்று
வருவது எனக்கு இனம்
புரியாத ஒரு இன்பமாக
இருந்தது
உலகத்தை புதியதாக
பார்ப்பதை அவர்கள் வழியாக
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்

சேக்ஷ்பியரின் பாணியை
தழுவி தமிழ் நாடகம்
ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது
கொலைக்கு முந்தைய
சதி காட்சி
ஜெம்ஸ் முட்டாய்களை
தூக்க மாத்திரை என நினைத்து
ஒரு பைத்தியம் ஒன்று
கொலை செய்ய
தன்னம் தனியே நீண்ட நேரமாக
ஆலோசித்து கொண்டிருந்தது
அப்பொழுது சிறுவன் ஒருவன்
மேடையேறி வந்தான்
சற்று உத்து பார்த்த பொழுதுதான்
அது என் தங்கை மகன்
என தெரிந்தது
அருகே அவன் இருக்கை
காலியாக இருந்தது
அந்த பைத்தியத்திடம் இருந்து
ஜெம்ஸ் முட்டாயை
புடுங்கி மழைபோல சிதரி
விட்டெரிந்து விட்டு
என்னிடம் ஒடியாந்துவிட்டான்
நாடகத்தின் ஒரு பகுதி அது என
கூட்டம் பார்த்திருந்தது
என்ன என்று புரியாத
நடிகர்கள் மழை போல்
வண்ணமாக தொலைந்த
அந்த முட்டாய்களை
திகைத்து பார்த்திருந்து விட்டு
நாடக மேடையில் இருந்து கீழே இறங்கினர்
சதியும் கொலையும்
நடக்க வில்லை
அந்த நாடகம்
அதன் பின் நிகழவில்லை

*

என்னை யாரும்
பார்த்து கொண்டிருக்கவில்லை
ஒரு பறவைக்கு
பெயர் இல்லாதது போலவே
என் திசைக்கு
அசைக்கிறேன் என் சிறகை
என் அன்னை அறிந்து வைத்திருந்தவனில்லை
என் அப்பாவின் நினைவில்
இருப்பவனில்லை
என் நண்பர்களின் யூகங்கள்படி
நடக்காதவன்
என் சொற்களை கொண்டு
என்னை பற்றி சொல்கிறேனே
அதுவும் அல்ல நான்

புல் பூண்டு
கிளை மரம்
எல்லாவற்றுக்கும்
நாம் இட்ட பெயர்களில்
அர்த்தம் கழண்டுவிட்டன
புதிய அர்த்தங்கள் கூடியிருந்தபோதும்
புதிய பெயர்களை
சூட்டாதிருக்க அவை வேண்டுகின்றன

வயல் என பெயர்சூடிய
பசும் வெளியில்
நெல் என பெயர்சூடிய
ஒன்று துளிர்தாடுகிறது
காற்று என்ற ஒன்று
வருடி கொண்டிருந்தது
யாருக்கும் தெரியாத
யார் என்றே தெரியாத
நான்
நடந்து சென்று கொண்டிருந்தேன்
எனக்கு இப்பொழுதை விட
அப்பொழுது வயது அதிகம்

*

வந்து விழும் துளிக்கெல்லாம்
துடிக்காத குளம்
வாடும் போதே
மறு இலை பூக்கும் மரம்
குளம் பூத்த மலர்களில்
எந்த ஒளியும் உள்ளடங்கும்
ஒரு ஒளியின் நெஞ்சுரம்

*

கடலில் கட்டி எழுப்புவேன்

நீரால் ஆன கோயில் ஒன்றை

காற்றின் மடிப்பை

இசைப்பேன் கவிதை ஒன்றில்

*

எல்லோர் மீதும் அன்பாக இருக்கிறது
என்மீதும் எனக்கு அன்பாக இருக்கிறது

என் அப்பா எப்பொழுது ஒரு குழந்தையானர்
என் அப்பத்தா அதைவிட ஒரு சிறுமியானள்
சித்தப்பா ஒரு அடங்கா மாணவன்
காதலியை என்ன சொல்வேன்
அவள் அனைத்துமானவள்

எல்லோர் மீதும் எனக்கு அன்பாகயிருக்கிறது

இந்த ரயிலில் செல்வேது
விளையாட்டு ரயில் செல்லும்
களிப்பை தருகிறது
எல்லோருடனும் சேருந்து
தூங்குவது எவளவு
இன்பமாக இருக்கிறது
இடையே முளித்து
எல்லோரையும் பார்த்க்கும் போது
‘அப்படித்தான் தூங்குங்கள் மக்களே’
என்று சொல்ல தோன்றுகிது

எல்லோருமே எனக்கு எப்பொழுது
குழந்தையானார்கள்
அன்பையும் பொருப்பையும்
ஒரு தோளிலும்
வாழ்க்கையை
மறு தோளிலும்
தூக்கி திரிபவன்
பொம்மைகளை தூக்கி
திரிபவனாக படுகிறான்

ஏங்கே எல்லோரையும்
மன்னித்தேன்
என்னவோ
எனக்கு எல்லோர் மீதும்
அன்ப்பாக இருக்கிறது

ஏன்
‘எல்லோர் மீதும் அன்ப்பாக இருக்கிறது’
கவிதையே
உன்னையும்தான் எழுதாமல்
என்னுடன் மட்டுமே வைத்துகொள்ள
சில நாள் நினைத்தேன்
ஆனால் நீயோ
என்னுடன் மட்டும்
வைத்துகொள்ள முடியாதபடி
அன்பாக இருக்கிறாய்

*

முதல் காதல்

வேலிகளை தாண்டி குதித்திருக்கிறேன்
புத்தகத்தை திறந்து வைத்துவிட்டு
புறவாசல் வழியாக வேளியேறியிருக்கிறேன்
அடிவாங்கிய அழுகையை துடைத்துக்கொண்டு
விட்ட ஆட்டத்தை அப்படி தொடர்ந்திருக்கிறேன்
வெயில் தொட்ட திசையெல்லாம்
வயிற்றுக்கு ஈய்யாமல்
திரிந்திருக்கிறோம் கூட்டம் கூட்டமாக
விளையாட்டு பிரியடின் ஒவ்வொரு நொடியையும்
உறிந்து குடித்துவிட துடித்திருக்கிறேன்
மைதானத்தில்
அனுமதிக்காக கையேந்தி
கெஞ்சி இருக்கிறேன்
அழுதும் திமிறியும் இருக்கிறேன்
ஒதுக்கி தள்ளிவிட்டு திரும்பாமல்
ஓடி சென்றிருக்கிறேன்
எல்லாருக்கும் முன்னால் விளையாடுமிடத்தில் இருப்பேன்
எல்லோரும் சென்ற பின்னும்
எதோ செய்து கொண்டு அங்கிருப்பேன்
வயலுக்கு சென்று சோறு குடுத்துவிட்டு
காலியாகாத மைதானத்துக்காக
வேண்டிகொண்டு வருவேன்
நான் செய்த முதல் தவறும் சரியும் விளையாட்டு
நான் செய்த முதல் மீறலும் விடுதலையும்
விளையாட்டு
என் முதல் காதல் ஒரு பந்து

எங்கிருந்தோ ஒன்று
எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து
என்னை விளையாட அழைத்துக் கொண்டே இருக்கிறது!

*

அமைதியின் சத்தம்

அமைதியின் சத்தம் கேட்டு
எழுந்தமர்ந்தேன்
ஆற்றுக்கு சென்று
ஒரு குடம் சொற்கள்
அள்ளி வந்தேன்
அதை ஊற்றி
உலை வைத்து உண்டேன்
தோட்டத்து செடிகளுக்கு
கொஞ்சம் சொற்களை ஊற்றி
மாடுகள் ஆடுகள் கோழிகளுக்கு
மீதியை வைத்தேன்
இரவில் வாணம் எங்கும்
நிறைந்திருந்த சொற்களை அழித்து
தரையில் சொற்களை படரவிட்டு
சொல்மழை புரிந்தான் சூரியன்
அந்த மழையில் நனைந்து முடித்து
உடல் துவட்டி உளரவைத்து
துயிலுக்கு சென்றேன்
நான் ஓய்வு எடுத்துக்கொள்ளும் பொழுது
எல்லாமே ஒய்வு எடுத்துக்கொள்கின்றன

*

இசையை மெளனங்களாக நீட்டி
இசைக்க துவங்கியது
கருவி
பூக்களை வண்ணங்கள்
இன்றி பூத்தது
செடி
வெறும் சொற்களாக
ஒளித்து கிடந்தது
கவிதை
கடமையாக எச்சில்
பட்டு சென்றது
முத்தம்
இந்த வெறுமைக்கு எதிராகத்தான்
நீலத்தை அள்ளி அள்ளி
பூசிக்கொண்டது வானம்
திகட்ட திகட்ட இனிப்பு
உண்டாலும் திரும்பி
வரவேண்டிய இடம்
அது என்றபோதும்

*

விறகு வெட்டுவதற்க்காக
அப்பத்தா கறி குழம்பு வைத்தது போல
இந்த பிரபஞ்சம் நம்மை
பயண்டுத்திகொள்கிறது
ஆனால் குழம்பில்
எந்த குறையும் இருப்பதில்லை

*

அழகாக்கிகொள்ளும்
ஆணையை யார் கொடுத்தார்
பெண்களுக்கு
வயதாகும் தோரும்
சிறுமியின் சிறிப்பு
சிறிக்கிறாள் பாட்டி
இன்றே இறக்க போகும்
மலர் ஒன்றில்
ஏன் இத்தனை வண்ணம்
இருக்கும் ஒரு நாளும்
அழாகாக இருக்க
அது என்னுவது ஏன்
அது ஆற்றி முடிக்கும்
கடமை என்ன
நிறத்தில் இனிக்கும் மலரில்
தேன் நடிக்கும் வண்ணம்
பெருகி எழும் பூவில்
ஒருங்கி இருப்பது எது

*

குழந்தையின்
மூன்று வயது முகம்
ஆழபதிந்து விடுகிறது
பெற்றோறில்
பின் காலம் முடியும் வரை
நீ தானா நீ தானா
என்று அதைக்கொண்டு
இதை அளந்து பார்க்கிறார்கள்
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
தெளிவான சொல்லில் மழலையையும்
மழலையில் தெளிவையும்
தேடி ஆடையாளம் காணுகிறார்கள்
ஆனால்
எல்லோரும் யாருக்கோ
மகனாகவும் மகளாகவும்
தந்தையாகவும் தாயாவும்
ஒரேசமையாம் மாறி மாறி
வாழ்ந்து கொள்கிறார்கள்

*

பறவைக்குள் பறவை

வானிலிருந்து வந்தது
ஒரு பறவை
அதனுடைய மொழி
பறப்பது அல்ல
அதனுடைய வீடு
கிளை அல்ல
நீருக்கு கரைபோல
அப்பொழுது அது
பறவையாக இருந்தது
ஊற்றை மறந்த
பறவைகளை அது வியந்தது
மழை என நதி என கடல் என
உடல் மாறும் நீர் போல்
பறவைக்குள் பறவையாக
அப்பறவை இருந்து

*

என் சிறு கண்களில்
தெரியுது முழு சூரியன்
முழு நதியையும் விரிக்கிறது
என் சிறு விழியில்
பெரியவைகள் எல்லாம்
பார்க்கிறேன் சிறிய என்னில்
கண்களின் எல்லைக்கு
அப்பால் உள்ளத்தை
பார்க்கும் விழிதானா இருப்பு
உணர்வின் பெருவிழி சூடி
அலைகிறதா உயிர் குலம்

*

உடல் என்பது ஒரு
குட்டி பிரபஞ்சம்
என் சுண்டு விரல்
பிரபஞ்சத்தின்
ஒரு உறுப்பு

எல்லா கோள்களும்
நிலாக்கு எத்தனிக்கிறது
என் உடலில் எது நிலா
விழியா இமையா
விரலா நகமா
தூங்கியதும் வரும் கனவா

எனக்கு ஒரு மூளை
உள்ளது போல்
பிரபஞ்சத்துக்கும் ஒன்றுள்ளதா
எனக்கு இதயம்
உள்ளது போல்
அதற்க்கும் ஒன்று
இருளும் பகலும்

நீ ஒரு நதி
நீ ஒரு வயல்
நீ ஒரு மைதானம்
நீ ஒரு மரம்
நீ ஒரு விழி
விழிக்கு அப்பால்
உள்ள ஒளி

எல்லா வற்றையும்
உவமையாக்க முடிந்த
ஒன்று நீ

*

அகல் தொட்டெழுப்பிய வெயில்
அர்த்தங்கள் வடிந்த மலைத்தொடர்கள்
மெண்அலை இசைக்கும் கடல் மெளனம்
ஒன்றில் குவிந்த வெளி
தூய ஒளி

*

சட்டென்று ரோட்டுக்கு வராமல்
இருப்பது அத்தனை எளிதல்ல
அறைகள் இன்றி நான்
பலமுறை சாலையில் நின்றவன்
திசை தெரியாதவனுக்கே
பேருந்து நிலையங்களின்
சாத்தியம் தெரியும்
தன்னை பாரம் என்று கருதுபவனே
சொந்த தந்தையிடமும்
உதவி கேட்காதவன்
சாலைக்கு வருவது
கவிஞன் முன்னால்
என்றும் நிற்க்கும் சாத்தியம்
ஒரு பெண்ணின் கரம் பற்றி
இருக்கிறது என்னை
அது இல்லை என்றால்
நான் என்னாவேன்
எங்கு செல்வேன்
சாலைகளின் எதிர்காற்றுக்கு
வலுகொடுத்து நிற்க்கிறது
வீடுகள்

*

ஒவ்வொரு நாளும்
ஒரு கிறிஸ்துமஸ்
ஒரு நாளில்
ஒரு கோடி கிறிஸ்துக்களும்
ஒரு கோடி கிருஷ்ணன்களும்
பிறக்கிறார்கள்

கடலும் கடைத்தெருக்களும்
அறையான போது
துளி நீர் எஞ்சுவதில்லை
பொருள்கள் விற்பதில்லை
அது பித்தின் பெரும் சுவர்

அறையில் விண்மீகள்
அறையில் முடிவுறா வெளி
அறையில் இலைகள்
அழகின் நந்தனம்
இருத்தலின் மென் அலை

*

கடலின் பதில்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
யாரோ தவறவிட்ட
காதனி ஒன்று
மின்னி மிதந்து
மேல் எழுந்து வருகிறது
காதோடு விழந்ததா
தெரியவில்லை
மங்கலான நினைவு என்றாலும்
எடை கூடியுள்ளது

புதியான ஒன்றை
நினைவின் விதையாகி
பாசி முளைந்த நதியின் காட்டில்
தவறவிடுகிறேன்

மேல் எல துடிக்கும்
ஒன்றால் திர்மானமானது
நதியின் விசை
மணல் மட்டுமே அறிகிறது
நீரின் எடை

உதிர துளிகள்
சிகிரட் துண்டுகள்
சிந்திய மது துளிகள்
கேடையங்கள்
கை கடிகராங்கள்
கண்ணாடி சில்கள்
பல்லற்ற சீப்புகள்
ஒன்வொற்றும்
விழுந்து முளைந்து
பெருகி எழ முயல்கிறது
கடலில்
அலைகளை மட்டுமே
பதிலாக அளிக்கிறது
கடல்

*

இத்தனை அமைதியாய்

இந்த விட்டத்தை பார்த்திருக்கிறேன்

மெட்ரோ மாடங்களிலும் புறா

என் போர்வைக்குள் படுத்திருக்கிறேன்

சூழ இருளில்

புன்னகைக்கும் என் இருப்பு

விழிதொடும் இடங்களில்

எல்லாம்  நிகழ்வு

ஒளியென விழியால்

தொட்டு தொட்டு

பார்த்து மீள்கிறேன்

இலைகளின் அலைகளில்

தெரியுது கடல்

எடுத்து வைக்கும்

ஒவ்வொரு கால் தடங்களையும்

அழகாய் எண்ணி எண்ணி வைக்கிறேன்

எங்கும் கரை கடலை

பார்த்திருக்கும் அமைதி

என் அஞ்சலி கட்டுரைக்கு

தகவல் சேர்த்து வைத்திருக்கும்

யாரும் ஒரு போதும்

எழுதபோவதில்லை

இந்த என்னை

நான் சுவைக்கும்

இனிப்பை

*

தின்று தீர்த்தபின்

நிறைகிறது

மிட்டாய் ஜாடி

தீராதவரை

வாழாத தொந்தரவு

*

அழகின் ஆடல்

முகங்கள் கோடி சூடி

மலர் என விரிந்திருக்கிறாய்

வெளி நிறைய

மத்தியில் தேன் என

துளியில் கூடி

துளிர்த்து காத்திருக்கிறாய்

வண்டு சுமந்தளையும்

வனம் நீயே

வந்தமர்ந்த

மறுமலர் நீயே

மலர் இருப்புக்கொள்ளா

இசை நீயே

அழகின் வலைபின்னி

ஆடுகிறாய்

ஆடுவதன் பொருட்டு

மட்டுமே ஆடுகிறாயா

என்பதுதான்

ஆடாதவர்களின் வினா

*

யாரிடமும் சொல்லமுடியாதவை

நான் பேசவேண்டியதை
நீ தீர்மானித்தபோதுதான்
நாம் வேறுவேறாக ஆனானோம்
எதன் பொருட்டு
உயிர் நண்பன் ஆனயோ
எதற்க்கான என்னைவிட
உனக்கு ஒரு ரொட்டி
கூடுதலாக கோடுத்தேனோ
எதன் பொருட்டு
உன் பொருட்டு வாழதுனிந்தேனோ
அது எல்லாம் அடிபடும்
மாய கணம் அதுதான்
நான் பேசவேண்டியதை
நீ தீர்மானித்தபோது
அல்லது
நீ பேசுவேண்டியதை
நான் தீர்மானித்தபோது

நாம் இனைந்ததே
நான் பேசியதையெல்லாம்
நீ கேட்டாய் என்பதற்க்காத்தான்
நான் சொன்ன கதைகளை
நீ நம்பினாய் என்பதற்க்காத்தன்

அப்பாவும் அம்மாவும்
அயலானவர்கள் ஆகி
தம்பி உன்னிடம்
பகிர்ந்து கொண்ட
மிட்டாய் அந்தரங்கத்தை
அப்பாவிடம் மாட்டிவிட்டு
நீ அடிவாங்க வைத்தபோது
மீண்டும் உனர்ந்தேன்
அந்த ஆதி தனிமையை

வாழ்நாள் முழுவுவதும்
புரியவைக்க முயன்று கொண்டே
இருக்கிறது மாணுடம்

யாரிடமும் பேசி முடியாதாத
ஒன்று அமையபெற்றவன்
கதைகளும் கவிதைகளும்
எழுததுவங்கி காலத்திடனும்
மணசாட்சிகளிடமும் பேசதுங்குகிறான்
தான் பேசவேண்டியதை
இன்னொருவரை தீர்மானிக்க
விடும்பொழுதுதான் கலையும்
இல்லாமல் ஆகிறது

இத்தனை அனுக்கமாக
அமர்ந்துதிருக்கும் போதும்
எத்தனை தொலைவாய்
திரும்பியிருக்கிறோம்
இதன் பெயர்தான்
விலக்கமா

காதலிக்கவும்
நண்பனாகவும்
தந்தையாவும்
கடவுளாவும்
இருக்க பெற்று இருக்க வேண்டியது
நல்ல காதுகளை

*

வயலில் விளைவது

அப்பத்தாவும் அப்பாவும்

களைப்பறிக்கிறார்கள்

சித்தப்பா வெற்று உடலில்

தொலைவில் மடைமாற்றி கொண்டிருக்கிறார்

இன்று குடித்து வத்திய

உடல் இல்லை அன்று

நான் சைக்கிள் டீ கொண்டுவருகிறேன்

புடவையைவிட அழகாக காற்றுக்கு

அசையும் வயல்

உள்ளே சென்று வெட்க்கி

சுருண்டு மறைந்து கொள்ளமுடியும்

வெயில் தனியும் மாலையில்

நால்வரும் முக்கால் டம்லர்

டீ விட்டு பருகினோம்

அந்த வயலில்

விளைந்தது காலம்

*

சிறிய தாவல்

உன்னை நீ என்றும்
என்னை நான் என்றும்
அதுவரை நினைத்திருந்தேன்
ஒளியை பற்றிய மெழுகென
உன்னை இழப்பதை
எண்ணி வருந்தினேன்

எத்தனை இனிதிது
நீதான் நான் என்பது
நீயாக நானாகி முந்தைய
என்னை பார்க்கிறேன்
வழியில் மழைக்கு
தேங்கிய நீர் போல
இவளவு சின்ன தாவலா இது

*

தேன் வெயில்

எங்கும்
படிந்து பரவி
ஒழுகி உருகி
திரும்பப்போகும்
தேன் வெயில்
இளவெயில் படிந்த இலைகள்
வண்ணங்கள் மின்னும் பூக்களில்
செந்தேன் முத்தம்
புது நிறம் சூடிய ஆடைகள்
சுடர் விட்டு எழுந்த
பொன் முகங்கள்
கண்நதி வண்ண பெருக்கு
அந்தியில் உதித்த சூரியன்

*

இனிக்கிறது
வெறும் காற்றுக்கு
இத்தனை இனிப்பா
விளக்கில் வந்து விழுந்து
குளிர்காய்ந்திறக்கிறது இரவில் வண்டு
என் உடம்பை நா நீட்டி
சுவைக்கிறது காற்று
இசையில் விழுந்த சொல்லில்
விழுந்தது இசை
நதி நீராட அழைத்ததை
அனைவருமே உணர்ந்தோம்
வானத்து நட்சத்திரங்கள்
வந்தமர்ந்த அவையில்
உன் நடனம்
பசும் கம்பளத்தை விரித்து
சுழன்று சுழன்று
சுத்தி சுத்தி
சுழல் என்றாகி
சட்டென அமர்ந்து மறைந்தாய்
நீ பரிசளித்த
இனிப்பு பெட்டகத்தில்
பாதி பிட்டு நான் உண்கிறேன்
மீதியை இந்தா நீயும் கொஞ்சம் உண்ணு

*

ஒவ்வொறு சொல்லும் ஒரு சொல்

துளி நீந்தும் ஆறு

கோடி நூறு கொய்ய முடியா மலர்

சத்தம் இசைத்த ஆழம்

சிறகு எழுந்த இறகு

சாலை நிறைத்த மாலை

ஓலம் தொட்ட சொல்

காடு கண்ட கண்ணின் சூது

அலை உடைய காமம்

கடலின் தாபம்

பச்சை எரியும் மலை

முத்தம் மலர்ந்த பூ

அம்மை இருள் அப்பன் ஒளி

*

புள்ளி இட்ட கோலம்

இரவில் என் நெஞ்சின்
முடிகளை கோதி பார்த்து
சிலவற்றை புடுங்கிப்பார்த்து
திரும்பி படுத்த மகள்
வானத்து நட்சத்திரங்களை
புள்ளிகளாக பாவித்து
கோலமிட்டு முடிக்க முயன்று
முடியுமுன்னே மீண்டும்
என் மாரின் மயிர்களுக்கு திரும்பினாள்

அவள் வரைந்த
அந்தரத்து கோலத்தை
நான் தொடர்ந்தேன்
அம்மாவைபோலவே
இறைவனின் புள்ளிகள் அழகானவை
அவளைபோலவே
இறைவனின் கோலநோட்டு முடிவதில்லை
அவனுடைய ஒரு வாசல்தான்
இங்கே ஒரு வெளி
ஒரு வாசலின் கோலமும்
இன்னொரு வாசலின் கோலமும்
ஒரு கோலத்தின் இரு புள்ளிகள்
மகாகோலம்
மகாபுள்ளிகள்
மகாஅரிசி
மகாஎரும்பு
மகாஅம்மா
மகாஇரவு
மகாமாரும் சிறியமகளும்

*

நதியின் கரையில் தாகம் தீரவில்லை

நதியின் கரையில்
வாழும் புற்களுக்கு
தாகம் தீரவில்லை
பூக்களுக்கு சுகந்தமும்
பறவைகளுக்கு பறப்பதும்
போதவில்லை
முறுகி திருகும் வெல்லம்
பாகாகி தேனாகி
பின்னும் போதவில்லை
ஒவ்வொன்றும் உருகி உருகி பார்த்தும்
உண்டு போதவில்லை
கரைந்து மீளவில்லை
தவிப்பு ஓயவில்லை

புற்கள் நதியில்
மலர் மணத்தில்
பறவை வானில்
கருவி இசையில்
வெல்லம் தேனில்
தேன் தீயில்
தீ ஒளியில்
ஒளி ஒளியில்
கலக்கும் விடாய் தீரவில்லை

*

இடை விட்டும் விடாத இரு ஆடல்

காற்றின் நிலத்தில்
உந்தி தத்தி
ஒன்றென பறக்கும்
ஜோடி பட்டாம்பூச்சிகள்

ஒன்றின் நடனத்தை
மற்றொன்று தொடர்கிறது
சட்டென்று இரண்டாமதை
நடிக்கிறது முதலாமவது

இனைய முயலும்
இரண்டு இசை
கருவிகள் அவை
இனைய முடியாததன்
சூட்சமம் இசை

ஆடிமுன் அமர்ந்து
முடியாது ஆடும்
ஆடல் அவை

*

தீர்ந்து விட போகும்
ஒளியை நா நீட்டி
கொண்டாடி பருகுகிறது
அந்தி பறவைகள்
கடைசியாக ஆற்றில் ஒரு
முக்கு போட்டு
கரையேருவது போல
பறந்து பார்த்துக்கொள்கிறது

மீண்டும் பகல்
வரலாம் வராமலும் போகலாம்

புத்தம் புதிதாக
பிறந்து வரும் பகலை
அறிவித்து கூறுகிறது
காலை பறவைகள்

மீண்டும் இரவு
வராமல் போகலாம்

*

அழகின் எடை

இயற்கையில் இத்தனை
பெருமரங்களுக்கும் கடும்மரங்களுக்கும்
மத்தியில் இந்த கொடிவகைகள்
பிழைத்திருந்தது எப்படி ?
வலியவை வாழும் நியதியில்
கொடிகள் எப்படி ?

செடி இனத்தில்
கொடி அல்லவா அழகு
மான் மயக்கும் விழிகள்
மலர் இனிக்கும் கனிகள்

மென்மைக்கும் அழகுக்கும்
இருக்கும் தொடர்பு என்ன?
அதற்க்கும் அன்புக்கும்?
மென்மைக்கும் பெண்மைக்கும்?
இயற்கைக்கும் அதற்க்கும்?

முழுமரம் ஒன்றின் மேல்
முழுவதும் பரவி
அதை உண்டு திங்கும்
கொடிவகை ஒன்றை பார்த்தேன்

திசைகள் அற்றது காடு.

*

நாளின் கலை

விடியலின்
புதிய ஆறும்
அதன்மேல் பனியும்
போல
அகமும் நானும் அதுவரை

எப்பொழுதும் போல
அதுவும் ஒரு நாள்
எல்லாவேலைகளையும் போல
அதுவும் ஒரு
அந்திக்கு முந்தைய மாலை

காற்று புது வேகம் கொள்கிறது
குழந்தைகளை தூக்கிப்போட்டு புடிப்பதுபோல
கிளைகளை குழைத்தது
மரத்துக்கு பயம் காட்டுகிறது
விரித்த தோகைகளை மடக்கி வளைத்துகாட்டி அது செல்லும்போது
அடியும் முடியும் மாறி
தூக்கபார்த்த குடையை
பிடித்திருக்கும் நம்மைபோல்
தன்னைதான் வியந்து பார்க்கிறது மயில்
ஒன்றுகூடி காதிகங்கள்
உருண்டோட துவங்கின்றன
மாடுகள் அழைக்க துவங்கியாற்று
ஆடுகள் கழுத்தோடும் கயிற்றோடும்
சேற்று கட்டிவைத்த
மரத்தையும் இழுக்கின்றன
வீடுதிரும்பும் குழந்தைகளின்
அதே வேகத்தில் குடாப்புகளுக்கு
வந்துவிட்டன கோழிகளும் குஞ்சுகளும்
கட்டம் கட்டமாய் கல் பதித்த மொட்டைமாடிகளில்
பிடிமானம் தேடி சுற்றி
காற்று ஒவ்வொரு வீட்டையும்
தூக்க முயன்ற தருணம்
மழைவந்து இனைந்து கொள்கிறது
கொடிகயிரின் மடமடத்த துணிகளில்
மொத்தமான துளிகள்

சிரிப்பும் இடியும்
எல்லா விழிகளிலும் வியப்பு
எல்லா அகத்திலும் கூத்து
இனைத்துகொள்ளும் துடிப்பு

நாட்களின் கலை அந்த நாள்

*

இங்கே இந்தநாள்
இப்படியே இருந்துவிடாதா
மலைஉச்சியோ மழைநாளோ
இந்த நாள் உறைந்து
என்றென்றதுமாக இதுவே ஆகாதா

இந்த ரயிலுக்கு
நிறுத்தங்கள் வரவேண்டாம்
இந்த போர்வைக்குள்
இரவு நிறைவுறவேண்டாம்

ஒளிகள் மட்டும்தான்
மானுடமா
இரவுகளை விளக்கால்
நிறைப்பதுவா

நினைவுகளோடு இறக்கிறாள் பாட்டி
பெயர்கள் தெருக்கள்
பலகாரகுறிப்புகள்
பெரியதும் சின்னதும்
அவசியங்களற்றதும் அழகானதும்
எத்தனை


நினைவாக்கபட வேண்டாத ஒன்று
நினைவாக போகாத ஒன்று
நினைவு அல்லாத ஒன்று

*


ஒரு கையை அப்பாவுக்கு
கொடுத்து மறு கையில்
தன்னை இறக்கிவிட்ட
பேருந்துக்கு டாடா
அசைக்கிறான் சிறுவன்

உடன்
இறுதி இருக்கையின்
ஜன்னல்ஓர நான்
பேருந்தாகி காட்டும்
டாடா

*


வானம் அசைகிறது

தரைவந்த பறவையின் இறகை
கை நுனியில் வைத்து
துடுப்பிட்டதும் நானும் பறவை

சொல்லில் எழும் வெளியில்
நீந்தி களித்து
மலரின் உந்தி சுழியில்
உள்நுழைந்து மீள்கிறேன்

முத்தமிட்டு முத்தமிட்டு
முடிக்க முடியாத
அருகில் நீ

*


பயிருக்கு பச்சை நிறத்தையும்
வானுக்கு நிலையில்லா நீலத்தையும்
விடியலுக்கு செந்தூர மஞ்சலையும்
அடித்தவன் யார்

அது கிராமத்து சிற்றுந்துக்கு
பச்சை வண்ணமிட்ட கண்

*

அதன் ஆடையின் நிறம்

நீந்த நினைக்கசொல்கிறது
நாற்றங்கால்
பயன்மதிப்பு அற்ற
பச்சிலம் நாற்றுகள்
இன்பம்
தருவது ஏன் இறைவா
ஒரு தோகைநுனி ஏந்திய
திரண்டு உருண்டு
ஒட்டாத உடையாத நீர் துளி
எந்த ஆடலின் பாவம் இறைவா
ஒழுங்கில்
நடபட்ட நாற்றுகள்
வழியே ஒழுகிய பாதை
எந்த உலகத்துக்கு
பனியால் பாதம் கழுவும்
வரப்பின் புற்கள்
கங்கை அன்றோ
பச்சை பச்சை
என பசுமை
இது
மெல்ல பறக்கும் பறவை
அசைவது அசையாத நதி
இதோ வளர்ந்த மகள்
வெல்வெட் பாசி படிந்த
ஆளற்ற வீடுகளில் உயிர்
காற்று அசைத்து
கதிர் குழைந்தசையும் வயல்
கர்ப்பினியின் நடன முத்திரை
விசிரியடித்து மழை விலகிய
நடுவயது நாத்து பரப்பு
பொன்நுனி பனிமுடி அன்றோ
உணவு தரும் ஒன்றுமட்டுமா
ஒற்றை நாற்றே நீ
பச்சை என நிறம் காட்டும்
ஒன்றுமட்டுமா பசுமையே நீ

*

வாசலில்

கைவந்துவிட்ட குஷியில்
பூவரசு இலை பீப்பீயில்
அன்பின் ராகம் இசைக்கிறான்
பூசணிபூ கிரீடம் அணிந்த
குட்டி கிருஸ்து
திண்ணையில் சம்மனம் கொட்டியமர்ந்து

வீட்டுக்குள் பசியாரியபடி
ஒற்றை கண்ணை
என்மீது வைத்திருக்கிறாள்
ஏழுஅடுக்கு மரமல்லி ஆரம்
அவளே செய்து அணிந்திருக்கும்
அக்காள் தேவி

ரன்னிங்கில் ஏறும் வித்தை அறிந்த
கேள்வியில்லா அர்ஜுனன்
இப்பொழுதுதான் ஓடியிருக்கிறான்
கொள்ளைப்புறத்துக்கு
வேப்பங் குச்சி உடைத்து
வில் செய்ய

அம்மா கோலமிட்ட வாசலில்
அப்பா நட்ட மர நிழலில்
நூனாகாய் தேர் செய்து
மெதுவாக செலுத்துகிறான்
குழந்தை கிருஷ்ணன்
கீதை உரைக்க

சிரித்த முகத்துடன் விரைந்து வந்து
தேரை நிறுத்தச் சொல்கிறான்
தூக்கி எறியாது
நிஜ ராட்டையை சுழற்றியபடியே
புதிய கேள்விகளோடு
நிஜ காந்தி

*

அந்தரத்தில் அலகு நீட்டி
அருந்தப்படும் துளிமழை

கலர்கலராய் சட்டினி ஊத்தி
உண்ணப்படும் கற்பனை தோசை

வானில் மாலை கோர்க்க
பறக்கும் நாரைக் கூட்டம்

தன் முழுசாப்பாட்டு இலையை
பாதியிலேயே மூடிவிட்டு
உயர்தர சைவ உணவகத்தின்
வெள்ளி விலக்கு மின்னும்
குளிர் சாதன அறையிலிருந்து
வெளியேருகிறான் கண்ணீரோடு
ரஸ்கோல்னிக்கோவ்
எதிரே நுனி நாற்காலியில்
ஏழாம்பொருத்தமாய்
மதியத்தில்
மசால்தோசை கேட்டு வாங்கி
உருட்டி உருண்டைப்பிடித்து உண்கிறார்
ஒரு பொக்கை வாய் கிழவர்
மழைச்சகதி தெளித்தூரிய
தன் வேட்டிக்குள்
அவர் இடுக்கி இருக்கிறார்
ஒரு சின்ன கட்டை பையை.

*

தீ

சுட்டு எரிப்பதா நெருப்பு
எரிசாராயம் என பத்தி தகிப்பதா நெருப்பு
குத்தி கிழிப்பதா நெருப்பு
நாவில் ரத்தம் நனைப்பதா நெருப்பு

எழுதாத கவிதைகளை யார் படிப்பது
உன்னிடம்தான் கேட்கிறேன் சொல்
புரியாத மொழியில் யார் பேசுவது
அதன் பொருள் தான் என்ன சொல்

விண்ணில் எரியும் மீன்களை
விளக்கென கொண்டேன்
மன்னில் புதைந்த எலும்புகள்
மட்க செய்கிறது என்னை

காட்டில் கண்டாயோ உன் கவிதையை
வீட்டில் உறங்கி கிடப்பது யார்
பித்தை ஊற்றி சித்தம் எரிக்கிறேன்
பின் மண்டையில் அடிப்பது யார்

அன்னை ஓடுகிறாள் அம்மணமாய்
அவள் உடலில் எழுந்தது தீ
அவள் வயிற்றில் ஓர் கரு
அது உண்டு களிப்பது தீ

ஒற்றை எழுத்தில் பொருள் கொண்ட தீயே
உண்மையை சொல் நீதானே எரித்தாய்
அன்னம் ஊட்டிய கைகளில்
அதை எப்படி செய்தாய்

எழுந்துவருவேன்
உன்னை வென்று கடப்பேன்
இல்லையென்றால்
எஞ்சும் சாம்பலில் என்றுமிருப்பேன்

*

பார்க்காத தொலைவில்

பூத்த மலர்

ஆளில்லா அறையில்

கேட்க்கும் இசை

தூங்கிவிட்ட பின்பும்

மின்னும் விண்மீன்

நொண்டி அடிக்க அழைக்கிறாள்

என் மகள்

இரண்டு கால்களை

தூக்கி செல்கிறேன் நான்

*

மொழி மீட்டி
எழும் இசை
தந்தி அதிரிவில்
விரல் நடனம்

குழல் கட்டிய கவிதை
நிறம் உரிய சொல்
தூரிகை துளி பாவம்

காலசைய கையசைய
உலகசைய
அந்த விழியசைவில்
சாரம்

*

தளும்புகிறது

கடல்.

மடையில்லா பெருநதி

ஓடம்.

பூத்த மலர் கேட்பது

இசை.

எல்லாம் என்

குழல் விழுந்த துளை.

*

பறவை பற்றி ஒரு வரி எழுதி
அவன் செய்வது
பறப்பதைத்தான்.

பறப்பது
பறவையைவிட
சுலபம் அவனுக்கு.

*

Option

எட்டுமாடி கட்டிடத்திலிருந்து
விழுந்து இறந்தவனிடம் கேட்டேன்
ஏன் என்று
அது எப்பொழுதுமே தன்னிடமிருந்த
Option என்றான்.
ஒரு கையில் அருவாளும்
மறுகையில் தலை ஒன்றுமாய்
சென்ற கொலைகாரனிடம் கேட்டேன்
அவனும் அது ஒரு Option என்றான்.
மிதமீஞ்சி குடித்து வந்த
நன்பனிடம் கேட்டேன்
ஏன்டா என்று
இது சற்று safe ஆன option என்றான்.
ஓவியன் ஒருவன்
தான் தேர்ந்தெடுத்த தூரிகை இது
என் நிமித்தம் இது
என்றான் கண்களில் பெருமிதம் பிதுங்க.
ரயிட்டு என அவன் பக்கதில் இருந்த
புகைப்பட காரனிடம் கேட்டேன்
ஏன் என்று
எனக்கு பிடித்திருக்கிறது
என்றான் சுருக்கமாக,
ஆனால் அவன்
அவப்போது அழுகவும் செய்கிறான்.
எழுத்தாளர்கள் அப்போது
பக்கதில் இல்லை.
அப்பாகளிடம் கேட்டாள்
அவர்கள்
நமக்கு optionகளை சொல்கிறார்கள்.
தோற்றவன் ஒருவன்
காலமும் சூழலும் தன்னை
அந்த தேர்வை நோக்கி தள்ளியதாக சொல்கிறான்.
(சந்தேக படாதீர்கள்
அவன் ஒன்றும்
பக்கதில் உள்ளவனை
பார்த்து எழுதியவன் இல்லை. உண்மையிலேயே தோல்வியால் தேர்ந்தேடுக்கபட்டவன்.)
மகிழ்ச்சியாக இறுபவனிடம்
எப்பொழுதுமா என்று கேட்டாள்
அவன் அவ்வப்போது என்கிறான்.

மன்னிகவும்
நான் யாரையும்
எள்ளி நகையாடவில்லை
என்னிடமும் சில Optionகள் உண்டு
அதனால் தான்
அனைவரிடமும்
Option களை பற்றி கேட்கிறேன்.
பிறக்காத குழந்தை ஒன்றிடம்
கேட்கவேன்டும்
பிறப்பது உன் option ஆ என்று
பிறந்தபின் பின் நீ செய்வதும்
முன்பே உன் option ஆ என்று
இல்லை
Option னே இன்றி
வாழ்பவனிடம் கேட்கவேண்டும்
அது இயல்வதா என்று
சொல்லிதறுவாயா அதை என்று.

*

என்னுடைய எண்ணிக்கை

நான்
இந்த இருநிமிடங்களில்
சாம்பலும் செம்மஞ்சலும்
வெளிர் நீலமுமாக
முலாம் பூச்சுண்ட
வெளியை நோக்கி
எண்ணியதில் இக்கணம்
ஏழாக உள்ளது
இந்த
பறவைகளின் எண்ணிக்கை.

ஒன்றில் இருந்துதான்
துவங்க முடிந்தது
என் என்னிக்கையை
அவைகளைப்போ பூஜ்ஜியதில்அல்ல.

ஆனால் முடிவில்
கட்டாயம்
பூஜ்ஜியதில்தான் முடியும்
என் எண்ணிக்கை.

*

ஒவ்வொருமுறையும் வீட்டிலிருந்து

ஒரு துயரமான

கவிதையோடு திரும்புகிறேன்

நான்

தினம் தினம் வீட்டுக்கு செல்கிறேன்.

*

அன்பின் எண்ணிக்கை

எல்லோர் இலையிலும்
சரிவிகிதமாக இரண்டு
முத்தங்களை பரிமாறுகையில்
யாருக்கோ மூன்றாவதை தருகிறீர்கள்
ஏந்தியகைகளின் வரிசைக்கு
ஒரு ரொட்டி என்கையில்
யாரிடமோ மட்டும்
இரண்டாவது வேண்டுமா
என்று கேட்கப்படுகிறது
உங்களின் விருந்தின்
ஒவ்வொறு சுற்றிலும்
ஒரு துளி மது
அந்த ஒருவருக்கு அதிகம்
உங்களது பேரன்பின்
ஒரு துளி மதுவையும்
இரண்டாம் ரொட்டியையும்
மூன்றாவது முத்தத்தையும்
நாங்கள்தான்
அழுக்கேறிய பிசாசின்
மூத்திரத்தால் கழுவுகிறோம்.

*

வாழ்க்கை முழுக்க
கல்லூரியில் வாழவே
ஒருவன்
கலைஞனாகிறான்.

இப்பொழுது அவனால் மீண்டும்
குழந்தையாக முடியாது
இனி பழையபடி
மொட்டை வெயிலில்
கிரிகெட்டாட முடியாது
அதனால் தான்
கலைஞனாகிறான்.
அவன் அறிவான
E=Mc ஸ்கொயரை
ஒன்றுவிட்ட மச்சானுக்கு
செய்யவேண்டிய மொய்யை.

*

துவங்கியதைபோல்

அறை ஒன்றில்

முடிகிறது வாழ்வு.

இறுதி நாளின் அறை.

அம்மாவின்

மதிய சமையல் போல்

அது தயாராகி கொண்டிருக்கிறது.

இல்லாமல் போனவர்களின்

அறைகள்

குடித்து முடித்து போட்ட

உயர்தர மதுபுட்டியில்

எஞ்சியிருக்கும் துளி.

அத்துளி கொண்டு மீட்ட முடியும்

அந்த ஒரு புட்டியை.

பெய்யும் மழையில்

நான் நனைக்கும் மழையே

என் காலம்

இப்பெரு வெளியில்

வாழும் ஒரு அறை போல்.

*

அம்மை வார்த்தாய் நட்சத்திரங்கள்.

*

அன்றிரவு நாமிருவரும்

பருகிய மதுவில்

நண்பா

துளி விஷம்

கலந்தது யார்

நானா

நீயா

*

ஆற்றங்கரையில்
அழகென்று எண்ணி
நான் கடந்த
அரளி அது.
புஜத்தில் இரண்டு
நரம்புகள் கிளைபிரிய
புல்அப்ஸ் எடுத்த
உத்திரம்.
கடைசியாக
கேப்பு சத்ததிற்காக
அழுத்திய துப்பாக்கி.
முதன்முதலில்
எவளவு பெரிய குளம்
என வியந்த
கடல்.

இங்கு யாருமே இல்லை
என்னை நானே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எத்தனை தனித்தது இந்த இருப்பு
ஆனாலும்
அக்காவிடம் மறைத்துண்ணும் குறுகுறுப்பு.

*

சாம்பாருக்கு பின்

மறுபடிக்கும்
சாம்பாருகாக இருக்கும் போது
அம்மா முதல்
எல்லோரும் ரசத்திற்காக கேட்டார்கள்
சிலவேளைகளில்
இலையில் சோற்றோடு
சாம்பாருக்காக இருக்க
எந்த கேள்வியும்யின்றி
ரசம் பரிமாறபட்டது
நான் அன்பை
சாம்பாருக்கு பின்பான
சாம்பாரில் தேட
அன்பு
சாம்பாரோடு கைகழுவி எழுவதில்
இருந்தது.


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up