menu Menu
அன்றாடம் பற்றி: மூன்று கவிஞர்கள்
கவிதை-வாசிப்பு-வாழ்க்கை
By பிரதீப் Posted in அபுனைவு, கலை-இலக்கியம்-பண்பாடு on October 22, 2026 0 கருத்துகள் 3 நிமிட வாசிப்பு
வாழ்வில் தற்செயலும் லட்சியமும்: Forrest Gump Previous சேப்பியன்ஸ் -  மானுட வரலாற்றில் மகிழ்ச்சி Next

அன்றாடம் பற்றி: மூன்று கவிஞர்கள்

கடவுளே: தேவதேவன்

ஒரு புதுக்காற்று ஒன்று
அறைக்குள் சுழன்றடித்திருக்கிறது

ஊதுபத்தி பூமாலைகள் திகைக்க
தன் முதுகின் வெட்ட வெளியை காட்டியபடி
திரும்பியிருக்கிறார் காலாண்டர் தாளிலுள்ள கடவுள்

கோபமா?
சுய மறுப்பா?
காட்டும் புதுய தரிசனமா

வரண்டு இருண்டு விரைத்த முகம் ஒன்று
வந்தது நாங்கு ஆணிகள்
மற்றும் சுற்றியலுடன்

தேவதேவனின் இக்கவிதை மிகவும் பிடித்திருக்கிறது. முதல் காரணம், மனிதனின் அன்றாட தன்மையை இக்கவிதை சுட்டிகாட்டும் விதம். இரண்டாவது இதில் உள்ள நகைச்சுவை அம்சம் அல்லது கிண்டல்.

காற்று அதுவும் இதுவரையில்லாத புதுகாற்று ஒன்று வந்து அறையை சுழற்றி போட்டிருக்கிறது. அப்பொழுது அறையில் மாட்டப்பட்டிருந்த காலண்டர் தெய்வம் திரும்பிவிடுகிறது. ‘காலாண்டர் தெய்வம்’ என்ற படிமமே தெய்வம் என்ற மானுட வாழ்வில் மகத்தான பேசுப் பொருள் ஓன்றின் அன்றாட அல்லது சர்வசாதாரண அம்சம் தான். தேதி கிழிக்கும் பயன்பாட்டு பொருளே அது.

அப்படி அந்த புதுகாற்றால் திரும்பிவிட்ட காலண்டரை பார்த்து திகைக்கிறது அதில் தொங்கிக்கொண்டிருந்த ஊதுபத்தியும் பூவும். அவை ஏன் திகைக்க வேண்டும், ஏன்னென்றால் காலம் காலமாக மாறாத அன்றாட செயல்பாடு ஒன்றில் ஏற்பட்டிருக்கும் புத்தம்புது மாற்றம் ஒன்றால்தான்.

இங்கு அன்றாடம் என்பதை Monotonous என்ற ஆங்கில வார்த்தையோடு தொடர்புபடுத்தி கொள்ளலாம். என்றும் மாறாத, புதுமையே அற்ற, சோர்வும் சலிப்பும் ஊட்டகூடிய, பழகிபோய் செய்யும் பிரஞ்யை அற்று செய்யும் தினப்பாடு.

தெய்வம் திரும்பி தன் வெற்று புறமுதுகை காட்டும் இந்த நிகழ்வை பார்த்து கவிஞர் தன் கேள்விகளை எழுப்பி கொள்கிறார். அதை அர்த்தப்படுத்திகொள்ள போராடுகிறார். கோபமா? சுயமறுப்பா? அல்லது காட்டும் புதிய தரிசனமா?

அப்பொழுது வரண்டு இருண்டு விரைத்த முகத்தோடு ஒருவன் நான்கு ஆணிகள் ஒரு சுற்றியலுடன் வருகிறான். நான்கு ஆணிகள் எதற்க்கு. நான்கு திசைகளிலும் அதை இறுக்கி புதுமையே நிகழ சாத்தியம் அற்றதாக, மேலும் அன்றாட தன்மையானதாக, பயன்பாடு மட்டும் சார்ந்த ஒன்றாக அதை ஆக்கிவிட்டு செல்லபோகிறேன்.

ஒவ்வொன்றிலும் நிலைத்து விட்ட அன்றாடங்களில் தேடவேண்டிய மகத்துவங்களை சுட்டி செல்வதா இக்கவிதை. அல்லது ஒரு நிகழ்வு ஒரே சமையம் தத்துவார்த்த சிக்கலாவும் அன்றாட சிக்கலாவும் இருப்பதை பார்த்து இக்கவிதை சிரிக்கிறதா இல்லை வருந்துகிறதா.

தேவதேவனின் இக்கவிதை இயல்பாக நான் முன்பு படித்த தேவதச்சனின் கவிதை ஒன்றை நினைவு படுத்தியது.

நாள்: தேவதச்சன்

வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில்
சற்று தயங்கியபடியே ஒவ்வொரு பொருளையும்
தொடுகிறான். அலுவலகத்திற்க்கு வரும் போகும்
ஒவ்வொருவரையும் சற்று
புருவம்நெரித்து நோக்குகிறான்
தண்ணீர் குடித்துவிட்டு
ஓசையில்லாமல்
டம்ளரை மேஜையில் வைக்கிறான்
நுனி நாற்க்காலியில் அமர்ந்தபடி
கோப்புகளை திறக்கிறான்
33 வருடம் கழித்து, ஓய்வுபெறும் நாளில்
சற்று தயங்கியபடியே ஒவ்வொரு பொருளையும்
தொடுகிறன். அலுவலகத்திற்க்குள் வரும் போகும்
ஒவ்வொருவரையும் சற்று
புருவம்நெரித்து நோக்குகிறான்
தண்ணீர் குடித்துவிட்டு ஓசையில்லாமல்
டம்ளரை மேஜையில் வைக்கிறான்
நுனி நாற்காலியில் அமர்ந்தபடி
கோப்புகளை மூடுகிறான்.

நமக்கு நாமே அன்றாடம் என்று போட்டு கொண்ட திரையை விலக்கி வாழ்க்கையை பார்ப்பதற்க்கான தருணம் வாழ்தலுக்கான தருணம் வந்து கொண்டுதானிருக்கிறது. பிறந்த நாள், நெருங்கியவரின் மரணம், கல்லூரி இறுதி நாள், முதல் இரவு, குழந்தையின் முதல் ஸ்பரிச தொடுகை இப்படி. அப்பொழுது நாம் உயர்ந்த தருணங்களால் ஆனவர்களாக இருக்கிறோம். சிந்தனையிலும் உணர்விலும். ஆனால் ஒவ்வொரு நாளும் அப்படி இருக்க முடிவதில்லை. ஒவ்வொரு கணமும் அப்படி இருக்க முடிவதில்லை. நம் காலத்தை உண்றுவிட்ட அன்றாடத்தை ஒருநாள் நாமே திகைப்புடனும் ஏக்கத்துடனும் திரும்பி பார்க்கிறோம். முதல் நாளும் இறுதி நாளும் மட்டும் வாழபடும் வாழ்கை.

அதிலிருந்து குமரகுருபரனின் ஒரு கவிதை:

இதை எழுதுகிறவன்: குமரகுருபரன்

ஒரு கஜலின் உருகத்தை
நியாபகமுற ஐகஜித் சிங் இறந்து
தொலைக்க வேண்டிருக்கிறது.
ஹெர்னியா அறுவைக்கான அப்பாவின்
காத்திருப்பில் அவர் பேருந்து ஏற்றிவிட
வந்த தருணங்கள் நினைவேருகின்றன.
ஒரு நண்பனின் மரணத்தில்
ஒரு தோழியின் பிரிவில்
ஒரு குடும்பத்தின் இழப்பில்
நமது நியாபகங்கள் பிழைகின்றன.
ஒரு பக்காடி தீரும்போது
அறுகின்றன இந்த ஞாபகங்களும்
உண்மையாகவே மனிதனல்ல
இதை எழுதுகிறவன்.

மேலே உள்ள தேவதேவன் தேவதச்சன் ஆகியோரின் இரண்டு கவிதைகள் காட்டும் அன்றாடத்தை, குடியை கொண்டு கடந்து மீண்டும் ஒன்றுமற்ற அன்றாடத்துக்குள் திரும்புவது பற்றியது இக்கவிதை. மற்ற இருகவிதைகளில் கவிஞர்கள் விலகி நின்று இதை வேடிக்கை பார்பவர்களாக இருக்க. குமரகுருபரன் அதில் தன்னையே வைத்து பார்க்கும் கவிஞராக இருக்கிறார்.

இதை முதன்மையான வேறுபாடாகவும் கூட பார்க்க முடியும். இப்படி அதை யோசித்து பார்க்க ஒரு இடமிருக்கிறது. அதன் காரணம் தேவதேவனிடமும் தேவதச்சனிடமும் உள்ளது ஆன்மீகமான வாழ்க்கை மீதான விலக்கம். குமரகுருபரனின் இருப்பது வாழ்க்கை மீதான ஈடுபாடு அல்லது ஏதோ ஒருவித வாழ்க்கை இடமிருந்தான எதிர்பார்ப்பு.

‘உண்மையாகவே மனிதனல்ல இதை எழுதுகிறவன்’ என்ற கவிதையின் இறுதி வரி, அப்படி என்றால் மனிதன் என்றவன் யார், வாழ்தல் என்றால் என்ன என்ற கேள்வியை நோக்கி செலுத்துகிறது.

*


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up