menu Menu
அஜீதன் உரை - விவாதம்
இலக்கிய உரையாடல்
By பிரதீப் Posted in அபுனைவு, கலை-இலக்கியம்-பண்பாடு on October 22, 2026 0 Comments 5 நிமிட வாசிப்பு
ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி - விவாதம்: என் கடிதம் Previous பஷீரின் புன்னகைக்கு பின்னால் Next

அஜீதன் உரை – விவாதம்

அஜிதன் ஏற்புரை | ‘மருபூமி’ சிறுகதை தொகுப்பு வெளியீடு | Ajithan speech

https://www.jeyamohan.in/195671

அஜீதனின் உரை கேட்டேன்

அவர் சொல்வதை போல கரடுதட்டி போயிருந்த மரபுக்கு எதிராக அமைந்ததுதான் நவீனத்துவம். மரபு முன்வைத்த விழுமியங்கள் நம்பிக்கைகளை நவீனத்துவம் எதிர்த்தது. மரபு மதம் சொல்லும் அல்லது அதன் இலக்கிய முகங்கள் சொல்லும் நம்பிக்கைகளில் உள்ளடங்கியவந்தான் ஒரு தனிமனிதன் என்று சொன்ன போது அதை நவீனத்துவம் இல்லை என்று சொன்னது. அதேபோல மரபு நடைமுறையில் என்னவாக இருக்கிறது என்ற வினாக்களையும் பகடிகளையும் நவீனத்துவம் முன்வைத்தது. அதை பேசுவதற்க்காக கட்சிதத்தை தன் வடிவமாக கை கொண்டது. கட்சிதம் என்பது மொழியில் மட்டுமல்ல ஒரு கதையை துவங்கி முடிப்பதில் இருக்கும் உள்ள கட்சிதமும் தான். நவீனத்துவ கதைகள் ஒரு அதிர்ச்சியை தன் இயல்பாக கொண்டிருந்தன. தன்னை மரபு அது கூறும் விழுமியங்களோடு ஒப்பிட்டு வைத்திருந்த மனிதனுக்கு அவன் உண்மையில் யார் என்பதை அவனுக்கு காட்டுவதாக அது அமைந்திருந்தது.

ஆனால் அஜீதன் சொல்வது போல நான் பின் நவீனதுவத்தை நவீனத்துவதிற்க்கு எதிராக மட்டுமே தன்னை வைத்து கொண்ட ஒன்றாக பார்க்கவில்லை.

இங்கு ஒரே சமயம் பின் நவீனத்துவம் இரண்டு வகைகளில் இயங்கியிருப்பதாக என் அவதானிப்பில் காண்கிறேன். ஒரு புரிதலுக்காக அதை இப்படி சொல்கிறேன். ஒன்று Structural Postmodernism (வடிவ பின்நவீனத்துவம்)- இது இங்கு சாரு, யுவன் போன்றவர்கள் எழுதியது. இரண்டாவது Conceptual Postmodernism (உள்ளடக்க பின் நவீனத்துவம்) – இது ஜெயமோகன், ஓரான் பாமுக் போன்றவர்கள் எழுதியது.

Structural Postmodernism: இதன் முதல் எதிர்நிலை நவீனத்துவத்தின் வடிவமும் selfம். நவீனத்துவத்தின் மரபை பற்றிய கருத்து நிலையை எதிர்பது அதன் மூன்றாம் பட்சமே. இங்கு நவீனத்துவ கதைகள் கொண்ட இறுதி அதிர்ச்சிகள் கதையின் மைய பேசுப்பொருளாக அதுவே இயல்பென்பது போல எங்கும் விரவிக் கிடக்கும். (Structural Postmodernism சார்ந்த என் வாசிப்பு மிக குறைவு – மேலே உள்ள கருத்தை ஒரு யூகமாக சொல்கிறேன்)

Conceptual Postmodernism: இது நவீனத்துவத்தின் அடிப்படை தத்துவ கட்டுமாணமான மரபு எதிர்ப்பை எதிர்த்து தன்னை அமைத்து கொண்டது. அதே போல தனிமனிதன் என்பவன் தனிமனிதன் மட்டுமே அல்ல அவன் மரபு, மதம், சமூகம், கூட்டு உளவியல், வரலாறு ஆகியவற்றுடன் இணைந்த ஒருவனாகவே தன்னை அடையாளம் காண்கிறான், அதன் நீட்சியாகவே ஆன்மீக தேடலோ சிந்தனையோ, தொடர்புப்படுத்திக் கொள்ளலோ சாத்தியம் என்பதை தன் பார்வையாக கொண்டது. ஆனால் வடிவ ரீதியாகவும் இது நவீனத்துவத்திற்க்கு எதிரான கதை கூறும் தன்மை கொண்டதுதான். சொல்ல போனால் பின் நவீனத்துவத்தின் சிறந்த எழுத்தாளர் இதை சேர்ந்தவர்கள்தான். காரணம் இவர்களே நவீனத்துவத்தின் அனைத்து கூறுகளையும் எதிர்த்து மரபின் இன்றியமையாமை சூழலில் நிலை நிறுத்தியவர்கள்.

ஓரான் பாமுக்கின் பனி, என் பெயர் சிகப்பு போன்ற நாவல்களின் பின்னணியும் இதுதான். ஒரே சமயம் மதத்தின் அடிப்படைவாதத்தையும் அதன் நடைமுறை கேடுகளையும் சுட்டிக்காட்டும் அவரின் நாவல்கள் ஆழத்தில் இருக்கும் இஸ்லாமிய இறையியலின் இயல்பை பிரதிபலிக்கின்றது. என் பெயர் சிகப்பில் அதன் அடிநாதமாக இருப்பது அந்த மதத்தின் புரணாங்களை வரையும் மரபான ஓவியக் கலையை பற்றியதே. மேல் மட்டதில் அது ஒரு கொலை மற்றும் அறம் சம்பந்தபட்ட பிரச்சனை. வடிவத்தில் அது ஒரு மடித்து ஒளித்து செல்லும் சிறந்த க்ரைம் திரில்லர் நாவல்.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம், வெண்முரசு ஆகிய நாவல்களும் அவருடைய பெரும்பான்மை இலக்கிய படைப்புகளும் இந்த வகையை சேர்ந்ததுதான். சொல்லப்போனால், விஷ்ணுபுரமும் வெண்முரசும் அஜீதன் சொல்லும் அந்த ‘trans-புறம்’ பரிச்சயம் இல்லாத முற்றிலும் புதிய work of life க்குள் சென்று எழுதிய படைப்புகள். வடிவம், தனிமனிதன், மரபு ஆகிய மூன்று நிலைகளிலும் நவீனத்துவத்துடன் விவாதித்து உருவான படைப்புகள். பெரும்பாலும் நவீனத்துவத்துக்கு எதிரான படைப்புகள் என்றபோதும், அதேசமயம் நவீனத்துவ கூறுகளையும் சில சமயங்களில் உள்ளடக்கிய படைப்புகள். விஷ்ணுபுரத்தின் பிங்கலன், வெண்முரசின் கருணன் போன்ற கதாபாத்திரங்கள் அத்தகையவை. மேலும் தனிமனிதரின் அர்பத்தனங்களை சுட்டிகாட்டும் சில இடங்களும் நவீனத்துவ உலகின் மனம் கொண்டதே, உதாரணம் அரண்மனை திருவிழா கோலம் புக அதை அலங்கரிக்கும் ஒருவன் தன் அடையாளமாக ஒரு கிறுக்கலை செய்வது அதற்க்காக உள்ளே மகிழ்ச்சியும் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சமும் கொள்வது. (இந்த நவீனத்துவ இயல்பை நான் ஒரு குறையாக சொல்லவில்லை, இந்த inclusivenessயை சுட்டிகாட்டவே இதை சொல்கிறேன்). அறம் தொகுப்பை கூட, மனிதனின் கீழ்மைகளை சுட்டிக்காட்டிய நவீனத்துக்கு எதிராக பின்நவீனத்துவம் சொன்ன கூற்று என்றுதான் நான் பார்க்கிறேன்.

ஆனால் நான் நவீனத்துவத்துக்கும் பின் நவீனத்துவத்துக்கும் மைய முரண் இயக்கம் நிகழ்வதாக பார்க்கவில்லை. மாறாக மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் நிகழ்ந்த முரண் இயக்கத்தின் Synthesis-சமன்வையமாகவே பின் நவீனத்துவத்தை (Conceptual Postmodernism) காண்கிறேன்.

மேலும் இதை இறுக்கி இப்படி புரிந்துக்கொள்ளலாம். Structural Postmodernism நவீனத்துவத்துடன் மட்டும் விவாதித்தது. ஆனால் Conceptual Postmodernism தன்னை மரபின் நவீன குரலாக பாவித்து நவீனதுவத்துடன் வாதிட்டது. ஜெயமோகனையோ ஓரான் பாமுக்கையோ பின்நவீனத்துவத்துக்கு பின்பானவர்கள் என்று பார்க்க முடியாது ஏன் என்றால் அவர்கள் உரையாடியதே நவீனத்துவர்களுடன்தான். அப்படி என்றால் உண்மையில் அவர்கள்தான் பின்நவீனத்துவ வாதிகள். Structral Postmodernist கள் பின் நவீனத்துவத்தின் ஒரு விளிம்போ பகுதியோ மட்டுமே, மாறாக அவர்களே பின்நவீனத்துவவாதிகள் என்று புரிந்துகொள்ள முடியாது.

டால்ஸ்டாயை நான் வாசித்ததில்லை. அவரின் சமகாலத்தவரான தாஸ்தேவஸ்கியை வைத்தும் இங்கே தமிழில் அவர்களின் ஒருவகை நீட்சி என ஒப்பிடத்தக்கவருமாக ஜெயகாந்தனை வைத்து அவரையும் அந்த காலகட்டதையும் அழகியலையும் புரிந்துக்கொள்கிறேன். டால்ஸ்டாய், தாஸ்தேவஸ்கி, ஜெயகாந்தன் ஆகியோறின் எழுத்தின் மையமாக இருப்பது விழுமியங்கள் (Values). அது அவர்கள் மரபில் இருந்து பெற்றுக்கொண்டது மட்டுமல்ல அவர்களில் இருந்து வெளிப்பட்ட மரபு அது. பின்நவீனத்துவ காலம் போல அவர்கள் மரபை புரிந்துக்கொள்ள முற்பட்டவர்கள் அல்ல. அந்த மானுட உயர் விழுமியங்களை அவர்கள் எழுதி முன்னிருத்தி வழியுருத்தியதன் பின் உருவான காலக்கட்டம் தான் நவீனத்துவ காலக்கட்டம். நவீனத்துவம் நடைமுறையில் மனிதனின் அவலங்களை வரலாற்று சந்தர்ப்பங்கள் அல்லாமல் எளிய சந்தர்ப்பங்களில் அவனில் இருக்கும் அவளங்களை அது சுட்டிக்காட்டியது. விழுமியங்களை உருவாக்குபவர்களே அதை கடைப்பிடிக்காமல் போனது பற்றி அது பேசியது, ராமன் சீதையை சந்தேகப்பட்டது போல. தாஸ்தேவஸ்கியே கரம்சோவ் சகோதர்களில் குழந்தைகளில் இருக்கும் குரூரத்தை அத்தனை பக்கங்கள் நிகழ்த்திக்காட்டிவிட்டுதான் இறுதியில் கிரிஸ்துவ விழுமியங்களை சொல்கிறார். இதை நான் சொல்லக் காரணம் தாஸ்தேவஸ்கியில் ஒரே சமயம் நாம் சொல்லும் மரபு நவீனத்துவம் பின்நவீனத்துவம் என எல்லா கூறுகளும் வெளிப்படுகிறதோ என நான் சந்தேகிப்பதால் தான்.

இன்று இலக்கியம் பரவலாகி கொண்டிருக்கிறது. டால்ஸ்டாய் தாஸ்தேவஸ்கி காலத்தில் இருந்தது போல வாசகபரப்பை சென்று அடைகிறது. அதுகூட இலக்கியம் உயர் விழுமியங்களையும் நோக்கி செல்ல காரணமாக இருக்கலாம். அதேபோல இலக்கியத்தில் ஒரு பேசுபொருள் பேசி பேசி சலித்தபின் புதிய இடைவெளிகளை நிறப்ப இலக்கியம் பயணபடலாம்.

நவீனத்துவ காலக்கட்டத்தில் எழுத்தாளர்கள் எழுத்தாளர்களுக்குள்ளேயே எழுதி கொண்டிருந்தார்கள். இன்னொறு எழுத்தாளர்தான் ஒரு எழுத்தாளருக்கு வாசகர், திரைப்பட ஃபெஸ்டிவல் போல. அதுவே கூட அவர்கள் ஆழம் நோக்கி சென்றதன் காரணமாக இருக்கலாம்.

சரி, அஜீதனோடு நான் முரண் படும் இடம் என்ன. அவர் போஸ்ட்மார்டன் என்று சூட்டும் ஒன்று மட்டுமே அல்ல போஸ்ட்மார்டன், Conceptual Postmodernism-ஐயும் உள்ளடக்கியதுதான் அது என்கிறேன்.

அவர் சொல்லும் Post Postmodern Era ‘sublime values’ முன்வைக்கும் ஒன்றாக இருக்கும் என்பதை பற்றி நான் இன்னும் எதுவும் சிந்திக்கவில்லை. ஆனால் அதை நான் வேறுவகையில் யோசித்திருந்தது உண்டு. இங்கு இலக்கிய சூழலில் இருக்கும் அல்லது எழுதும் எல்லோருக்கும் உண்மையாகவே ஆன்மீக தேடலும் தத்துவதேடலும் வரலாற்று தேடலும் இருக்கிறதா என்ற ஐயம் உண்டு. ஒவ்வொருவரின் வாழ்க்கை மற்றும் இயல்புக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் சிலது முக்கியமாக இருக்கிறது. என்னை நான் ஒரு தாயாக கற்பனை செய்து பார்க்கிறேன். பிரமத்தை விட எனக்கு பெரியதல்லவா என் குழந்தை. இதை பற்றி ஏன் யாரும் ஒரு நாவல் எழுதக்கூடாது. இதைதான் உரையில் அஜீதனும் சுசித்திராவிடம் சொல்கிறர் என்று நினைக்கிறேன். அண்ணன் தம்பி உறவுகள் புகழ் கடன் என ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியமாக படுகிறது ஏன் அதன் இன்றியமையாமையை பற்றி எழுதக்கூடாது. வராத தத்துவதேடலை ஏன் ஒருவர் வழிபோய் தேடி நாவல் எழுதுகிறார். பஷீர் எப்படி ஆட்டையும் மாட்டையும் பற்றி எழுதி அதில் மெய்ஞானியாக வெளிப்படுகிறார். யாருக்கு எது இயல்பாக முக்கியமாக படுகிறதோ அதன் முக்கியத்தை அவர்கள் எழுதலாம் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதை எந்த தத்துவ தேடல் கொண்ட நாவலுக்கும் நிகராக அவர் எழுதவேண்டும். அது முதன்மையான கலைப்படைப்பாகும் முனைப்பும் கலை வெற்றியும் அதில் இருக்க வேண்டும்.

இதுதான் இலக்கியம் என்று யார் சொன்னாலும் உடனே அதை நான் என்னுள்ளே மறுப்பேன். எதையும் இலக்கியமாக்க முடியும் எங்கும் நிறைந்திருப்பதுதான் அது.

ஆனால் நான் எதிர்காலம் என நினைப்பு மரபு, நவீனத்தும், பின்நவினத்தும் ஆகிய மூன்றையும் அதன் தேடல்களையும் உள்ளடக்கிய பெரும் காலகட்டம் ஒன்றையே. இதவரை இவற்றுள் நிகழந்த விவாத்தை பெரும் அளவுக்கு வெண்முரசு வென்று விவாதத்தை முடித்து அடி எடுத்து அடுத்த காலகட்டத்துக்கு வழியமைத்து வைத்திருக்கிறது. அதன் விவாதம் இல்லாமல் மைய தேடல் இனி இருக்கும் என்று நினைக்கிறேன்.

*


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up