பெயர் [சிறுகதை]
1
புல்லாங்குழல் முருகேசை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார் ஓவிய சார். நாங்கள் ஒற்றைப் பெருங்குரளில் “தெரியும் சார்” என்றோம்.
“அப்ப நேரா பாடத்துக்கு போயிரலாம்”
“யாராது போய் ட்ராயிங் போர்டை எடுத்தாங்க”
நான் வேணியிடம் முன்பே சொல்லி வைத்திருந்ததால் பையல்கள் வரிசையில் யாரும் எழுவதர்க்கு முன் நாங்கள் எழுந்து ஓடி விட்டோம்.
பள்ளியோடம் என்பது ஒற்றைப் பெரும் ஓட்டுச் சாய்ப்புதான். அதன் மூளையில் ஹெச்.எம் சாருக்கு மட்டும் ஒரு ரூம். ஆனால் பள்ளியோடத்து நிலம் மரங்கள் நிறைந்த பெருவெளி. ஐந்தாவது படிக்கும் எங்களுக்குத் தமிழ், சரித்திரம், பூலோகம், விஞ்ஞானம், கணக்கு ஆகிய பாடங்கள் தினமும் உண்டு. விளையாட்டு, ஓவியம், தோட்டக்கலை ஆகிய வகுப்புகள் வாரம் ஒருமுறை, இவை மூன்றும் மரத்தடிகளில் நடக்கும். அதேபோல விஞ்ஞானத்துக்கும் தமிழுக்கும் நாங்கள் மரத்தடிக்கு தான் வருவோம். ஒரு கூடம்தான் ஆகையால் ஒவ்வொரு கிளாஸ் பிள்ளைகளும் சில பாடங்களுக்கு மரத்தடிக்கு வரும் சுற்று முறை எங்கள் பள்ளியில் இருந்தது.
வேணி பின்னால் நிற்க நான் ஹெச்.எம் அறையின் நிலையை பிடித்தபடி ‘’டீச்சர் சார் உள்ளே வரலாங்கலா’’ என்றேன். அனுமதிக்கான அவரின் கனைப்பொளி கேட்டது. ஹெச் எம் சார் வெத்தலை போடுபவர். கணக்கையே வெத்தலை போட்டபடி தான் படிப்பிப்பார். ஊரில் வெற்றிலை போடாதவர்களை தான் விரல் விட்டு எண்ண முடியும். நான் பலகாரங்கள் தின்றதை விட தாத்தா அப்பாயி அம்மா அப்பா என அனைவரிடமும் வெற்றிலை காம்பு வாங்கி தின்றதுதான் அதிகம்.
ஹெச்.எம் மோவாயை தூக்கி “ம்ம்” என்க அவர் திருத்தி கொண்டிருந்த விடைத்தாளில் செந்துளிகள் தெளித்தது. நான் “ட்ராயிங் போர்ட் எடுத்தார சொன்னாரு ஓவிய சார் ஹெச்.எம் சார்” என்றேன். அவர் “ம்ம்’’ என கைகாட்டி விட்டார். நாங்கள் இருவரும் எடுத்து சென்று கொண்டு மரத்தடியில் வைத்துவிட்டு எங்கள் இடத்தில் வந்து அமர்ந்தோம். வேணி எம்மாடியோ என்று அமர்ந்தாள். நான் அடக்கியிருந்த மூச்சை அப்படியே இருக்கியபடி அமர்ந்தேன். இல்லை என்றால் பையல்கள் சிரிப்பார்கள். வழக்கம் போல் பின்னால் இருந்து முத்துலட்சுமி ட்ராயிங் போர்டை காட்டி “எங்க அப்பா செஞ்சது” என்றாள். அவள் அப்பா ஆசாரி. ஊரில் உள்ள அனைத்து மரசாமானும் அவர் அப்பாவோ தாத்தாவோ மாமாவோ செய்ததுதான்.
ஓவிய சார் “சைலேன்ஸ்’’ என்றபடி அவர் கையோடு கொண்டு வந்திருந்த புகைப்படம் ஒன்றை போர்டில் மாட்டி “இது தான் வின்சென்ட் வான் கா” என்றார். படத்தில் இருந்த மனிதருக்கு ஊரில் பிணத்துக்கு வாய் பிளக்காமல் இருக்கக் கட்டும் கட்டுபோல ஒன்று கட்டியிருந்தது. “கட்டாயம் பரிச்சையில் இந்த கேள்வி வரும் பென்சில் நோட்ட எடுத்து எழுதிக்குங்க” என்றபடி அப்பெயரை பக்கத்தில் இருந்த கரும்பலகையில் எழுதினார். அதை பார்த்து வின்சென்ட் வான்கா என்று வாய்க்குள் சொல்லியபடி நாங்கள் எழுதிவைத்துக் கொண்டோம்.
யாரையும் தனிப்பட்டு பார்க்காமல். பொதுவாகக் குடத்தின் மேல் தன் பார்வையை நிலைத்தபடி பேச துவங்கினார் ஓவிய சார்.
“வின்சென்ட் வான்கா. 1853 ஆம் ஆண்டு நெதர்லாந்து என்னும் இடத்தில் பிறந்தார். கிறிஸ்து கடவுளுக்கு சாமியாராக இருந்திருக்கிறார். தன்னுடைய நுப்பதாவது வயதில் வரைய துவங்கினார். உலகத்தில் முக்கியமான ஓவியர். ஓவியத்தில் எனக்கு இவர்தான் தெய்வம். வாழும் காலத்தில் ஏழ்மையில் வாடிய வான்காவின் ஓவியங்கள் அவர் இறந்த பின்பே புகழ் அடைந்தன. அவை இன்று எல்லா பெரிய காட்சிக் கூடங்களிலும் உள்ளன. ஒவ்வொரு ஓவியமும் நம் ஊரைப் போல் பல ஊர்களை வாங்கிப் போடும் அளவிற்கு விலை போகிறது. அதை இருந்து பார்க்க அவர் இல்லை. தாழ்வில்லை. உங்கள் வரலாற்றுப் பாடத்தில் அவர் பெயர் என்றும் இருக்கும்.”
“இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்கள் தேர்வுக்கு நீங்கள் சூரியனை வரைய வேண்டும். அந்தப் படத்தை வைத்தும் உங்களிடம் நான் தனிபட்டுக் கேட்கும் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வைத்தும் மதிப்பெண் இடுவேன். சூரிய உதையம் இதுதான் அடுத்த வார வகுப்புக்கான வீட்டு பாடம். லீடர் குறித்து வைத்து கொள்ளவும். ஆளுக்கு ஒரு சூரிய துதையம் வரைந்து எடுத்து வர வேண்டும். சூரியன் என்றாலே வான்கா. அவன் அதை வெவ்வெறு வகையில் வரைந்தவன். மஞ்சள் நிறத்தவன். சூரியனால் பித்தானவன். காதலுக்காக தன் காதறுத்து கொண்டவன். தம்பி தியோவின் கரம் பற்றி வாழ்ந்தவன். போதும் என்று வாழ்வை முடித்துகொண்டவன். புல்லாங்குழல் முருகேசை போல் தன் கலையுடன் நிலம் சுற்றி அலைந்தவன். வயல் சுற்றிய பெயர் தெரியா இவ்வூரில் அவன் பெயர் முழங்குவதை மங்கலம் என்றே கொள்கிறேன்”
“நண்பர்களே! என் வீட்டில் தொங்கும் இந்த வான்காவின் ஓவியத்திற்கே நான் பூச் சூட்டுகிறேன். பத்தி கொளுத்துகிறேன். அவனே என் தெய்வம். இது அவன் தன் காதை அறுத்துக் கொண்டபோது அவன் தன்னைத்தானே வரைந்து கொண்டது. இதை நீங்கள் பார்ப்பதற்காக இங்கு வைத்துள்ளேன். ஒவ்வொருவரும் இதை தொட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். வான்கா வெறும் வான்கா இல்லை. அவன் ஓவியன் வின்சென்ட் வான்கா. நாம் எதுவாக ஆக நினைக்கிறோமோ அது நம் பெயருக்கு முன்னால் வந்து நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நான் வெறும் டீச்சரோ சாரோ இல்லை. நான் ஓவிய . நன்றி” என்று விட்டு வழிந்தொழுகும் தன் கண்களை துடைத்தபடி ஓவிய சார் விலகிச் சென்று விட்டார். நல்லதங்கா நாடகம் பார்த்தவர்களாக நாங்களும் அழுதோம்.
ஓவிய சார் திருவிழாவில் மைக் பிடித்து பேசும் போதும் இப்படித்தான் பேசுவார். வேறு ஒருவராக ஆகிவிடுவார். கதை புரியவில்லை என்றால் கூட ஊரே அழுகும். இன்று வகுப்பை அப்படி எடுத்து விட்டார். அவர் வீட்டுக்கு நான் பால் வாங்கச் சென்று இருக்கிறேன். ஆனால் இந்த வான்கா படத்தைப் பார்த்ததில்லை. நாங்கள் ஒவ்வொருவராக தொட்டுப் பார்த்து முடிப்பதற்க்கும் அவர் திரும்பி வருவதற்க்கும் சரியாக இருந்தது. வாய் நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டு கையில் ஒரு கெட்டிஅட்டை பெய்ன்டீங் நோட்டு புஸ்த்தகத்துடன் வந்தார்.
அந்த நோட்டைத் திறந்துகாட்டி அதில் உள்ள வான்கா வரைந்த படங்களை எங்களுக்குக் காட்டினார். நான் படங்களை விட எண்ணை மின்னும் அந்த புஸ்தகத்தின் தாள்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் உள்ள படங்கள் கண்ணில் பார்க்கும் நிஜங்களை விட அழகாக இருந்தது. சில இடங்களில் கோட்டு சட்டை போட்ட வான்காவின் தன் படங்களும் இருந்தது. சார் முதலே சொல்லிவிட்டதால் நான் வான்காவை முருகேசைப் போல் ஒற்றை வேட்டியோடு யோசித்து வைத்திருந்தேன். எனவே வான்கா வெளிநாட்டுக் காரர் கோட்டு சட்டை போட்டவர் என்பதை கற்பனையில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியபடி இருந்தது. காட்டிச் சென்று கொண்டிருந்தவர் சட்டென்று புத்தகத்தை மூடினார். எக்கி எக்கி பார்த்துக் கொண்டிருந்த கூட்டமே ஒன்றெனத் தரையில் குந்தி அமர்ந்தது.
ஓவிய சார் கூட்டத்தில் ஒருவனை கைசுட்டி “டேய் பொழியவா இங்க வா” என்றார். நாலாம் வகுப்பு கூட்டத்திலிருந்து பொழியவன் எழுந்து சென்றான். உடல் நடுங்க கூசிக் குறுகி அவர் அருகே சென்றான். பொழியவனை உடலோடு அணைத்துக் கொண்டு அவன் தோள் பற்றி எங்களை நோக்கி அவனைத் திருப்பி, ஓவிய சார் “புல்லாங்குழல் முருகேசன் யாரா” என்று கேட்டார். அவன் “என் அப்பா” என்றான். ஓவிய சார் அவன் தாடையில் கைகுடுத்துத் தாங்கியிருந்த படியால் அவன் முகம் எங்களை நேருக்கு நேர் பார்த்திருந்தது.
பொழியவனிடம் ஓவிய சார், ட்ராயிங் போர்டில் மாட்டியிருந்த அந்த படத்தைக் கொடுத்தார். அவன் அழுதுகொண்டும் சளியை புறங்கையால் துடைத்துக் கொண்டுமிருந்தான். “இந்த படத்த வச்சுக்கோ. வீட்டில் யாரும் எதுவும் சொன்னோவ்னா திருப்பி என்ட கொண்டாந்து குடுத்துட்டு. உனக்கு என்னைக்கு வேணுமோ அன்னைக்கு வாங்கிக்கோ. இது உன்னோடது’’ என்று அவனிடம் படத்தை எடுத்துக் கொடுத்தார். அவன் மெளனமாகப் பெற்று கொண்டு இருக்கையாலும் அதன் சட்டங்களை பற்றியபடி தன் இருப்பிடம் நோக்கி வந்தான். குனிந்த தலையில் அவன் உதடுகள் துடித்து கொண்டிருந்தது. “உங்க அப்பனும் ஒரு வான்கா டோய்” என்று பின்னாலிருந்து ஓவிய சார் குரல் கொடுத்தார்.
2
“மீண்டும் நாளை சந்திப்போம்” என்று சொல்லி பள்ளிக்கூடத்தில் இருந்து விடைபெற்ற போது எனக்கு ஒன்று புரியவில்லை. ஏன் முருகேசனுக்கு போய் சார் இவ்வளவு மதிப்பு குடுத்து பேசுகிறார். ஊரில் அவரை யாரும் பொருட்படுத்துவதில்லை. த..போ..வா என ஆட்டு மாட்டை நடத்துவதைபோல் தான் அவனை நடத்தினர். ஊரில் வானியூத்தி கோயிலில் படுத்துறங்கிப் பூசாரியோடு சாமிக்கு அனைத்தும் செய்து கொண்டிருக்கும் சில நொண்டிகளைப் போல்தான் முருகேசும் கருதப்பட்டான். முருகேசன் வாசிக்கும் குழலையும் யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை. நொண்டிகள் மட்டுமே ஊரில் அவனை அண்டும் ஒரே மனிதர்கள். பின் ஏன் அவனுக்கு இந்த முக்கியத்துவம். அதுவும் பாடப்படிப்பில் வரும் வான்கா அளவிற்கு.
பள்ளி முடிந்ததும் என் வேலை, பள்ளியில் இருந்து வீட்டுக்குச் செல்லும் பாதையில் உள்ள எங்கள் வயலுக்குச் சென்று அங்கு மேய்ந்து முடித்திருக்கும் மாடுகளை அவிழ்த்து வீட்டுக்கு ஓட்டிச் செல்வது. நான் எதிர்பார்த்துச் சென்றதைபோல் அங்கு அப்பா வயலில் இருந்தார்.
என்னை பார்த்ததும் வழக்கம் போல அப்பா “ஆயி பள்ளியோடம் விட்டுதா. பாடம்லாம் நல்லா கவனிச்சுகிட்டியா. எல்லாத்தயும் நல்லா மண்டையில நெட்டர் பண்ணிக்கோ” என்றார்.
நான் “அதுலதான்ப்போவ் இன்னைக்கு ஒரு சந்தேகம்” என்றேன்.
“நான் தீக்குற சந்தேகமா. இன்னைக்கு யென்னா தோட்ட பாடமா’’
“அதுயில்லபோய், இன்னைக்கு ஓவிய வாத்தியார் பொல்லாங்குழல் முருகேச பத்தி ரொம்பப் பெருமையா பேசுனாரு அதான் ஒன்னுமு புரியல”
“மாட்ட ஓட்டிட்டு வீட்டுக்கு போ ஆயி. அப்பரமா ஆரஅமர சொல்றன்”
கொஞ்ச நாட்களில் அப்பா மாமா சித்தப்பா ஊர் மனிதர்கள் ஏன் பொழியவனிடம் இருந்துகூட முருகேசை பற்றி எக்கச்சக்க தகவல்களை விசாரித்திருந்தேன். ஆனால் அதில் ஒன்று கூட ஆசிரியர் சொல்வதைப் போல் மதிப்பு மிக்கதாக யாரும் எதுவும் சொல்லி விடவில்லை. எல்லோரும் முருகேசை கிறுக்கன் என்றனர். சிலர் ஓவிய சாரையே கிறுக்கன் என்றனர்.
புல்லாங்குழல் முருகேசன் நடுத் தெரு ராசு வலுவுடையாரின் இளைய மகன். ராசு வலுவுடையார் தன் சிறு வயதில் தந்தையை இழந்து மாமா வீட்டில் மாடுமேய்த்துக் கொண்டும் நிலங்களை பார்த்து கொண்டும் இருந்தார். பின் கப்பலுக்குப் போய் இருபது வருடங்கள் கழித்து ஊருக்கு வந்தார். கொண்டு வந்திருந்த பொன்னை வைத்து ஒரு வேலி நிலம் வாங்கி முக்கியஸ்தர் ஆனார். தன் மாமன் மகளையே மனம் முடித்துக் கொண்டார், அவருக்கு இரண்டு ஆண் மகன்கள். இப்பொழுது ராசு வலுவுடையார் காலமாகிவிட்டார். அவருடைய மூத்த மகன் ராமன் வலுவுடையார் பட்டாளத்தில் இருக்கிறார். நிலங்களை ராமன் அவர்களின் மைச்சினன் பார்த்து கொள்கிறார். இந்த ஊரிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து அவருக்குத் திருமணம் முடித்து வைக்கலாம் என்பதற்கான காரியங்கள் நடந்து கொண்டிருந்தது.
முருகேசன் சிறு வயது முதல் பல உடல் கோளாறுகள் கொண்டிருந்தான். காலை இழுத்து இழுத்தே அவனால் நடக்க முடிந்தது. அவன் வயதொத்தவர் வம்பட்டி தூக்கி வரப்பு வெட்டும் போது அவனால் அருவாள் எடுத்து நிதானமாக ஒரு வெட்டு வெட்ட முடியவில்லை. கேட்ட கேள்வியை உள்வாங்கி அவனால் பதில் உரைக்க முடியவில்லை. மனம் போன போக்கில் அவனாக எவ்வளவு வேண்டுமானாலும் பேசினான். முதலில் எல்லோரும் பரிதாபப் பட்டனர் பின் அவனை கேளி செய்து அந்த துயரத்தை கடந்தனர். வலுவுடையார் அவனை கையில் தூக்கியதேயில்லை. தாய்மாமன் மகளை கட்டியதால் ஒரே ரத்தத்தால் வந்த பிரச்சனை என்ற பேச்சே எங்குமிருந்தது.
முருகேசன் வளர்ந்து வந்தபோது அவன் சுத்துப் பட்டு ஊர்களில் நடக்கும் எல்லா திருவிழா நாடகங்களுக்கும் போகக் கூடியவனாக இருந்தான். திருவிழா நடக்கும் சேதிகளை அவனிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கான ஆட்கள் அவனுக்கு இருந்தது. நல்லதங்காள் வள்ளி திருமணம் ஆகிய நாடகங்களில் உள்ள பாடல்களை முழுவதும் கேட்டு வந்து ஊரில் மனப்பாடமாகப் பாடினான். அப்பொழுது அவனை எல்லோரும் பாராட்டி ஊக்குவித்தனர். தங்கள் வேளைகளுக்கு ஊடே அவனை பாடச்சொல்லியபடி ஊரில் ஒவ்வொருவரும் தங்கள் வேலைகளைப் பார்த்தனர். ஊர் கூடும் காளியம்மன் கோவிலில் ஒரு குறிப்பிட்ட காலம் அவன் பாட்டும் கச்சேரியுமாக இருந்தது. தங்களில் ஒருவனால் பாட முடிகிறது என்பதே ஊர் மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பழகிய பின் ஏதேனும் முனுமுனுத்தபடி அவன் வந்தாலே விரட்டி அடித்தனர். பாடுவது என்பது ஊரில் வித்தை தான். பழகிய வித்தை அவர்களுக்கு சலித்து விடுகிறது.
முருகேசனின் அது வரையிலான செய்கைகளைப் பொருத்திருந்த வலுவுடையாரும் அண்ணன் ராமனும் முருகேசன் பக்கத்தூர் திருவிழா நாடகத்தில் விடிய விடிய மேடை ஏறி பாட்டு பாடுவதைக் கேள்விப்பட்ட பொழுது தாங்கிகொண்டு இருக்க முடியவில்லை. மேடையில் இருந்து வீடு வரை முருகேசை அவரின் அண்ணன் இழுத்துக் கொண்டு வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் முருகேசை யாரும் தடுக்க முடியவில்லை. அவன் முழுவதும் தன்னிச்சையாக இயங்கத் துவங்கினான். பல ஊர்கள் நடந்து நாடகங்கள் அல்லாமல் பாட்டுக் கச்சேரி கேட்கத் துவங்கினான். கும்பகோணம் மன்னார்குடி நிடாமங்கலம் என அவனைப் பார்த்ததாக ராசு வலுவுடையாருக்கு சேதி வந்தபடி இருந்தது. யாருக்குத் தெறியும் முருகேசு தஞ்சாவூர் வரைக்கும் போய் பாட்டு கேட்டானோ என்னவோ. அம்மாபேட்டை ரயிலடியில் அவன் இருக்கும் நாட்கள் அவன் வீட்டில் இருக்கும் நாட்களை விட அதிகம் என்றானது. தேவையான பணத்தை வீட்டில் இருந்து அவனே எடுத்துக் கொண்டான். பிரோலில் பணம் இல்லை என்றாலோ தர மறுக்கப்பட்டாலோ, வாசலில் அமர்ந்து கிடைக்கும் வரை அழுதான். பணம் இல்லை என்று சொன்னால் பொருட்களைப் போட்டு உடைத்தான். முருகேசை கையோங்கி அடிக்க யாருக்கும் மனம் துணியவில்லை.
அப்படி இருந்து கொண்டிருந்த முருகேசன் ஒருநாள் புல்லாங்குழலுடன் ஊர் வந்தான். அதன் பின் அவன் ஊரைவிட்டு எங்கும் சென்றதில்லை. அந்தப் புல்லாங்குழல் அவனிடம் வந்ததைப் பற்றி ஊரில் இரண்டு கதைகள் நிலவியது. ஒன்று அந்தக் குழலை எங்கிருந்தோ அவன் திருடிக் கொண்டுவந்து விட்டான். அதனால்தான் ஊரை விட்டு எங்கும் செல்லாமல் இருக்கிறான் என்பது. இரண்டாவது ஏதோ ஒரு கச்சேரியில் இவன் குறுக்க புகுந்து எதையோ பாட போக ஒரு வித்வான் அவனுக்கு அதைப் பரிசளித்தார் என்பது. ஊருக்குள் வயல் வெளிகளில் ஆற்றங்கரைகளில் குழலிசைக்கும் முருகேசன் அதற்குப் பின் தனக்கான குழல்களைத் தானே செய்து கொண்டான். பட்டாளத்தில் இருந்து வரும் அண்ணன் ராமன் இப்பொழுது அவனுக்காக வெவ்வேறு ரகக் குழல்களை வரும்போது வாங்கி வருபவனாக ஆகிவிட்டான்.
இந்த ஒட்டுமொத்த கதையில் எனக்கும் ஊராருக்கும் புரியாத விசித்திரம் ஒன்று உண்டு. முருகேசனின் மாமன் மகளும் பொழியனின் அம்மாவுமாகிய லதா ஏன் இப்படியான முருகேசனை தானாக மனம் உவந்து திருமணம் செய்துகொண்டாள் என்பது.
என்னிடம் கதை சொன்ன அனைவரும் முருகேசன் மேல் எந்த ஆர்வமும் மரியாதையுமின்றித் தான் இது அனைத்தையும் சொன்னர்கள். ஆனால் எனக்கு முருகேசனிடம் ஏதோ அதீதத் தன்மை இருப்பது புலப்பட்டு விட்டது. ஆனாலும் ஓவிய சார் சொல்லும் அளவுக்கு ஒரு புஸ்தகத்தில் வரும் அளவுக்கு கோட்டுசூட்டு அணிந்த வெள்ளைக்கார வின்சென்ட் வான்கா அளவிற்கா நம் ஊர் முருகேசன் என்பது தெரியவில்லை. ஓவிய சாரிடமே கேட்டு விட வேண்டியதுதான் என்று தக்க சமயத்திற்காகக் காத்திருந்தேன்.
3
ஓவிய சாரின் வீடு எங்கள் தெருவின் இறுதி மூலையில் இருந்தது. சாரின் பெயர் கிட்னன். எல்லோரும் கிட்னா என்று அழைப்பார்கள். அவர் மனைவிதான் ஊரிலேயே அதிக மாடு வைத்திருப்பது. காடு கரைகளுக்கெல்லாம் சென்று மேய்ப்பதில்தான் அந்த அத்தையின் நேரமெல்லாம் செலவானது. ஓவிய சார் எங்கள் வயலில் வந்து புல் அறுப்பதைக் கூட நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நிலபலங்கள் கிடையாது. மாடும் பள்ளியோடத்து வருமானமும் தான். நாலாம் கிளாசில் தான் எங்களுக்கு ஓவிய வகுப்பு. அது வரை அவரை மாமா என்று அழைத்துக் கொண்டிருந்தேன். அதன்பின் சங்கடம் இருந்தாலும் சார் என்றே அழைக்கிறேன்.
எங்கள் வீட்டு மாடு கறவை இல்லை ஆகையால் நாங்கள் அவர் வீட்டில்தான் பால் வாங்குகிறோம். நானும் அவரிடம் ஒரு வாரமாக முருகேசைப் பற்றி, அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியதுவம் என்பது பற்றி கேட்டு விடலாம் என்று பார்த்தால் அவரை ஆளையே காணோம். அத்தையிடம் எங்கே என்று கேட்டால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்கிறாள்.
நான் பால் ரோடாவோடு அவர் வீட்டுக்குள் சென்றபோதே உள் திண்ணையில் அவர் வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டேன்.
உள்னுழைந்து எடுத்ததுமே “ஓவிய சார் ஒரு சந்தேகம்” என்றேன்.
“ஆஹ” என்ற கனைத்து சொல்லும்படி சைகை செய்தார்.
“இல்லிங் சார் நீங்க புல்லாங்குழல் முருகேச பாராட்டுரியோ. அந்த வின்சென்ட் வான்கா அளவுக்கு சொல்ரியோ. ஆனா ஊருல எல்லாரும் அவர கிறுக்குன்னு சொல்லராங்களே, அதான் ஏன்”
முழு வெற்றிலை சாறையும் நீட்டி துப்பிவிட்டு “மருமவளே நல்ல கேள்வி போ. பையன் இருந்தா பொன்னு கேப்பன். ஆனா இல்ல. இருந்தாலும் ஒன்னுமில்லாத எங்களுக்கு உங்க அப்பன் கொடுப்பானா”
“அதெல்லாம் கொடுப்பாரு. நீங்க சட்டுன்னு சொல்லுங்க சார். பால் வராட்டி அம்மா இங்க வந்துருவா”
சொம்பெடுத்து வாய் கொப்பளித்து நீர் அருந்திவிட்டு விட்டு அவர் சொல்லத் துவங்கினார்.
“நானே அந்த முருகேசன் பையல அப்புடிதான் ரொம்ப நாள் நெனச்சுருந்தன். ஏதோ சின்ன புள்ளியோ பூவரசன் எலையில பீப்பி ஊதுராப்புல குழல புடிச்சு ஊதிக்கிட்டு கெடக்குறான்னு. அவன் சரியா ஊதுனாலும் நம்ம காதுக்கு சரி தப்பு தெரியுமானு எனக்கு அன்னிக்கு யோசன வல்ல”
“அன்னிக்கு ஆத்துல அழுக்கு தேச்சு குளிச்சுட்டு இருக்கன். இந்த முருகேச பய அங்குன பாலகட்டையில உக்காந்து ஊதிட்டு இருக்கான். மனுசன் கேக்குறதுக்காக ஊதுரவன் இல்ல அவன். ஊதனுங்குறதுக்காக ஊதறவன். நான் அத கேட்டேனோ கேக்கலியோ நான் பாட்டுக்கு குளிச்சிட்டு இருக்கன். சட்டுன்னு திரும்பிப்பாத்தா. அம்மாபேட்டைல இருந்து வடுவூர் போற தெசையில ஐஞ்சு வில்லு வண்டி பாலகட்டைல இருந்து நாளு தப்புடி தள்ளிபோய் நின்னுட்டிருக்கு. என்னாடானு பாத்தா ஒரு ஆளு வெள்ளையும் சொல்லையும்மா பாலகட்டையில அவன நெருக்கி உக்காந்துட்டு இருக்கார். பட்டுவேட்டி பட்டுசட்ட. இவனோ பண்டாரங் கணக்கா மொளங்காலுக்கு மேல ஏறுன அழுக்கு வேட்டி. தோள்ல சட்டையோ துண்டோ ஒன்னும் மில்ல. மொகத்துளையும் தலையிளையும் சிக்கு புடிச்சு பூஞ்சிமாதிரி மயிறு. ஆனா அவன் உக்காந்து வாசிக்கிறான். அவரோ உக்காந்து கேட்டுட்டு இருக்காரு”
“நான் தொவட்டாம துண்டோட கரையேரி வேட்டிய போத்திக்கிட்டு பால கட்டைக்கு ஓடுரன். போய் பாத்தா அவங்க ரெண்டாளையும் சுத்தி மழிச்ச மொகமும் பொட்டுமா ஆட்கள் நிக்கிறாங்க. வில் வண்டில முழுக்க வாத்திய சாமான்கள். ஒரு வில் வண்டிக்குள்ள வெள்ளைல உற போட்ட மெத்தையே கெடக்கு. அது அந்த பெரிய வரோடதுன்னு தெரிஞ்சுகிட்டன். அவரோ காதுல கடுக்கனும் பட்டு வேட்டியுமா நுனி பல்லுல பாக்கு மென்னுட்டு இருக்காரு. ஒரு சமையும் பாக்க சின்ன புள்ளையாவும் மறுசமையும் பெரிய ஆளாவும் தெரிறாரு. யாரோ சொம்புல எதையோ நீட்ரான். அவர் கை நீட்டி மறுக்குறாரு. நானும் எதோ தஞ்சாவூர் மன்னார்குடி போயிருக்கறதுனால பெரிய சங்கீத வித்வான்னு கண்டுகிட்டன். ஆளு அய்யரோ அய்யங்காரோ. நாம என்னத்த கண்டோம். ஆனா கட்டாயம் அய்யர் தான்”
“அப்பரம் உன்னிப்பா பாத்தப்பதான் தெரிஞ்சுது. அவர் பாக்கு மெல்லல முருகேசன் ஊதிட்டு இருக்கறத அவர் வாயில மொனவி பாக்குறாரு. கசியிறாப்ல சன்னமா சத்தம் அவர் வாய்ல இருந்து திக்கிதிக்கி வருது. அவரால முடியல. மீண்டும் மீண்டும் பண்ணிபாத்தாலும் முடியல. முருகேசன் அவருகூட விளையாடி கேளி பண்றானோனு எனக்கு வேற பயம். எங்க அவரோ பெரிய வித்வான் சட்டுன்னு கோவ பட்டுட்டார்ன்னா. முருகேசன் மாத்தி மாத்தி ஊத, அத அவர் வேற மொழி வார்த்தைகள் சொல்லி கூட இருக்க ஆட்கள்ட்ட பாத்தியா பாத்தியாங்குறார். ஏதோ தஞ்சாவூர் மன்னார்குடி போனதுனால அவர் சொல்றது ராகங்கள்ன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. இதே என் எடத்துல வேற நம்மூர் ஆளுங்கனாக்க கதையையே கெடுத்துருப்பான்”
“சட்டுன்னு கட்டைல இருந்து எழுந்த அந்த வித்வான். ‘இது மேல கேட்டன்னாக்க இனி என்னால வாய் தொறந்து பாட முடியாது ங்குறன்’ ன்னு என்ன பாத்து சொல்லிட்டு சட்டுன்னு முருகேசன் காலதொட்டு கும்புட்டுடாரு. உன்னுட்ட சொல்றதுல என்ன எனக்கு துண்டோட மூத்துரம் ரெண்டு சொட்டு விளுந்துட்டு. அவரே பெரிய வித்வான், கால்ல விழுவுறாரு, இந்த முருகேசன் பெய வாயில வச்ச ஊதல எடுத்தாம வாசிச்சுட்டு இருக்கான். டேய் என்னடா தாயளின்னு ஒன்னு போடலாம்ன்னு நெனச்சன். அதுக்குள்ள அந்த வித்வான் கழுத்துல கெடந்த ரெண்டு கொத்து சங்கலிய கெழட்டி, என் கைல குடுத்து ‘’அவர் குடும்பத்துக்கு இது இந்த எளியவனோட காணிக்கை’’ அப்புடின்னு சொல்லி குடுத்துட்டு விருட்டுன்னு வண்டியேரி போய்ட்டார். மழ வழியிர தென்ன மாதிரி அவர் கன்னத்துல கண்ணீர் வழியுது”
“அம்மாடி, இவ்வளவு நடந்து அதுவரைக்கும் கூட எனக்கு அந்த பய முருகேசு மதிப்பு தெரியலடி. அத்தன கணம் கணக்குற சங்கலிய அவரு குடுத்துருக்றாருனு தெரிஞ்சப்பதாண்டி எனக்கு புரிஞ்சு வந்துச்சு. அதுக்கு அப்பரம் தான் டீ நான் அழுதன். இந்தா இருக்கு பார். குடுத்து அஞ்சு வருசம் ஆகுது. வெத்தல செல்லத்துல்லையே வச்சுருக்கன். உங்க அப்பன் நெலம் எல்லாத்தையும் வித்தாலும் இதுமாரி ஒன்னு வாங்கவாய்க்காது. இது இருக்கது என் பொண்டாட்டிக்கு கூட தெரியாது. பொழியவன் ஆளான ஒடனெ அவன் கைல கொடுத்தறனும். என்னக்கு எதாவதுனா இன்ன மாரி பண்ணுங்கனு சொல்லி ஊருல நம்பிக்கையான ஆளு ஒன்னு ரெண்டுட்ட மட்டும் சொல்லி சத்தியம் வாங்கியிருக்கன். அவ அம்மாட்ட குடுக்கலாம் நல்லவ பட்டவ. ஆனா அந்த பய படிப்புக்கு இது உதவுனும் எனக்கு ஒரு ஆச. அதான் இன்னும் வச்சுட்டு குந்தியிதுக்கன்.”
சற்று நேர மௌனத்துக்கு பின் ஓவிய சார் “நீ அடுத்த கெடுத்தம் முருகேசன பாத்தா அவன் காத நல்லா பாரு. ஒரு செவப்பு கல்லு கடுக்கன் இருக்கும். அது அந்த வித்வான் போட்டு விட்டது. ரெண்டு காதுலையும் போட்டு விட்டாரு. இப்ப ஒன்னுல மட்டும்தான் கெடக்கு. இந்த பெய ஒன்ன எங்கியோ தொலச்சுபுட்டான். வைரமோ வைடுரியமோ நமக்கு என்ன தெரியும்”
எனக்கு அழுகையாக வந்தது. பாலை வாங்கி கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.
அடுத்த முறை நான் புல்லாங்குழல் முருகேசை பார்த்தது எங்கள் வயல் வரப்பில். அவர் குழல் வாசித்துக் கொண்டிருந்தார். நான் அவரை “வின்சென்ட் வான்கா” என்று அழைத்தேன். அவர் வாசிப்பதை நிறுத்திவிட்டு “ஹே” என்று கேட்டார். நான் ‘’ஒன்னுமில்ல நீங்க பெரிய ஆளுன்னு சொன்னேன்” என்றேன். அவர் ‘’ஹே’’ என்று விட்டு மீண்டும் குழல் ஊதப் போனார். நான் என் கைகள் இரண்டையும் விரித்து என் அப்பா அடிக்கடி செல்வது போல் “இந்த லோகத்துலேயே’’ என்று சொல்லிவிட்டு ஓடி வந்து விட்டேன்.
4
இதை இன்று நினைத்துப் பார்க்கும் பொழுதும் அன்று போல் தொண்டையை அடைக்கும் படி அழுகை வருகிறது. இன்று நான் பிள்ளை பெத்து பேரன் பேத்தி எடுத்தாகிவிட்டது. முழுவதும் தலை நரைத்து, முன் வரிசையில் இரண்டு பற்கள் இல்லாமல், கீழ் வரிசையில் பற்கள் ஆட்டம் கண்டு இருக்கிறேன்.
அதற்கு பின் ஐந்தாம் வகுப்புக்கு மேல் நான் படிக்கவில்லை. வெவ்வேறு காரணங்கள். எங்கள் ஊர் அம்மாபேட்டைக்கும் வடுவூருக்கும் மையத்தில் இருந்தது. ஐந்தாவதுக்கு மேல் படிப்பதற்கான மேல் நிலைப் பள்ளிகள் அங்குதான் இருந்தது. இரண்டு பக்கங்களும் ஐந்து மையில்களுக்கு மேல். என் அண்ணன்கள் படித்தார்கள். அவர்களிடம் சைக்கிள் இருந்தது. இந்த காலத்தைப் போல் அப்பொழுது பஸ்கள் இல்லை. பெண்கள் மேலே படிக்கும் வழக்கமும் இல்லை. அண்ணன்கள் அதன் பின் சிதம்பரத்துக்கும் மெட்ராசுக்கும் கல்லூரி படிப்புக்குச் சென்றார்கள். நான் வீட்டைப் பார்த்துகொண்டேன். படிக்காததற்க்கு முக்கிய காரணம் ஐந்தாம் வகுப்புக் கோடை விடுமுறையில் தேர்வுமுடிவு வரும் முன்பே அப்பா இறந்துவிட்டார். எல்லாம் மாறிப் போய் விட்டது. ஆனால் அப்பா தான் என் தெய்வம். இன்று வரை என் சுகதுக்கங்களை அவரே சுமக்கிறார். நானும் அவர் மேல் தான் அனைத்தையும் போடுகிறேன்.
நான் என் தாய் மாமாவை தான் திருமணம் செய்துகொண்டேன். அவர் என் அம்மாவின் மூன்றாவது தம்பி. நான் செய்துகொண்டேன் என்பதைவிட அவர் என்னை செய்துகொண்டார். நான் இந்த ஊருக்கு இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தபோது இருந்த நிலத்தை விட இப்பொழுது இரண்டு மடங்கு ஆக்கியிருக்கிறேன். ஒரு போர் போட்டிருக்கிறேன். இரண்டு பையன்கள் ஓரு பெண். பொண்னை நல்ல எடத்தில் கட்டி குடுத்திருக்கிறேன். அப்பாவின் அருள். பையன்கள் பெருசாக படிக்கவில்லை, விவசாயம் தான். ஆனால் பேரன்பேத்திகள் நான் பார்க்காத நகரங்களில் கல்லூரி படிக்கிறார்கள். பையன்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அது நடக்கவில்லை. திருமணம் செய்து கொண்டது மாமனை, ஒரே ரத்தம் என்பதனால் படிப்பேறவில்லை என்று எனக்கு ஆறுதல் சொல்லபட்டது. எனக்கே முருகேசன் போல் என் பிள்ளைகள் யாரும் ஆகிவிடக் கூடாது என்ற பயம் இருந்தது.
என் பிறந்த ஊர் சனங்கள் யாரை எந்த நல்லது கெட்டதில் பார்த்தாலும் நான் முருகேசை பற்றி விசாரிப்பேன். என் உறவுமுறைகள் சொந்த பந்தங்கள் என யாரையும் கூட நான் கேட்பதில்லை. அப்படி இருந்ததால் முருகேசன் இறந்தது எனக்கு முதல் ஆளாக தெரியபடுத்த பட்டது. மூத்தவனுடன் கார் பிடித்துக் கொண்டு மாலை கட்டிக்கொண்டு சேதி வந்ததுமே சென்றுவிட்டேன். பொழியவன் ஓடி வந்து என் கைகளை பிடித்து கொண்டான். அவன் தாசில்தார். ஊருக்குள் மாடி வீடு கட்டி இருந்தான். அந்த வீட்டின் கூடத்தில் அன்று கொடுத்த வான் காவின் படமும், ஓவிய சார் முருகேசை சூரியனும் பச்சை நெல்வயல் வெளியும் இருக்கும் பின்னனியில் வரைந்திருந்த ஓவியம் இரண்டும் ஒன்றாக மாட்டப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. வித்வான் கொடுத்த சங்கிலியும் ஒற்றைக் கடுக்கனும் நகைகடைகளில் இருப்பதை போன்ற பஞ்சு கொண்ட கண்ணாடி ப்ரேமில் வைக்கப்பட்டு செவுற்றில் மாட்டபட்டிருந்தது.
என் மாடுகளையும் ஆடுகளையும் கோழியும் பார்த்து முடிக்கவே ஒரு நாள் எனக்கு முடிந்து விடுகிறது. இன்று என் பேரன் வான்காவின் ஒரு ஓவியத்தை வாசலில் வைத்து நகல் எடுத்து பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். நான் பிய்ந்த குடை ஒன்றுக்கு கோன் ஊசி வைத்து ஒட்டு போட்டு கொண்டிருக்கிறேன். அதனால்தான் என்னவோ நினைவுகள் தூண்டப்பட்டு இது மொத்ததையும் சொல்கிறேன்.
வரைந்து கொண்டிருந்த பேரனை என் அருகே அழைத்து “அது வின்சென்ட் வான் கா தானே’’ என்றேன். அவனுக்கு தூக்கி வாரி போட்டது. எனக்கு வான்கா-வை தெரியும் என்பதை அவன் எதிர்பார்திருக்கவில்லை. அதன் பின் புல்லாங்குழல் முருகேசை பற்றி சென்னேன். இன்னும் தூக்கிவாரி போட்டது. ஓவிய சார் சொல்லிக் கொடுத்ததை அவனிடம் சொன்னேன் “நீ எது ஆகனும்னு நெனைக்குறியோ அந்த பேர் உனக்கு முன்னாடி வரனும். அப்படி சொல்லி உன்ன எல்லாரும் அடையாளம் கானனும். அப்போதான் நீ அது’’
என் பெயர் ஜெயலச்சுமி. நான் பேசுவதை தொடர்ந்து ஐந்து நிமிடம் கேட்டால் என்னை யாரும் அறிவாளி ஜெயலெச்சுமி என்பார்கள். ஆனால் இப்பொழுது ஒரு அசட்டுத்தனம் செய்துவிட்டேன். பேரன் நகல் எடுத்த ஓவியம் வான்காவுடையது இல்லையாம் பால் செசானாம். பேரன் பால் செசானின் கதையை சொன்னான். எத்தனை பெயர்கள்.
*
17.6.2021