முதலில் டெஸ்ட் கிரிக்கெட் கண்டுப்பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் விளையாடப்பட்டு ரசிக்கப்பட்டு வந்தது. அதற்க்கு பதிலாக அப்பொழுதே டி.20 கிரிக்கெட் அறிமுகமாகியிருந்தால் அது மிகவும் சளிப்புதரக்கூடிய வடிவமாக இருந்திருக்கும். ஏன் ஒரு காலக்கட்டம் காலத்தை போக்குவதையும் மற்றொரு காலக்கட்டம் விறுவிறுப்பையும் தன் இயல்பாகவும் கொண்டிருக்கிறது. முக்கியமாக, இது போன்ற வடிவங்கள் ஏன் பெரியவையில் இருந்து சின்னது நோக்கி நகர்கிறது. முதலில் டெஸ்ட் கிரிகெட்டும் அடுத்து ஒருநாள் போட்டியும் அதன் பின் இருபது ஓவர் போட்டிகளும் உருவாகுவதற்க்கு பின்னால் உள்ள காரணம் என்ன, ஏன் அவை சின்னதில் இருந்து பெரியது நோக்கி நகரவில்லை. தொழில்நுட்பம், விளையாட்டு, இலக்கியம் ஆகியவற்றில் ஏன் கண்டுப்பிடிப்புகள் பெரியவையில் இருந்து சிறியவை நோக்கி நகர்கின்றன. டெஸ்டைவிட டி.20 முதலில் கண்டுப்பிடிக்க பட்டிருப்பதற்க்கான சாத்தியம்தான் எளிமையாகப் படுகிறது. கம்ப்யூட்டரும், டீ.வியும், ரிமோட்டும், ஃபோனும் இன்மையாகி விட முடியுமா என்னும் அளவுக்கு வடிவத்திலும், டிசைனிலும் சின்னதாகிக் கொண்டே இருக்கின்றன.
நவீன இலக்கியத்திலும் நாவல், அடுத்து சிறுகதை, பின் குறுங்கதை என பெரியதிலிருந்து சிறிய வடிவங்கள் அறிமுகமாகி அந்த வடிவங்கள் வளர்வதற்கு பின்னால் ஏதேனும் காரணம் இருக்கமுடியுமா என்று யோசிப்பது குறுங்கதை என்ற வடிவத்தை புரிந்துக்கொள்ள உதவும் என்று நினைக்கிறேன். இப்படி சொல்லாம் ஒரு குழந்தை அன்னையின் உடலில் இருந்து வெளியே வரும் பொழுது சின்னதான தன் கால்களை வெளிவிடுவதுதானே முறையும் எளியதும் ஆனால் அது தலையால் வழியமைத்துக்கொண்டு வெளிவருவது ஏன். வாழ்கையின் பாதையில் நாவல் நெடுஞ்சாலை என்றால் சிறுகதைகளும் குறுங்கதைகளும் சின்ன சின்ன சாலைகள்.
இலக்கிய வடிவங்கள் உருவாவதற்க்கு பின்னால் உள்ள காரணங்கள் என எவற்றை சொல்ல முடியும். ஒன்று மரபு வடிவங்களின் நீட்சி. நாவல்கள் இதிகாச புராண காவிய வடிவங்களின் நீட்சியாகவும், சிறுகதைகள் குறுங்கதைகளை நாட்டார் கதைகள் நீதி கதைகளின் நீட்சியாகவும் பார்க்கமுடியும். அடுத்த காரணமாக ஊடகத்தை சொல்லலாம். அச்சு நூல்களின் துவக்கம் நாவலுக்கும், அச்சு இதழ்கள் சிறுகதைகளுக்கும், இணைய இதழ்கள் சமூக ஊடகங்கள் குறுங்கதைகளும் உருவாகி வர வழி அமைத்திருக்கின்றன. வாசகர்கள் அல்லது மக்கள் அந்த காலக்கட்டத்து வாழ்க்கைமுறை, வாசிக்க ஒதுக்க கூடிய நேரம், பொதுவாக நிலவும் அரசியல், சமூக, தத்துவ பிரச்சனைகள் கூட வடிவத்தில் பாதிப்பை நிகழ்த்தலாம். தனிப்பட்ட எழுத்தாளரின் தேடல் ஒரு வடிவத்துக்கு வழியமைக்கலாம்.
ஆனால் இந்த காரணங்களுடன் இனைந்து மற்றுமொரு காரணம் இருப்பதாக நினைக்கிறேன். நாவல், சிறுகதை, குறுங்கதை என்ற வரிசைக்கு காரணமாக அதுவும் இருக்கிறது என்று நினைக்கிறேன். இலக்கிய எழுத்தின் வாசிப்பின் பரிணாமத்தை மிக மிக பொதுமை படுத்தி பார்த்தால் சில அவதானிப்புகள் கிடைக்கக் கூடும். ஒன்று, ஆரம்ப கால கட்டத்தில் நாவல்கள் சுவாரஸ்யமான புதிய புறஉலகம், அதன் வாழ்க்கை முறை அதன் தரவுகள், அதில் வாழ்ந்து பார்க்கும் அனுபவம் ஒன்றுக்காக வாசிக்கப்பட்டது. சொல்லப்போனால் இதுவே படைப்புகளின் முக்கிய அழகாக பார்க்கப்பட்டு கூட வந்தது. தமிழ் நவீன இலக்கிய சூழலுக்கு பரிச்சியமில்லாத போர் பின்னணியை எழுதியதுனாலேயே பா. சிங்காரத்தின் நாவல்கள் முதன்மையான நாவல்களாக வாசகர்களாலும் விமர்சகர்களாலும் முன்வைக்கப்பட்டது. அடுத்ததுதான் கதை சற்றே முக்கியத்துவத்தை பெற்றது. கதைக்காக வாசிக்கப்பட்டபோதுதான், கதாபாத்திர வேறுபாடுகள், நாடக தருணங்கள், கதை திருப்பங்கள் முதன்மையானது. வாசகர்கள் இன்னொருவருக்கு ஒரு நாவலை அறிமுகப்படுத்திய போது “அந்த ஊரிலேயே போய் வாழ்ந்தமாரி இருந்துச்சு” என்று சொல்வதற்கு பதிலாக அந்த கதையை பற்றி சொல்லி அறிமுகங்களை நிகழ்த்துவார்கள். கதைகளில் இருந்து உட்பிரதி அடுத்து முதன்மையானது. புறசூழலில் கரைந்து போகும் எழுத்தில் இருந்து கதையை நோக்கி நகர்ந்த போதுதான் சிறுகதை அறிமுகமாகி இருக்க வேண்டும். கதையைவிட உட்பிரதி முதன்மையாக இருக்கும் வடிவமாக குறுங்கதைகளை பார்க்கலாம் என்று சுரேஷ் குமார இந்திரஜித் கதைகளை வாசிக்கும் பொழுது எனக்கு தோன்றுகிறது. இந்த குறுங்கதைகளை, பரிச்சியமான வாழ்க்கை சூழலை சேர்ந்தது என்று சொல்லலாம். ஆனால் இந்த கதை உலகம் வாசகர்களுக்கு வாழ்க்கை வழியாக பரிச்சியமானதா அல்லது இலக்கியம் வழியாக பரிச்சியமானதா என்பது உருதியாக என்னால் பதில் சொல்லிவிடமுடியாத முக்கியமான கேள்வி.
பிண்ணனி பாடகர், தாரணியின் சொற்கள், பெரியம்மை ஆகிய தொகுப்புகளை மொத்தமாக சேர்த்து பார்த்தால் 119 குறுங்கதைகள் உள்ளன. அவற்றை பொதுமை படுத்தி அவற்றின் பேசுபொருளை பார்த்தால் அவை ஆண் பெண் உறவு, கணவன் மனைவி உறவு, திருமணத்தை மீறிய உறவு, தாய் மகன், இறந்தக்காலங்களை பற்றிய கதைகள், சராசரி இந்திய உளவியலை பற்றிய கதைகள், முதுமை சம்பந்தமான கதைகள், திருமணத்தை பற்றிய கதைகள், மரணம், மரணத்துக்கு முந்தைய நினைவுகள், குற்றவுணர்வுகள், ஆன்மீகம், அரசியல், அதிகாரம், சினிமா, நடிகை நடிகர், இசை, விதவைகள் பற்றிய கதைகள், இலக்கியம் எழுத்து புத்தகம் சம்பந்தமான கதைகள், இளமையை தொலைப்பது பற்றிய கதை, நன்றிமறத்தல், பகல்கனவுகள் பற்றிய கதைகளா உள்ளன.
இவற்றை இந்த கதைகளின் உலகம் என்று சொன்னால் இதில் வெளிப்படும் சாராம்சமான குணமோ வாழ்க்கை பார்வையோ என்ன என்பது அடுத்த கேள்வியாகிறது. என் வாசிப்பில் நான் காண்பது, இந்த கதைகள் மனிதனின் செயல்பாடுகளில் உள்ள அபத்தத்தையும், அவன் வீழ்ச்சிகளையும், யாருக்கும் தெரியாது என்று அவனுடன் மட்டும் வைத்திருக்கும் ரகசிய கீழ்மைகளையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. சில இடங்களில் அருவருப்புடனும் சில இடங்களில் பகடியாகவும் அதை இக்கதைகள் சுட்டிக் காட்டி செல்கின்றன. இந்த கதைகள் அபத்தம், கீழ்மை, அர்தமின்மையை என சிலவற்றை சுட்டிக்காட்டுகிறது என்றால் அது எதை உண்மையாவும் மேன்மையாவும் அர்தமாவும் பாவித்து கொண்டு இதை செய்கிறது என்பது அடுத்த கேள்வி. அதேசமையம் பூர்வீக வீடு, பாட்டு, மாறியது நெஞ்சம், தாம்பத்தியம், மாற்றங்கள் என நேர்நிலை உண்மைகள் வெளிப்படகூடிய கதைகளையும் அவர் எழுதி இருக்கிறார்.
சினிமாவை கதைக் களமாக கொண்ட பல குறுங்கதைகளை சுரேஷ்குமார இந்திரஜித் எழுதி இருக்கிறார். வெற்றிகரமான ஹீரோ என்று ஒரு குறுங்கதை. தன்னுடன் கூட படித்து இப்பொழுது ஆந்திரத்தில் பெரிய நடிகர் ஆகிவிட்ட தன் நண்பனை சூட்டிங்கில் பார்க்க போகிறான் ஒருவன். நடிகைகளின் அந்தரங்கமான காட்சிகளில் அவரின் தொடுகைகள் அந்துமீரும் எல்லை வரை செல்லும். அன்னையாக நடிக்கும் கதாப்பாத்திரத்தை கட்டிப்பிடிக்கும் காட்சியில் கூட ஃபிரேம் இல்லாத இடத்தில் நடிகையை தொடுவார். ஆனால் தன் முகத்தில் அவர் காமத்தை காட்டமாட்டார். அதுதான் அவர் வெற்றிகரமான ஹீரோ ஆனதன் ரகசியம். முழுவதும் அத்துமீறுதல் ஆனால் முகத்தில் காமத்தை காட்டாமல் இருத்தல். அந்த வெற்றி ரசிகர்களின் வெற்றியும் அல்லவா, ரசிகர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி அந்த ஹீரோவும் இருக்கிறார். ரசிகர்கள் எதை நடிக்கிறார்களோ அதை அவரும் நடிக்கிறார்.
ஆன்மீக தேடலிலும் அதன் சூழலில் உள்ள அபதத்தை மஞ்சள் நிறச் சாமியார், மடம், வசியக் குரல், உயிர் கொடுப்பவர்கள், ஞானம்தான் எதுக்கடி போன்ற கதைகளில் பேசுகிறார். மஞ்சள் நிறச் சாமியார் என்ற கதையில் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு செல்லும் இளைஞன் அங்கு மேற்க்கு வங்காளத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனை சந்திக்கிறான். தொல தொல உடைகள் போட்டு சற்றே வித்தியாசமான அந்த வங்காள இளைஞன் தன்னை சாமியார் போன்றவன் என்று கூறி கொள்கிறான். இருபது ஆண்டுகளுக்கு பின் அந்த வேலையில் இருந்த இளைஞன் இப்பொழுது திருவண்ணாமலையில் வேலை பார்க்கிறார். சாமியார் என்று தன்னை அழைத்துக் கொண்ட இளைஞன் சவுக்கார்பேட்டையில் தொழில் செய்கிறான். லவ்கீக பாதையில் சென்றவர் கூட ஒரு ஆன்மீக ஸ்தலத்துக்கு வந்திருக்கிறார். ஆனால் ஆன்மீக பாதையில் சென்றவராக தன்னை நினைத்துகொண்டவர் தொழில்களின் சந்தடியில் இருக்கிறார். வசியக்குரல், உயிர் கொடுப்பர்கள் ஆகிய தொடர் கதைகள் இரண்டும் இப்படித்தான். தம்பி ஒருவனுக்கு பல பிரச்சனைகள். அண்ணன் மனநல மருத்துவரிடம் போகும்படி சொல்வதை கேட்காமல் அண்ணனை துணைக்கு அழைத்துக் கொண்டு ஆன்மீக தளங்களாக ஏறி இறங்குகிறான், எல்லோர் குரல்களும் ஈர்க்கிறதே ஒழிய பிரச்சனையை தீர்க்கவில்லை. இருதியில் அண்ணன் நம் தந்தை நம்மை வளர்க்கவும் ஒரு வேலை உணவுகும் நம்மை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ளவும் பட்ட கஸ்டத்தை நினைவூட்டுவான், தம்பியின் பிரச்சனை தீர்ந்துவிடும்.
புத்தகம், ஆரம்பம், அந்த சொற்கள், என் வாசகி, என்ற பெயர்களில் எழுத்தாளர், இலக்கியசூழல், தத்துவார்த்த வரிகள் ஆகியவற்வறை பற்றியும் சில குறுங்கதைகள் உள்ளன. அதில் சுபம் என்ற கதையில் எழுத்தாளர் ஒருவர் வருகிறார். வாசகர்கள் அவரிடம் எழுத வந்த காரணம் என்ன என்று கேட்கிறார்கள். அவர் அவருக்கு மட்டுமேயான தனிப்பட்ட காரணம் ஒன்றை சொல்கிறார். கூட்டத்துக்கு அது ஏதுவாக இல்லை, அவர்கள் சமூக காரணம் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அடுத்த கேள்வியாக சமூக அநீதிகளை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும் அதை சரி செய்ய என்ன செய்வீர்கள் என்று கேட்க்கிறார்கள். கவலை படுவேன், தேர்தலில் நின்று முதல்வராகி அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கொள்வேன் என்று பதில் சொல்கிறார். கூட்டம் கைதட்டி மகிழ்ந்து அதை அங்கேயே மறந்துவிடுகிறது.
ஏதுமற்ற நிராதரவான பெண்கள் ஆண்களுக்கு வசிகரமானவர்களாக ஏன் இருக்கிறார்கள் என்பதை வினா கொண்ட கதைகள் இந்த குறுங்கதைகளில் இருக்கின்றன. கணவன் அற்ற பெண்களின் வெள்ளை சேலையின் அழகை பற்றி பேசும் ‘வெள்ளை சேலை’ கதை. யார் என்றே தெரியாவதரை அப்பா என்று சிறுமி அழைக்கும் ‘சிறுமியின் வருகை’ என்ற கதை. பெண்ணின் கெஞ்சல் ஒன்றுக்காக மற்றவன் தன்னை கொல்ல கூடும் என்றாலும் அவளின் கணவனை கொல்லாமல் விடும் ரவுடியை பற்றிய ‘மகத்தான சக்தி’ என்ற கதை. திருமணம் ஆன ஒருவன் இன்னொரு பெண்னை வைத்திருக்கிறான் அவளை திருமணம் செய்துகொள்வதாக சொல்லிவிட்டு செய்துகொள்ளவில்லை. தன்னை விட்டால் எனக்கு யாருமில்லை என்று அவருக்கு தெரிந்தனால்தான் அவர் அப்படி செய்கிறார் ஆனால் எனக்கு கடல் இருக்கிறது என்று “கடல்” என்ற கதையில் கடலுக்குள் சென்று தற்கொலை செய்துகொள்கிறாள் ஒரு பெண். “இல்லாத காதல்” என்ற கதையில் தன் முன்னால் ஒரு தலை காதலியிடம் அவளுக்கு உதவி செய்ய வேண்டி இருக்கும் என்பதால், அவளை காதலித்ததே இல்லை என்று மறுக்கிறான். “அதிர்ஷ்டம்” என்ற கதையில் ஒரு அழகிய பெண்னை ஒரு ரவுடி திருமணம் செய்வதற்க்காக கடத்தி செல்கிறான், அவனிடம் இருந்து அந்த பெண்னை ஒரு ரவுடி மீட்டு வந்து அவளை திருமணம் செய்து கொள்கிறான், ஏன் ஒரு அழகிக்கு பாதுகாப்பை ஒரு ரவுடியால் மட்டும் வழங்க முடிகிறது. இப்படி தனித்த பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான உறவின் சிக்கல்களுக்கு பின்னால் ஆண் ஆணை பற்றி என்ன எண்ணி இருக்கிறான் பெண் பெண்ணை பற்றி என்ன எண்ணி இருக்கிறாள் இதில் ஏங்க யார் யாரை ஏன் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்ற விசாரனை நிகழ்கிறது.
ஆண் பெண், கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு சிக்கலை அவரின் பெரும்பான்மை கதைகள் பேசுகின்றன. தாம்பத்தியம், பிண்ணனி பாடகர், படைவீரன், இளவரசி கண்ட வாள் போர், மச்சம், ராவணன், மேஜீக், தாரிணியின் சொற்கள், மாறியது நெஞ்சம், உறவு என்பது, காதல் சைக்கோ, அணைப்பு, கறிக்குழம்பு ஆகிய கதைகள் அவறில் சிறந்ததாக படுகிறது. அதேபோல நடிகையின் தோற்றம், குதிரை, ஆசைமுகம், சவந்தர்யா-சுப்புலட்சுமி போன்ற கதைகள் பெண்ணின் அழகை ஆணும் தன் அழகை பற்றி பெண்ணும் என்ன நினைக்கிறார்கள் என்பதை விசாரிப்பதாக அமைந்துள்ளது. தெய்வத்தன்மையும் சாந்தமான முகமும் கொண்ட ஒரு பாடகியை ஏன் ஒரு ஆணால் காமத்துடன் அனுக முடியவில்லை ஆண் காமத்தை ஏன் சற்றே தவறுடன் கலந்துக் கொள்கிறான் என்ற கேள்வியை எழுப்புகிறது.
அம்மா என்ற வார்தை மேல் மனிதர்களால் எவ்வளவு அர்த்தமும் உணர்ச்சிகளும் ஏற்றப்பட்டுள்ளது. தெய்வமாக, இலக்கியம் வழியாக, திரைப்பட பாடல்காள் வழியாக அம்மா என்பது அன்பின் தியாகத்தின் சக்தியின் உருவகாமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மீன்கள் என்ற தொகுப்பில் தெளிவத்தை ஜோசப் ‘அம்மா’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில், அம்மா தியாகத்தின் உருவகமாக வருக்கிறாள். இதுவரை கைவிடாதது போலையே இறப்பிலும் அன்னை தங்களை கைவிடமாட்டாள் என்று மகன்கள் நம்பியிருக்கிறார்கள்.
சுரேஷ்குமார இந்திரஜிதும், ‘அம்மா’ என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். அதில் ஒருவனை மனைவி கொடுமைப் படுத்துவாள். மனைவி அவனை கையாளாகாதவனாக உணர செய்வாள். அவன் தந்தை இல்லாமல் தாயால் வளர்க்கப்பட்டவன். மனைவியின் கொடுமைகளை அனுபவிக்கும் தோரும் அவனுக்கு தன்னுடைய தாயின் நினைவு வந்து அவனுக்கு அழுகை வரும். ஆனால் அவனுக்கு அம்மா ஆறுதலாக நினைவுக்கு வரவில்லை. தன்னுடைய அம்மா தன்னை எப்படி நடத்தினாலோ அப்படியே தன்னுடைய மனைவியும் தன்னை நடத்துகிறாள் என்று என்ணி அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதுவே இன்னொரு எழுத்தாளரின் அம்மாவுக்கும் சுரேஷ் குமார இந்தரஜீத் எழுத்திருக்கும் அம்மாவுக்கும் உள்ள வேறுபாடு. இதில் எது அம்மா என்ற விசாரணையை வாசகர்கள்தான் நிகழ்த்த வேண்டும். இரண்டுமே உண்மையான அம்மாக்கள் தான் என்ற முடிவுக்கும் அவர்கள் வரலாம். மனிதர்கள், இயற்க்கை, கடவுள் என எதைபற்றியும் பொதுபுத்தியில் நிறுவப்படும் கருத்துகளுக்கும் யதார்த்தத்துக்கும் வேறுபாடு வரும்பொழுது அதை உடைத்து உண்மையை நிறுவ வேண்டிய அவசியம் எழுத்துக்கு ஏற்படுகிறது. ஒரு எழுத்தாளுருக்கு அன்னை முதல் சக்தியாகவும் இன்னொருவருக்கு முதல் எதிரியாகவும் இருக்க கூடும்.
ஒரு இலக்கிய உண்மையை வாசகன்
நடைமுறை உண்மையோடு அல்லது வாழ்க்கையின் அனுபவ உண்மையோடு ஒப்பிட்டு சரிபார்ப்பதிலேயே அதன் உண்மை தன்மை இருக்கிறது. அந்த விசாரணையே அவன் செய்ய வேண்டியது. அது மனிதன் மகத்தானவன் என்ற உண்மை என்றாலும் சரி. அது மனிதன் மகத்தான சள்ளிபயல் என்ற உண்மையானாலும் சரி. அல்லது இரண்டுமே உண்மை என்ற முடிவுக்கு வருவதானாலும் சரி.
மேலே, நான் அவர் அர்த்தமின்மையையும், அபதத்தையும், கீழ்மையும் சூட்டுகிறார் என்றால் எதை அர்த்தமாகவும், உண்மையாகவும், மேன்மையாகவும் கருதிக்கொண்டு இவற்றை இவ்வாரு சூட்டுகிறார் என்று கேட்டிருந்தேன். அதை அவர் “அன்புள்ளவன்” என்ற கதையில் இட்லி சுட்டு விற்கும் அம்மா ஒருத்தி எல்லோருக்கும் அம்மாவாக இருக்கும் அம்மாவாக எழுதியிருக்கிறார்.
*