ஆண் ஒன்று பெண் ஒன்று [சிறுகதை]
கடவுளின் கவிதை| பாடல் 1
கடலில் விழுந்தவனை காப்பாற்ற
கைநீட்ட விரும்புபவனே கவனமாக இரு
தன் கைகளின் பலத்திற்கு மேல்
கருணை கொண்டவன் அகங்காரன்
**
அது காத்தாயி அம்மனுக்கு திருவிழா நாள். திருவிழா என்றாள் ஊர் கூடி கோயிலை சுத்தம் செய்து, தெய்வத்தை வரவழைத்து குறைகேட்டு குறைசொல்லி, கரகம் எடுத்து, கிடாவெட்டி உண்டு மகிழும் நாள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடியில் நடப்பது. முந்தினம் மாலை முதலே ஊரின் ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தபந்தங்கள் வர துவங்கியிருந்தனர். வீட்டின் பலத்திற்கும் ஆட்களுக்கும் ஏற்ப வெட்டுவதற்க்கான ஆடுகள் ஒன்றோ இரண்டோ வீடுகளில் கட்டப்பட்டு இருந்தன. சிலர் இரண்டு குடும்பங்களாக இணைந்து ஒரு ஆட்டை வெட்டினர். சிலவீடுகளில் அறுப்பதற்க்கு கோழிகள் கவுத்து வைக்க பட்டிருந்தன.
திருமணம் நடந்த புதுவீடுகளில் மாப்பிளைகள் பிரத்தியேகமாக கவனிக்க பட்டார்கள். வாசலில் நிற்கும் புது பைக்கும் மடமடப்பு மாறாத புது கைலியுமே காட்டிக் கொடுத்தது அவர்கள் மாப்பிளைகள் என. அவர்களின் மனைவிகள் அந்த ஊர் சிறுவர்கள் சிலரை ஜோடியாக மாப்பிளைகளுக்கு சேர்த்துவிட்டனர். வெளிய தெருவுக்கு போக, கடைக்கு சிகரெட் வாங்க போக என அனைத்துக்கும் சிறுவர்களின் துணையும் வழிகாட்டுதலும் தேவைப்பட்டது. போக போக மரியாதை குறைவானாலும் அந்த சிறுவர்களை விட்டால் அவர்களுக்கு வழி இருக்கவில்லை.
சின்னையா கண்டியருக்கு இரண்டு மகள்கள். இரண்டாமவளுக்கு திருமணம் ஆகி இரு மாதங்கள் தான் இருக்கும். அவளும் மாப்பிளையும் முந்தினம் காலையே வந்திருந்தனர். மூத்தவளுக்கு திருமணம் அகி இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆண் குழந்தையும் பெண் குழந்தையும். அவள் கணவன் குழந்தைகளுடன் இன்று காலைதான் வந்திருந்தாள். இரண்டு மோட்டர்சைக்கிள் வாகனங்களும் அந்த வீட்டு வாசலின் பூவரசமரத்தடி நிழலில் நின்றன. பழைய பாணி நாட்டு ஓடு வைத்து கட்டிய வீடுதான் ஊரின் இறுதியில் இருந்தது. மூன்று தலைமுறைகள் வாழ்ந்த வீடு. அதை கடந்து வரும் ஆற்றங்கரையில் ஏறி நடந்தால் அரை மைலில் காத்தாயி அம்மன் கோயில். கரையிலேயே ஆற்றை நோக்கி ஊரின் வடக்கு திசை பார்த்திருந்தது.
ஆற்றை தாண்டிய எதிர்புரம் நீண்ட வயல் வெளி. பச்சைபிடித்த மாதம் ஆன இளம் நாத்துகள் விழிதொடும் திசைவரை நீண்டுவிரிந்து இருந்தது. இளம்காத்தடித்த நாத்துக்கள் தனித்தனியாகவும் வயல்வெளி பரப்பாகவும் அசைந்தாடியது. ஆற்றம் கரை நெடுக கொன்றை மரங்கள். மஞ்சல் பூக்களும் மீசிரு நிற தோகைகளுமாக அவை ஆற்றில் விழுந்து நீர் ஒழுங்கின் மேல் பூத்த படலமாக அசைந்து சென்றன. ஆற்றின் கரையில் நீட்சியாக இருந்த கோயிலின் வலதுபுரம் பலவைகளில் மரங்களும் கொடிகளும் முட்புரளுமான காடு. கோயில் இடதுபுரம் உடனே துவங்கும் வயல்வெளி. அதன் மையத்தில் ஆற்றிலிருந்து நீர்வரத்து கொண்ட தாமரைக் குளம். கேயிலின் மறுரை வண்டிகள் செல்லும் பாதையாக இருந்தது. ஊரில் இருந்து கோயில்க்கு வரும்கரை முள்ளும்புதர்களும் மண்டிக் காடாக கிடந்து. அந்த கரைவழியாகத்தான் மக்கள் கோயிலுக்கு வர வேண்டும், கரகம் ஊருக்குள் வரவேண்டும்.
சின்னையா வீட்டின் பின்புறம் துவங்கும் கோயிலுக்கு செல்லும் ஆற்றங்கரையில் வண்பட்டி அறுவா அன்னகூடையுடன் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக ஒரு சிறுவர் கூட்டம் இருந்தது. ஆற்றங்கரை இருந்த பூண்டுகள் அனைத்தையும் சிலர் கொத்தி பேத்து போட. அதை சிறுவர்கூட்டம் மொத்தமாக அள்ளி முட்டாக போட்டது. வேறு சிலர் அருவாளால் முள்புதர்களை வெட்டி முற்றாக அழித்தனர். சிலர் முளைத்து தோள் உயரம் வளர்ந்திருந்த நூனா மரங்கள் மற்றும் சில மரங்களை வெட்டி அதன் அடிகளை நடப்பவரின் காலில் இடராத வண்ணம் பேத்தெடுத்தனர். நெருஞ்சி முற்ளை அழிப்பதுதான் பெரும்பாடாக இருந்தது. செடிகளை செத்தி அகற்றினாலும் அவை உதிர்ந்து விழுந்து காலில் குத்தின. கதிர் அறுத்து வரும் வயல்போல, அவர்கள் கரையில் காட்டை அழித்து பாதையாக்கி கோயில் நோக்கி வந்தனர்.
மற்றொரு கூட்டம் பெரியவர்களால் ஆனது. அவர்கள் ஆற்றின் மறுகறை வழியாக சென்று முழங்கால் அளவு மட்டும் ஓடும் ஆற்றை வேட்டியை தூக்கி கடந்து கோயிலை சுத்தி சுத்தம் செய்தனர். கோயிலின் முற்றம் முழுவதும் பூண்டும் புற்களும் மண்டி இருந்தன, அவற்றை சிலர் செத்தி எடுத்தனர். கோயிலைச் சுற்றி முழுவதும் மண்டி இருந்த் புதர்கள் அழிக்கபட்டு மக்கள் சுத்திவரவும் நிற்க்கவும் ஏதுவாக ஆக்கப்பட்டது. நெருஞ்தான் அங்கும் பெரும் பிரச்சனையாக இருந்தது. வெட்டி பேத்து நடந்து மணல் மேல் வர வர அவை எங்கோ சென்று ஆழத்தில் புதைந்தன. எங்கிருந்து என தெரியாமல் சட்டென்று அவை குத்த முகங்கள் ஒரு கணம் கடுத்து பின் அடங்கி, குத்திய முள்ளை எடுத்து அந்நிலத்திலேயே தூக்கி எறிந்து மக்கள் அகன்றனர். ஏனோ கொண்டு போடவில்லை. மண்ல்களுக்கு அடுத்து மண்னில் நெருஞ்சிகள் அதிகமாக இருப்பது அதன் காரணமாக இருக்கலாம். நில நிறத்தின் மேல் தாமரை நிறமும் சின்னும் பலவண்ணங்களும் பின்னி செல்லும் சிறு கோயில். வேளியெல்லம் எதுவும் இல்லை. மண்டபத்தை ஆற்றில் நீர் கொண்டு வந்து கழுவி விட்டு கொண்டிருந்தார்கள் ஆட்கள்.
சிண்ணையா கண்டியர் வயிலில் இருந்து வீட்டுக்கு வந்தபோது வாசலில் கிடந்த பைக்குளை கொண்டு பெரிய மாப்பிளை வந்துவிட்டிருந்ததை அறிந்திருந்தார். ஆனால் வாசல் படியோரம் ஒரு ஜோடி செருப்புகள் மட்டுமே கிடந்தன. தலையில் முண்டாசாக கட்டியிருந்த பச்சை துண்டை உதரி தோளில் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபோது உள்திண்ணையில் சின்ன மாப்பிள்ளை பாயும் தளவானியும் வைத்து படுத்திருந்தார் அவர் அருகே ஒரு விசிரி கிடந்தது. மதிய உணவு ஆகிவிட்டதா என்ற கேள்விக்கு பின் எங்கே பெரிய மாப்பிள்ளை என்ற கேள்வியைக் கேட்டார். அவர் வெளியே கடைக்கு போயிருப்பதாகக் கிடைத்த பதிலை அடுத்து குனிந்து நிலைக்கதவு வழியாக வீட்டுக்குள் நுழைந்தார். ஆளோடியிலும் கூடத்திலும் யாரும் இல்லை, முத்தத்தை கடந்து சமையக்கட்டு சென்றார். பெரிய மகள் காய்கறி அரிய சின்னவள் அடுப்பில் சமைக்க மனைவி அம்மி அரைத்தாள். பேச்சோசை அடங்கி மூவரும் சின்னையா நிலவுடையாரை பார்த்தனர். “எங்க ஆயி புள்ளையோ” என்று கேட்டார் பெரியவளை பார்த்து. “கொள்ள பக்கத்துல தான்ப்பா..ஆத்தங்கரையில பிள்ளையளோட சேந்து விளையாடுறாவோ” என்று கைகாட்டி விட்டாள். சின்னையா பின்கட்டு படிகள் வழியாக இறங்கி ஆற்றங்கரை நோக்கி நடந்தார்.
பேரன் சுத்தம் செய்யும் இளைஞர் கூட்டத்துக்கு உதவியாக இருக்கும் சிறுவர் கூட்டத்துடன் இணைந்து பூண்டுகளை அள்ளி குவித்து போட்டுக் கொண்டிருந்தான். பேத்தி சிறுமியர் கூட்டத்துடன் இணைந்து ஆற்றில் இருந்து நீரள்ளிக் கொண்டு வந்து மணலில் எதையோ கட்டி எழுப்பி அதன்மேல் கொன்றை மலர்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். இளையர்கள் சிறுவர்கள் சிறுமிகள் என அனைவரும் கொத்து கொத்தாக இருந்தனர். ஒன்றாக ஒடினர் ஒன்றாக அமர்ந்தனர் வேளையின் ஒவ்வொரு அலகையையும் ஒவ்வொருவர் நிறைவேற்றினர், அவர்களுக்கு ஒரு உரையாடல் இருந்த அறுக்க முடியாக காம்பொன்றில் அசையும் மலர்கள் என அவர்களை ஒரு சரடு கட்டியிருந்தது, சிறுவர் கொத்துக்கும் சிறுமி கொத்துக்கும் இளைஞர் கொத்துக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் இருந்தது. மூன்றும் தனித்தனியாகவும் மூன்றும் ஒன்றாகவும் அதே சமயம் ஒவ்வொருவரும் தனித்தவர்களாகவும் இயங்கியனர். காற்றில் தனி இலைகள் அசைந்து பின் கனுவிளைகள் அசைந்து தொடர்ந்து கிளையும் மரமும் அசைவதுபோல.
பேரன் பேத்தியின் வண்ணங்கள் மின்னும் ஆடையே அந்த ஊர் பிள்ளைகளிடமிருந்து வேறுபடுத்தி விருந்தாளிகள் என்பதை காட்டியது. சிறுமி அரக்கு நிற பட்டுபாவாடை சட்டையை அணிந்து இரட்டை குடுமி போட்டிருந்தாள், அதில் ஒன்றில் கிளிப்பி வைத்து குத்திய சிறு மல்லி சரம் ஒன்று விளையாட்டுக்கு முன்முகத்துக்கும் பின் தலைக்கும் வந்து வந்து சென்றாடியாது. சிறுமியின் அண்ணன் நீல நிற டீ சர்ட்டும் சந்தன நிற அரைக்கால் சட்டையும் வார்வைத்து ஒட்டும் செருப்பும் அணிந்திருந்தான். சின்னையா நிலவுடையார் கரையில் ஏறிவருவதை பேத்தி முதலிலேயே பார்த்துவிட்டாள் பின்னால் திரும்பி தன் அண்ணனிடம் “தாத்தா டா” என சொல்லிக்கொண்டு கையில் உள்ள மண்ணை உதரி பின்பக்க பாவாடை மண்ணை துடைத்தபடி தாத்தாவை நோக்கி ஓடி வந்தாள். ஒடிவந்தவளை குனிந்து தூக்கிக்கொண்டார் சின்னையா. அதை தொடர்ந்து பேரன் வந்து அவரை அணைத்துக் கொண்டான்.
“வாங்க கடைக்கு போவம்” என இடுப்பில் இருந்தவளை தூக்கி தலைக்குமேல் காவடி போல் வைத்துக் கொண்டு கரையிரங்கி நடந்தார் . சிறுமியின் கால்கள் இரண்டும் அவரின் இரு நெஞ்சுகளில் கிடந்தாடியது, எதுவும் பேசுவது என்றால் மேலிருந்து கிழே தாத்தாவின் முகம் நோக்கி பேசினாள். பேரன் அவர் காலை ஒட்டி உரசி தொடர்ந்து நடந்தான். மேல் இருக்கும் பேத்தியை ஒரு கையாளும் கிழே உள்ள பேரனை மறுகையாளும் பிடித்தபடி நடந்தார் சின்னையா. அடுத்த அடுத்த மூன்று தெருக்களை கடந்து ஊரைச் சுற்றி மையத்தில் இருந்து கடையில் கொண்டு பேத்தியை இறக்கிவிட்டார் தாத்தா. வரும் வழியில் வீடுகள் தோரும் நிற்க்க வேண்டியிருந்து விசாரிப்பவர்களிடம் ஒரு கணம் நின்று எத்தானவது படிக்கிறார்கள் எங்கு படிக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற பதிலை சின்னையாவும் குழந்தைகளும் சொல்லவேண்டி இருந்தது. சிலர் குழந்தையை இறக்க சொல்லி கண்ணத்தை பிடித்து கிள்ளி செல்லம் கொஞ்சினார்கள். கடையில் மிட்டாய், காருவா பால்கோவா இளந்தவடை, இனிப்பு கல்லரிசி என பொட்டலம் பொட்டலமாக வாங்கினார்கள் அண்ணனும் தங்கையும், ரொட்டி பாக்கெட்டுகள் நிறைய வாங்கபட்டன, ரஸ்னா பாக்கெட்டுகள் மட்டும் விரல் விட்டு எண்ணி அங்கு விளையாடும் வேலை செய்யும் அனைவருக்காக இரண்டு கேரி பைகள் நிறைய வாங்கபட்டன.
திருப்பிகரையை அடைந்து அண்ணணும் தங்கையும் பண்டங்களையும் ரசனாவையும் நண்பர்களுக்கு கொடுத்தனர். இளைஞர்கள் அவர்களே அதை பிரித்து எடுத்து கொண்டனர். தாத்தா பெரியவர்களுக்கு கொண்டு கொடுக்கும்படி பொறுப்பை ஒரு இளைஞனிடம் கொடுத்துவிட்டு, பேரப்பிள்ளைகளிடம் பொழுது போவதற்க்குள் வீட்டுக்கு வந்துவிடுங்கள் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல தயாராக வேண்டும் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அண்ணணும் தங்கையும் தாத்தவோடு சென்றபோது அவர்களின் நண்பர் கூட்டத்தில் இல்லாத மாற்றம் ஒன்று அப்பொழுது இருந்தது. தாமைரையும் அல்லியூமாக சிறுமிகள் மாலைகள் அணிந்திருந்தனர் . அவர்களுடன் குந்தியாடிய சிறுமிகளின் தம்பிகளான கைசிறுவர்கள் சிலரும் அந்த மாலைகள அணிந்துருந்தனர். தாமரை அல்லிகளின் தண்டுகளையே துண்டாக உடைத்து பிரிந்து வரும் நாரை அறுபடாமல் இழுத்து பின் அடுத்து ஒரு துண்டு இட்டு அதை இழுத்து கோர்க்கபட்ட மாலை. வெளியில் இருந்து கயிறோ நாரோ இன்றி மலரின் தண்டை கொண்டே உருவாக்கப்படும் மாலை. கழுத்தில் அணியும் போது மலர் தரை நோக்கி கவிழ்ந்திருக்கும்.
தங்கை அண்ணிடம் அந்த மாலை வேண்டும் என்று கேட்டாள். அவன் அருகே இருந்த சிறுவர்களிடம் விசாரித்தான். கோயிலுக்கு இடதுபுரம் உள்ள வயல்களை தாண்டினால் வரும் காத்தாயி அம்மன் கோயில் குளத்தில் பறித்தாதகச் சொன்னார்கள். இப்பொழுதுதான் அங்கிருந்து வந்திருந்த சலிப்பில் நண்பர்கள் யாரும் உடன்வர மறுத்தனர். தான் பறித்துத் தருவதாகச் சொல்லி அண்ணன் முன் செல்ல தங்கை உடன் சென்றாள். கோயில் வரை நீளும் ஆற்றங்கரையில் பாதிவரை சுத்தமாக்கப்பட்டு கேற்கொண்டு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அண்ணனும் தங்கையும் அதுவரை ஒன்றாக சென்று அதன்பின் ஆற்றுக்குள் இறங்கி கடந்தனர். அண்ணன் கால்சட்டையை கழட்டி கையில் வைத்துக் கொண்டு கடந்தான். தங்கை பாவாடைமுழுவதையும் கழுத்தில் வைத்து இடுக்கி கொண்டு அவனுடன் கடந்தாள். இருவரும் ஒன்றாக மறுகரை அடைந்து மீண்டும் ஆற்றை கடந்து யோலியை அடைந்தனர். அப்பொழுதே அங்கு யாரும் பார்த்திருந்தால் அவர்களை மறைத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருப்பார்கள். வேலை செய்துகொண்டிருந்த ஆட்கள் யாரையும் காணவில்லை.
வாசலிலும் கோயிலை சுற்றியும் மெளனம். மணல் எங்கும் மக்கள் விட்டுச் சென்ற காலடித்தடம் . கதவுகளுக்கு அப்பால் கருவறையில் வலகையில் தாமரை மலரும் இடப்பக்கம் இடுப்பில் சிறு குழந்தையும் வைத்திருக்கும் காத்தாயி அம்மனின் சிலை இருந்தது. வழக்கமாக கோயிலிலேயே இருந்தும் நொண்டி மட்டும் மண்டபத்து சிமென்டு தரையில் துண்டை விரித்து படுத்திருந்தான். ஓசைகேட்டு விழித்து குழந்தைகளை அழைத்து வாணி ஊத்த குலரும் கொழியில் சின்னையா பேரப்பிள்ளைகளா என்று கேட்டான். புரிந்தும் புரியாதவர்களுமாக தலையாட்டி வைத்தனர். நொண்டி அருகே இருந்த தாம்பளத்தில் இருந்த வாழப்பழ சிப்பிலிருந்து பித்து ஆளுக்கு ஒன்றாக கொடுத்தான். அதைவாங்கி உண்டபடி திரும்பி வயல்வரப்புகள் வழியாக ஒடி குளத்தை அடைந்தனர்.
ஒளி துளைக்க முடியாமல் இலைகளால் மூடிய தாமரை குலம். இடைவெளிகளில் அல்லிகளும் தாமரைகளும். மலர் அழகா மொட்டு அழகா என்று மயங்க செய்யும் பேரெழில். நீர் துளி நலுங்காமல் இலைகளில் கால்வைத்து தத்திபரதன வெண் கொக்குகள். மொட்டுக்கு மொட்டு மலருக்கு மலர் மாறி மாறி சுற்றி சுற்றி பறந்தன தட்டான் கூட்டம். நீர் ஒரு மெளனமென புதிர் என அடியில் இருந்தது. கதிர்கள் ரேகைகளாக பொருட்களில் பட்டு கிரிச்சிட்டு மின்னும் மாலை வெயில். பிஞ்சு வெண் முகத்தில் மின்னும் நரம்புகள் போல பூக்களின் பின் புறஇதழ்களில் தட்டானின் தோகைகளில் பயிர்கள் இலைகள் என அதன் புறங்கங்களில் ஒளி ஊடுருவி மிருது நிறத்தில் மின்னி அழியா வேர்பரப்பை காட்டின. எல்லாமே ஊடுருவ முடிந்தவை என்றென்ன செய்யும் வெயில். சதுரவயல்களுக்கு மத்தியில் வட்டமாக குலம். சுற்றி எல்லாமறுங்கிலும் வெண் குஞ்சம் புத்த வெழல்கள் காற்றில் குழைந்தாடின, தூய்மை என பூத்த வெண் பூ, அனைத்துக்கும் அப்பால் வேறு உலகில் விலகி நின்றாடும் வெண் நிறம். வெழல்கள் சற்றே குலம் நோக்கி கவிழ்ந்திருந்தது. புல்பரவியதாகயிருந்தது குலத்தை சுற்றியும் இருந்த கரை. அங்கே தரை என இருந்தது ஒற்றையடி தடம் மீதி அனைத்தும் உயிர் செழித்தாடும் பெரும் கூட்டம். குலத்தை சுற்றி திரந்துயிருந்த வயல் வெளியில் இசையின் தூவாணம் போல காற்றசைக்க அங்கும் இங்கும் என விசிரி வயல்களும் வெலக்குட்டமும் அசைந்தாடும் ஒரு நடம். மையத்தில் மெளமென குலம்.
வரப்பில் இருந்து அண்ணனும் தங்கையும் கருங்கற்களால் கட்டப்பட்ட படைத்துறைக்கு வந்ததர். முழங்கால் உயரத்திற்க்கு பா வடிவில் இருந்த அந்த படித்துறை , அதன் சிறு வாசல் வழியாக உள் நுழைந்தனர் இருவரும். ஒரு சின்ன மேடை போன்ற அமைப்பு அதை தொடர்ந்து படிகள். ஐந்து படிகளில் நீர் துவங்கியது அதன் பின்னும் நீருக்குள் படிகட்டுகள் சென்று கொண்டிருந்தது. ஆட்கள் குளிக்கும் காரணத்தால் துவக்கத்தில் கொடிகளும் மலர்களும் இலைகளும் இல்லை, படிகட்டின் பக்கவாட்டிலும். படிகட்டிலிருந்து ஐந்தடி தொலைவிலேயே மலர் கூட்டம் துவங்கியது . அடர்பசும் தைலம் போல நீர். அதில் ஓயாது அதிர்ந்தாடும் நீர் அலைகள்.
அண்ணன் ஐந்து படிகளையும் ஒவ்வொன்றாக கடந்து நீர்க்குள் இருக்கும் முதல் படியில் அவன் கால் இரண்டை வைத்தான். குளத்துக்கு அப்பாலும் குளம் மறைந்து வைத்திருந்த குளுமையை அவன் கால்கள் உணர்ந்தன. நீருக்குள்ளிருந்து மின்னித் தெரியும் கால்களின் அதிசயத்தைக் கண்டு வியந்தது அவன் கண்கள். நீருக்குத் தரும் மென்வேகத்தை தந்து கால்வைத்து அடுத்த படிக்கு சென்றான். கென்டைக் கால் வரை கால் நனைந்திந்திருந்தது. அரைக் கால் சட்டையை தூக்கி கொண்டு அடுத்த படிக்குச் சென்றான். தொடைவரை நீர். பாதி நீரிலும் மீதி வானிலுமாக ஆனான். குளிர் கூடிக் கூடி வந்தது. மேடையில் நின்ற தங்கை “அண்ணா சீக்கரம் டா” என்றாள். அவன் அவளை பார்த்து “அல்லியா தாமரையா” என்றான். அவள் “தாமரை” என்கவே பக்கவாட்டில் பார்த்தான். இரண்டு பக்கவாட்டிலும் அல்லிகள் மட்டுமே அதிகமாக இருந்தது, இருந்த தாமரைகள் தொலைவில் இருந்தன. நேரகாக ஐந்தடி தொலைவில் தாமரை கும்பாக இருந்த தாமரை மொட்டொன்றை பார்த்தபடி அடுத்தடுத்த படிகளில் கால்வைத்து அதை நோக்கி நடந்தான்.
தங்கை மேடையில் இருந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். மலரை நெருங்கிய கணம் அண்ணன் முழுவதும் நீருக்குள் மூழ்கி இருந்தான் . கைகளைமட்டும் நீருக்கு மேலே தூக்கி நீரை அடித்தான். தலையை ஒரு கணம் மேல தூக்கி பார்த்து விட்டு மீண்டும் நீர்க்குள் சென்றான். “அண்ணா விளையாடதடா” இருமுறை சொல்லிப்பார்த்த தங்கை சுற்றும் முற்றும் அப்பா அம்மாவுக்கா பார்த்துவிட்டு “சொல்லிட்டே இருக்கன் விளையாடாதன்னு” என்று நீர்க்குள் பாய்ந்தாள். அவன் கைகள் தப்படித்த இடத்தில் குதித்து அவன் கைகளை பற்றி கொண்டு தூக்கினாள். அவளின் பிடியை அவன் கெட்டியாக பிடித்துக் கொண்டான். இருவரும் நீரின் அடியாலும் நோக்கி சென்று கொண்டே இருந்தனர் . தாமரையிலை ஊடறுத்து நீருக்குள் சென்ற ஒளி ரேகைகளில் வெளிச்சத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர். நீரின் குளுமை வெண்மையாகும் ஆழத்தில் மிதந்தமிழந்தனர். அண்ணன் தன் இடதுகையில் பற்றியிருந்த கொடியை கீழ் நோக்கி இழுத்தான். நீருக்கு மேல் நீட்டியிருந்த அவன் பறித்த தாமரை மொட்டு உள்ளே சென்றது. கொடியை இழுத்து இழுத்து அடிவந்த தாமரை மொட்டை பறித்தான் அவள் கையில் கொடுத்தான். தங்கை அதை பெற்றுக் கொண்டாள். மேல் மலர் சென்ற இடத்தில் நீர் குழிழ் பூத்து மறைந்தது.
சின்னையாதான் செய்தி அறிந்து முதலில் ஒடி வந்தார். படித்துரையைத் தாண்டி, கரையின் புல்பரப்பில் கிடத்தியிருந்தனர். அலரடித்து வயலுக்குள் பாய்ந்து உருண்டு சேற்றை அள்ளி அப்பிக் கொண்டார் சின்னையா. ஒன்றாக கைகோத்து ஒற்றை உடலாக மலர்மலர்ந்ததுபோல் மிதந்தனர் என அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடமும் சொன்னனர். தந்தை வந்து பார்த்து நடந்ததை உணர்ந்து கொண்ட தருணமே தன்னை வேறு ஒருவொருவராக மாற்றி கொண்டார். ஆகவேண்டியதை பார்ப்பவனாக நடைமுறைவாதியாக ஆகிக் கொண்டார். பிள்ளை இரண்டையும் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வீடு நோக்கி நடக்க துவங்கினார். உதவப் போன கூட்டத்தை உடல்மொழியால் மறுத்து அவரே தூக்கி நடக்கத் துவங்கினார். தூண்டால் வாய்பொத்தி கூட்டம் அவரை தொடர்ந்து.
அப்படி ஒன்று இருப்பதே அறியாதவராய் கோயில் முகப்பை கடந்து ஆற்றங்கரையில் நடந்தார் . முற்றிலும் சுத்தமாகப்பட்டிருந்த ஆற்றங்கரையில் நெருஞ்சிகளின் குத்தளுக்கு முகம் மாறாதவராய் நடந்தார். பாதிக்கரையை கடந்திருப்பார். பிள்ளைகளின் அம்மா தங்கை தெரு பெண்கள் என தொடர்ந்து அழுது வர, அம்மா தலைவிரி கோலமாக மாரிலும் தொடையில் அடித்துஅழுதுகொண்டு விழுந்து எழுந்து வந்தாள்.அதை பார்த்த கணம் கணவன் எதிர் திசையில் வெறிகொண்டவனாய் ஓடத் துவங்கினான். அவனை உதர்த்தி பிடிக்க தொடர்ந்தாள். திகைத்து கூட்டம் தடுப்பதற்கு குழந்தைகளை தூக்கிக்கொண்டு திமிரி அடித்து ஓடினான் அவன். குழந்தைகளை கொண்டு கோயிலின் வாசலில் கிடந்தினான். “செருக்கி வெளிய வாடி” என்றான் கருவறையைப் பார்த்து. யாரோ அதற்க்கு அவனை ஓடி தாக்கப் போக, தாக்க போனாவனை விடு என தடுத்து நிறுத்தினர் சிலர். திருப்பி “வேண்ணாடி வெளிய வாடி” “இனி எத்தன புள்ளனு யாரும் கேட்டா என்னனுடி சொல்லுவன்” என்றபோது வழக்கம்போல் ஆர்ப்பாட்டமில்லாமல் அந்த கணமே வந்து சுற்றி நின்ற பெண்களில் எழுந்தாள் அம்மன்.
கைதூக்கி சுட்டு விரல் பிடித்து கோத்து உடல் முறுக்கி சுண்டி எழுந்தாள் அம்மன். நொண்டி உடுக்கை எடுத்து முழக்கினான். சுற்றி நின்ற கூட்டம் திகைத்த விழிகளில் இருந்து நீர் வழிய துவங்கியிருந்தது. அதன் தாளத்தில் மெல்ல அடங்கி முகம் மலர்ந்து குழந்தைகளின் அப்பனை வா என்று கைகாட்டி கண்சிமிட்டி அழைத்தாள். மாடு அனையும் கன்றை போல் அவளை நோக்கிச் சென்றான் அவன். அவன் தலைகளை கோதி வருடினாள் அம்மன். குலுங்கி குலுங்கி அழத்துவங்கியவனின் காதுமடல்களில் இதழ்பட்டு ஈரம்பட சொன்னாள் ” தெய்வத்தை பெற்றவனே அழாதே, உன் மகள்தான் நான், அவளின் அண்ணன்தான் இம் மக்கள்”. சொன்ன கணமே அவனை கைகளால் விலக்கிவிட்டு அந்த குழந்தைகளின் அன்னையை அழைத்தாள். கட்டி அணைத்துக் கொண்டு அவள் காதில் சொன்னாள் “மீண்டும் பிறப்பேன் உன் வயிற்றில், ஆண்ணொன்றும் பொன்னொன்றுமாக”.
அடுத்து அவளை விலக்கிவிட்டு அந்த அந்த தந்தையாகவும் தாயாகவும் ஆக ஏங்க துவங்கியிருந்த குடத்தை நோக்கி சொன்னாள் “மக்களே முன்பொரு நாள் நெருப்பில் பாய்ந்தவளில் குழந்தையை ஒன்றை நான் காத்தேன். இன்று என் அண்ணனை காத்தேன். காப்பது என் கடன். பிறப்பதும் இறப்பதும் இருப்பதுவரை அழியாதிருக்கும் தொழில் காத்தல். உடன்வருதை விட மிக சிறந்த துணை எது”
“மக்களே, அரக்கு நிற பாவாடை அணிந்து இத்தரையில் துயிலும் அவள்தான் நான், எப்பொழுதும் என் இடுப்பில் இருக்கும் அந்த குழந்தைதான் நீல சட்டை அணிந்த அவள் அண்ணன்” “மக்களே கைகள் பிரியாது துயிலும் அக்குழந்தைகளை பாருங்கள் இது நீங்களும் நானும் இல்லயா, நான் உங்கள் தங்கை இல்லையா, நீங்கள் என் அண்ணன் இல்லையா” “உன்னையிலேயே உங்கள் ஊரில் தெய்வம் வலம்வரும் நாள் இது” “இக்குழந்தைகள் சிலை என எடுத்து செல்லுங்கள், காவெடி என கரணம் என தலைமேல் தூக்கி செல்லுங்கள், பிடித்த இடத்தில் வைத்து அங்கும் எனக்கு கோயில் எழுப்புங்கள், அக்குளம் என கோயில்கள் பூக்கட்டும் இந்த நிலத்தில்”. இறுதியாக தாத்தா என்று வாய் செல்லி அழைத்தாள். காய்ந்த சேற்றுடன் ஒதுங்கி தரையில் கிடந்தவரை யாரோ எழுப்பி நிறுத்த அனைவரும் கேட்கும்படி அம்மன் சொன்னாள் “தாத்தா பாத்தியா உன் வீட்டுக்கு பின்னாடியே வந்துட்டம் நாங்க ரெண்டு பேரும், இனிமே தெனமும் பாத்துக்களாம் நம்ம, தெனமும் எங்கள கடைக்கு அழச்சுட்டுபோ”. துண்டெடுத்து வாய்பொத்தி குலுங்கி அழ துவங்கியவரை பார்த்து புன்னகைத்துவிட்டு நாதுருத்தி மடக்கி உடல் முறுக்கி ம்ம் சொல்லி சுழன்று அமர்ந்தாள்
உடம்பில் துடையிலும் மாரிலும் ஒங்கி அறைந்து இசைத்தபடி நொண்டி பெரும்குரல் எடுத்து பாடினான்
பக்தனின் பிராத்தனை | பாடல் 1
பிஞ்சு கரங்களால் பிரபஞ்சத்தை காத்தவளே
உண்ணும் ஒவ்வொரு பருக்கையும் நீயே
மழலை சொற்களை மந்திரமாக கொண்டவளே
இரட்டை குடுமி வைத்தவளே
இளவெயில் முகத்தோளே
குலத்தை காத்தவளே
குடும்பத்து ஒளியே
ஆயிரம் முறை பூத்தவளே
நட்டாத்தில் விடாதவளே
மரணமற்ற மலரே
சிறிதாக இறந்து அழியாது வாழ்பவளே
கருணைக் கடலே காத்தாயி அம்மா
அஞ்சும் நெஞ்சங்களை
அணைத்துகொள் அன்னையே
கோர்த்த கைகள் வெல்லட்டும் இப்புவியை
விடாது இருக்கட்டும் நம் பிடி
விட்டு விலகாதிருக்கட்டும் ஒரு நொடி
அல்லி கொடி ஆயிரம் கொடியாய் தழைக்கட்டும் நம் குடி
*
24/2/2023